ஜாதிவெறிக்குப் பலியான இமானுவேல் சேகரன்
ஜாதி ஒழிப்புக்காக களப்பலியான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் தமிழ்நாடு அரசு அவருக்கு சிலை எழுப்ப இருக்கிறது என அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்போம்.
* ராணுவத்தில் தான் வகித்த பதவியை உதறி எறிந்து விட்டு மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆதிக்க ஜாதியினர் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடியவர் இம்மானுவேல்.
* தீண்டப்படாத பட்டியலில் இருந்த பள்ளர் சமூகத்தினருக்கு ஆதிக்க ஜாதியினர் 11 அடிமைக் கட்டளைகளை திணித்திருந்தனர்.
* கிராமம் கிராமமாக மிதி வண்டிகளில் சென்று அந்த கட்டளைகளை மீறுவதற்கு அழைத்து சுயமரியாதை உணர்வை ஊட்டினார்.
* கோயில் விழாக்களில் திணிக்கப்பட்ட அடிமைச் சேவகங்களையும் தேநீர் கடைகளில் இருந்த இரட்டைக் குவளைகளையும் எதிர்த்துப் போராடினார்.
* ஆதிக்க ஜாதி எதிர்ப்பு என்ற எல்லையோடு நின்று விடாமல் ஜாதி எதிர்ப்பையும் பெண்ணுரிமையையும் பேசியவர்.
* அன்று தீண்டாமை பட்டியலில் இருந்த அருந்ததியினரையும் நாடார் சமூக மக்களையும் நட்பு சக்தியாக இணைத்துக் கொண்டவர்.
* சுய ஜாதியை எதிர்த்து அருந்ததியினருக்கு குரல் கொடுத்தவர்.
* தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைகளை உடைத்து போராட்டம் நடத்தியதோடு 1954 இல் அருப்புக்கோட்டையில் இரட்டைக் குவளை எதிர்ப்பு மாநாட்டை நடத்தியவர்.
* முத்துராமலிங்கதேவர் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சி திணித்த ஜாதி ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்காக காமராசர் தலைமையில் காங்கிரஸில் இணைந்தார்.
* ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பெரியார் குரல் கொடுத்த போது ,போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தியவர் இமானுவேல் சேகரன்.
* பார்வர்ட் பிளாக் தலைவர் முத்துராமலிங்க தேவர் நடத்திய ஜாதி ஆதிக்க அரசியலுக்கு சவாலாக வந்தார்.
* 1957-ல் நடந்த முதுகுளத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் முத்துராமலிங்கதேவரால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவி, இமானுவேல் சேகரன் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆதிக்க ஜாதியினர் கலவரத்தில் இறங்கினார்கள்.
* முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் முத்துராமலிங்க தேவருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
* சமாதான ஒப்பந்தத்தில் இமானுவேல் சேகருக்கு இணையாக தான் கையெழுத்திட முடியாது என்று முதலில் மறுத்த முத்துராமலிங்க தேவர், கடும் அழுத்தத்திற்கு பிறகு கையெழுத்திட முன்வந்தார்.
கலவரத்திற்கு இதுவே காரணம் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் பக்தவச்சலம் சமர்ப்பித்த அறிக்கை கூறியது.
* அடுத்த நாளே செப்டம்பர் 11ஆம் தேதி அன்று இமானுவேல் சேகரன் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அம்மாவீரனின் வயது 32.
* முதுகுளத்தூர் கலவரம் தமிழ்நாடு முழுதும் அரசியல் புயலை கிளப்பியது. அப்போது இமானுவேல் சேகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே.
* கலவரத்தை அடக்காவிட்டால் நானே களம் இறங்குவேன் என்று அறிவித்தார் பெரியார்.
* தொடர்ந்து 1957-ல் பெரியார் சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இந்த முதுகுளத்தூர் கலவரமே காரணமாக அமைந்தது.
* ஜாதி வெறியர்களுக்கு எதிராகவும் இம்மானுவேல் சேகரன் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தொடர்ந்து ‘விடுதலை’ செய்திகளைவெளியிட்டது.
* பேராசிரியர் சொக்கலிங்கம் மற்றும் பத்திரிக்கையாளர் தினகரன் ஆகியோர் இந்தப் போராட்டம் குறித்து எழுதிய நூல்களில் பெரியாரின் ஒரே ஆதரவுக் குரலையும் விடுதலை வெளியிட்ட ஆதரவு செய்திகளையும் ஆவணங்களாக பதிவு செய்துள்ளனர்.
* ஜாதி ஒழிப்புப் போராட்ட களத்திற்கு உணர்வூட்டிக் கொண்டிருக்கும் மாவீரன் இமானுவேல் சேகருக்கு வீரவணக்கம் செலுத்தி போராட்டத்தை முன்னெடுக்க உறுதி ஏற்போம்.
– விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு , 12.09.2025
பெரியார் முழக்கம் இதழ் 18092025
