ஆணவப் படுகொலை: முகநூல் குழப்பவாதிகளுக்கு பதில்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முதன்மைப் பணியாக நாம் கையில் எடுக்க வேண்டியது ஜாதியின் கேடுகள் குறித்தும், ஜாதி ஒழிப்பு குறித்தும் மக்களிடம் பரப்புரை செய்வதா? அல்லது ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று கோரிக்கை வைத்து விட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தாமல் ஒதுங்கிகொள்வதா? ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் வேண்டாம் என்றும் அப்படி ஒரு சட்டம் தேவையில்லை என்றும் யாரும் இங்கு சொல்லவில்லை.

ஆனால் அதே சமயம் அதைவிட முக்கியமானது ஜாதிய மனநிலையில் இருக்கும் இந்த சமூகத்தில் நேரடியாக மக்களிடம் சென்று ஜாதி என்கிற கட்டமைப்பு எந்த அளவிற்கு சமூகத்தை தனிமனிதர்களை மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது? அது சக மனிதர்களை எவ்வாறு பிளவுபடுத்தி இருக்கிறது? சக மனிதன் மீது எந்த காரணமும் இன்றி வெறுப்பை விதைத்து இருக்கிறது? சக மனிதனை தன்னைவிட கீழானவன் என்று நம்பவைத்து இருக்கிறது? என்பதை எடுத்துச் சொல்லி அந்த மனநிலையில் இருந்து அந்த மக்களை வெளியேற்றச் செய்யும்படியான பிரச்சாரங்களை செய்வதுதான். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் “ஜாதி ஒழிப்புப் பரப்புரைகளை நாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சமூகத்தினர் வாழும் பகுதிகளில்தான் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று குறிப்பிடுவார்.

அந்த வழியில்தான் திராவிடர் விடுதலைக் கழகம் தன்னுடைய பரப்புரைகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகிறது. ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், ஜாதிய வன்கொடுமைகள், ஜாதி ஆணவப் படுகொலைகள் நடக்கும் போதெல்லாம் அதற்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை கழகம் நடத்தி அதன்மூலம் ஜாதி எனும் படிநிலை அமைப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லியே வருகிறோம். இந்தப் பரப்புரைகளில் பல இடங்களில் ஜாதியவாதிகளின் எதிர்ப்பையும், ஒரு சில இடங்களில் தாக்குதல்களையும் கழகம் சந்தித்திருக்கிறது. தொடர்ந்து துணிச்சலுடன் மக்கள் மன்றத்தில் ஜாதிய வன்கொடுமை குறித்து கழகம் பேசிக்கொண்டு இருக்கிறது. இப்பொழுதும் அதற்கானப் பரப்புரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சமூக சிக்கல்களுக்கு பொது சிந்தனையில் இருக்கும் தீர்வுகளை விட தனித்த பார்வையுடன் தீர்வுகளைச் சொன்னவர் பெரியார். பிரச்சனையின் மூலத்தை கண்டறிந்து அதை தாக்குவதன் மூலம்தான் நிரந்தரத் தீர்வை அடைய முடியும் என்று அறிவியல் பார்வை உடையவர். அந்த வகையில் பெரியார் ஜாதிக்கு அடிப்படையான இந்து மதம், இந்து மதத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் அவற்றிற்கு காரணங்களை கற்பிக்கும் வேத புராணம், இதிகாசங்கள் இவற்றையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக்கிடையே தொடர் பிரச்சாரங்களின் மூலம் அம்பலப்படுத்தினார்.

பெரியார் கூறுகிறார்: “சாதிகள் ஒழியவேண்டுமென்றால், இந்துமதம் அழிக்கப்படவேண்டும். இந்துமதத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருக்கிற கடவுள்களையும், சாஸ்திர புராணங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படியில்லாமல், வருணாசிரமம் இருக்க வேண்டமென்று சொல்லிக்கொண்டு, சாதிகளும் ஒழிய வேண்டுமென்று யாராவது சொன்னால் ஒன்று அவர்கள் பித்தலாட்டக்காரர்களாக இருக்கவேண்டும் அல்லது முட்டாள்களாக இருக்கவேண்டும்”.
-விடுதலை – 30.5.1951

ஜாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் என்பது ஒரு குற்றம் நடந்த பின் குற்றவாளிக்கு வழங்கப்படும் கடும் தண்டனையை உறுதி செய்கிறது. கூடுதலாக குற்றத்திற்கு துணை நின்றவர்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிப்பதற்கு வழிவகை செய்கிறது. எனவே சட்டம் தேவையே! ஆனால் குற்றமே நடக்காத அளவிற்கு மக்கள் மனதில் மாற்றங்களை விதைப்பதற்கு நாம் மேலே சொன்ன ஜாதியைக் காப்பாற்றும் கடவுள், புராண இதிகாசங்கள், பழக்க வழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயங்களை கேள்விக்கு உள்ளாக்கும் பணியை முதன்மைப் பணியாக செய்வது இந்திய ஒன்றியத்திலேயே பெரியார் இயக்கங்கள்தான்; கருப்பு சட்டைக்காரர்கள் தான்.

திராவிடர் விடுதலைக் கழகம் இன்றுவரை தெருத்தெருவாக மக்களைச் சந்தித்து ஜாதியைக் காப்பாற்றும் அனைத்துக் கூறுகளையும் அம்பலப்படுத்தி பேசி வருகிறது. ஆணவப் படுகொலைக்கு எதிராக கழகம் கடந்த ஆண்டுகளில் செய்த பணிகளில் சிலவற்றை கீழே இணைப்பில் கொடுத்துள்ளோம்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு (26.09.2024)

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் (17.10.2024 )

சென்னையில் ஆணவப் படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்! 01.03.2024

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம் ( 02.06.2022 )

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் (08.08.2019)

கட்டுரையின் நீளம் கருதி சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்துள்ளோம்.
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக முகநூலில் ஒரு பதிவை செய்கிறார். அந்தப் பதிவை முழுமையாக படிக்காமல் அல்லது படிக்க விரும்பாமல் மேலே இருக்கும் இரண்டு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் எதிராக இருப்பதுபோல ஒரு தவறான பரப்புரையை ஒரு சிலர் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அவதூறுகளையும் வசைச் சொற்களையும் கடந்துதான் பெரியார் தன் பிரச்சார பலம், போராட்ட வலிமை ஆகியவற்றின் மூலம் மக்களை சிந்திக்க வைக்கவும், அதன்மூலம் மக்கள் மனதில் சிந்தனை மாற்றத்தையும், இந்த சமூக மாற்றத்திற்காக பல சட்டங்கள் வரவும் காரணமாக இருந்தார். பெரியாரின் அடியொற்றி பயணிக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் அதே பணியில் இதுபோன்ற வசைச் சொற்களையும் அவதூறுகளையும் கடந்து ஜாதி ஒழிந்த ஒரு சமத்துவச் சமூகத்தைப் படைக்க மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வரத் தொடர்ந்து களத்தில் மக்கள் முன்நின்று தெருவில் எங்கள் தோழர்கள் பரப்புரை செய்து கொண்டே இருப்பார்கள். பெரியார் போட்ட பாதையில் எங்கள் பயணம் தொடரும்.

பரிமளராசன்,
சமூக ஊடகப் பொறுப்பாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
04.08.25
பெரியார்முழக்கம்இதழ்07082025

You may also like...