வடசென்னையில் கழகக் கூட்டம்: பெண்கள் பெருமளவில் பங்கேற்பு

வட சென்னை மாவட்டக் கழகச் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க்கில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக பாடகர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவை இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது.

தொடர்ந்து முனைவர் சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகள், இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவைகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மாக் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும். நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து பேசிய முனைவர், அந்த அண்ணனுக்காகவும் தான் எங்கள் பிரச்சாரம் என்றார். அடுத்து பேசிய சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நாங்கள் கருத்து பரப்புரைக்குத்தான் வந்துள்ளோம் . நீங்கள் வன்முறையை கையாண்டால் நாங்கள் அதற்கும் தயார் என்று மேடையிலேயே பதிவு செய்தார். பின்னர் பேசிய கழக வழக்கறிஞர் துரை அருண் இன்றைய குழந்தைகளின் அறிவியல் புரிதலை தன் சொந்த அனுபவத்தி லிருந்து மேற்கோள்காட்டி பேசினார். நிறைவாக ஏசு குமார் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். தோழர்கள் அருள்தாஸ், விஜயன், ஏசு குமார், ந.பாஸ்கர்,  தட்சிணாமூர்த்தி, முனுசாமி ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சென்னை மாவட்டத் தோழர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர்.

பெரியார் முழக்கம் 17112016 இதழ்

You may also like...