தேடி வந்த முதல்வர் பதவியை உதறியவர் சர். பிட்டி. தியாகராயர்

ஜுனியர் விகடன்’ இதழில் ப. திருமாவேலன், சர். பிட்டி. தியாகராயர் குறித்து எழுதிய கட்டுரை.

‘திராவிடர் இயக்கத்தின் மூலவர்’ என்று திராவிட இயக்கத்தவர்களால் போற்றப்படும் தியாகராயர் எப்படிப்பட்டவர் தெரியுமா? எப்படி நடந்து கொண்டார் தெரியுமா? இரட்டையாட்சி முறைப்படி 1920இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றி நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தபோது அந்தக் கட்சியின் தலைவர் தியாகராயர்.

ஆட்சியின் தலைவராக தியாகராயரே பதவியேற்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். இன்றைக்கு முதலமைச்சர் என்கிறோம் அல்லவா? அந்தப் பதவிக்கு அன்றைய பெயர் ‘பிரிமியர்’. அதாவது சென்னை ராஜதானியின் முதல் ‘பிரிமியராக’ தியாகராயர்தான் பதவியேற்றிருக்க வேண்டும்.

அன்றைக்கு கவர்னராக இருந்த வெல்லிங்டன், நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயரிடம் அமைச்சரவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். ‘எனது கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால், நான் அதன் தலைமைப் பொறுப்பில் உட்கார மாட்டேன்’ என்று கவர்னர் வெல்லிங்டனுக்கு கடிதம் அனுப்பினார் தியாகராயர். ‘இங்கிலாந்தில் கட்சித் தலைவராக இருப்பவர், ஆட்சித் தலைவராக இருக்க மாட்டார் அல்லவா?’ என்று வெல்லிங்கடனுக்கே ஞாபகப் படுத்தினார்.

அப்போது தியாகராயருக்கு வயது ஒன்றும் அதிகம் இல்லை. 67-தான். “நிறைய பொறுப்புகளைக் கவனிக்க முடியாது என்றால் யாரையாவது பிரிமியர் ஆக்கிவிட்டு நீங்கள் அமைச்சராக இருந்து கொள்ளுங்களேன்” என்று மாற்று யோசனையையும் சொன்னார் வெல்லிங்டன். அதற்கும் சம்மதிக்கவில்லை தியாகராயர்.

 

அடுத்த இடைஞ்சல் குடும்பத்துக் குள் இருந்துதானே வரும்? தியாக ராயரின் அண்ணன், தனது தம்பியை எப்படியாவது பிரிமியர் பொறுப்பை ஏற்க வைத்துவிட வேண்டும் என்று பெரிய அளவில் முயற்சிகள் எடுத்தார், வற்புறுத்தினார். தம்பி சம்மதிக்காத தால் கட்டளையும் போட்டார். ஹூம், தம்பி சம்மதிக்கவே இல்லை. அண்ணனின் தொல்லைப் பொறுக்காமல் சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தை எடுத்து, மூன்று நாட்கள் சாப்பிடாமலேயே உண்ணாவிரதம் இருந்தார் தியாகராயர். இறுதியில் தம்பியை வலியுறுத்த முடியாமல் பின் வாங்கினார் அண்ணன். கவர்னரின் கட்டளை, குடும்ப நெருக்கடி எதுவும் தியாகராயரின் உறுதியை அசைக்க முடியவில்லை.

தியாகராயர் ஆரம்பித்த கட்சி இது. அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களே தேர்தலில் நின்றார்கள். வென்றும் வந்தார்கள். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும், ஏன் மரணிக்கும் வரைகூட பிரிமியராக இருந்திருக்கலாம் தியாகராயர். ஆனால் கொள்கை உள்ளம் கொண்ட மனிதனின் மனதில் பதவி நாற்காலியிட்டு அமர இடம் இருப்பது இல்லை என்பதை உணர்த்தி விட்டுப் போய்விட்டார் தியாகராயர்.

பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் தியாகராயர். நெசவு ஆலையும் தோல் பதனிடும் தொழிற்சாலையும் அவருக்கு முன்பே அவரது குடும்பத்திடம் இருந்தது. சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் பெரும்பாலான இடங்கள் இவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இந்த இடங்களைப் பார்க்க தினமும் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் போவார். இராயபுரத்தில் உள்ள மணியக்காரர் சத்திரத்தைத் தனது சொந்த செலவில் பராமரித்து ஏழைகளுக்கு உணவளித்தவர்.

வடசென்னை இந்து செகண்டரி பள்ளி இவர்கள் தொடங்கியது. பெரும்பாலும் இலவசப் பள்ளியாகவே இது செயல்பட்டது. அதுதான் பிற்காலத்தில் சர். தியாகராயர் கல்லூரியாக வளர்ந்து இன்றும் செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் படிக்கட்டுகளைக் கட்டுவதற்கு உதவி செய்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஏராளமான பொருளுதவி செய்தவர்.

காந்தி சொன்ன தர்மகர்த்தா முறைக்கு உயிருள்ள உதாரணமாக வாழ்ந்தவர் தியாகராயர். அதனால்தான் காந்தி தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு நெசவுப் பயிற்சி அளிக்க மதன்லாலையும், மணிலாலையும் சென்னைக்கு அனுப்பி தியாகராயரிடம் பயிற்சி பெற வைத்தார். “நீங்கள் எனது இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா?” என்று காந்தியே தியாகராயரிடம் வீடு தேடி வந்து கேட்டார்.

ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனது போராட்டத்தின்போது தியாகராயரையும் அவரது வீட்டையும் தாக்கினாாகள். இவரது ஆதரவாளர்கள் எதிர் தாக்குதல் நடத்த நினைத்துக் கிளம்பியபோது, “பழி வாங்கும் மனப்பான்மை உடையவர்களுக்கு எனது கட்சியில் இடமில்லை. இத்தகைய மனப்போக்குடன் இருப்பவர்கள் கட்சியைவிட்டே வெளியேறலாம்” என்று பகிரங்கமாக அறிவித்தார் தியாகராயர்.

சர். சி.பி. ராமசாமி அய்யரும், தியாகராயரும் எதிரெதிர் கொள்கை கொண்டவர்கள். சட்டசபையில் சரிக்குச் சரி நிற்பார்கள். ஆனால், வெளியில் வரும்போது சிரித்துப் பேசியபடி வருவார்கள். தியாகராயர் இறந்தபோது, “வீரம் மிக்க போராளி, நம்பத் தகுந்த நண்பர்” என்று சர். சி.பி. ராமசாமி அய்யர் பாராட்டினார். சட்டசபையில் தியாகராயர் உட்கார்ந்திருக்கும் போது அவருக்கு முன்பாகவே, “உங்கள் கட்சிக்கு சங்கு ஊதி சாவுமணி அடிப்பேன்” என்று சத்தியமூர்த்தி கர்ஜித்தார். தியாகராயர் முகத்தில் சிரிப்பைத் தவிர, கடுப்பு ஏற்படவே இல்லை. இப்படி ஒரு காட்சியை இன்று யோசிக்க முடியுமா? சாவு மணி யாருக்கு வரும் என்று சொல்லத் தேவையில்லை.

எட்டாம் எட்வர்டு மன்னர் சென்னை துறைமுகத்துக்கு வந்து இறங்கியபோது சென்னை நகராட்சித் தலைவராக இருந்தார் தியாகராயர்.

மன்னரை வரவேற்க உயர்ந்த ஆடை அணிந்து வரவேண்டும் என்றார்கள். “என்னுடைய வழக்கமான (வெள்ளை) உடையில்தான் வருவேன்” என்று தியாகராயர் உறுதியாக இருந்து விட்டார். இறுதியில் அவரது உறுதியே வென்றது.

இன்று இராஜாஜி அரங்கமாக இருக்கும் இடம் முன்பு, கவர்னர்களின் விருந்து மாளிகை. அங்கு நடந்த விருந்துக்கு தனது வழக்கமான உடையில் போனார். காவலர்கள் இவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இவர் திரும்பி விட்டார். பின்னர் கவர்னருக்கு இந்தத் தகவல் சென்றது. ‘இந்தியர்கள் இனி தங்களது வழக்கமான உடையிலேயே வரலாம்’ என்று அதன் பிறகுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓர் இளைஞன், தியாகராயரைப் பார்த்து கேள்வி கேட்டான். அவனை நோக்கி தியாகராயர் நகர்ந்து போனார். அவன் பயந்து போய் பின்னேயே நகர்ந்துகொண்டே போனான். “ஏன் பின்னே ஓடுகிறாய்? உன்னைப் பின்னுக்கு இழுப்பது எது? இரத்தத்தில் அச்சம் இருக்கிறது. வாயில் மட்டுமே, வீரம் இருக்கிறது. அச்சத்தை விடு முதலில்!” என்றார் தியாகராயர். அதுதான் தியாகராயர். திரும்பிய பக்கம் எல்லாம் தியாகராயர்கள் எழுக!

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply