வாழ்த்துவோம்! வரவேற்போம்! பிப்.14 உலக காதலர் நாள்

பழந்தமிழர் பண்பாடு காதலைப் போற்றுகிறது; தமிழ் இலக்கியங்கள் காதலைப் பேசுகின்றன; இப்போது காதலுக்கு ஏன் தடை கற்கள்?
பழந்தமிழகத்தில் –
• தெருவில் உப்பு விற்றப் பெண்ணும்
• மீன் விற்ற பெண்ணும்
• பரணில் கிளி விரட்டிய பெண்ணும்
• தந்தைக்கு சோறெடுத்துச் சென்ற பெண்ணும் –
ஆண்களைச் சந்தித்து விரும்பியவர்களைத்தேர்ந்தெடுத்தார்கள்.
– இதுவே நம் இலக்கியங்கள் கூறும் பண்பாடு!

காதலைப் பற்றி பெரியார் கூறுகிறார்:
உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து.
“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!”
– குடிஅரசு 21.7.45
“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.”
– விடுதலை 24.5.47
நேரம் சரியில்லை என்று
ஜாதகம் பார்க்க என் அம்மா
என்னை கூட்டி கொண்டு போனது
எதிரே உன்னை பார்த்தேன்
என் அம்மாவை கூட்டிக் கொண்டு
வீடு திரும்பினேன்
நேரம் நல்லாத் தான் இருக்கிறது என்று.
நீ வேற ஜாதி நான் வேற ஜாதி
நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது
ஊர் என்றும் சேரி என்றும் இரட்டை
வாழ்விடம் உள்ளது
அதனால் நாம் சேர்ந்து செத்துவிடலாமா
சேர்ந்து செத்து விட்டாலும்
இங்கே ஊருக்கென்றும் சேரிக்கென்றும்
இரட்டை சுடுகாடு உள்ளது
நம்மை தனித் தனியாக புதைத்து விடுவார்கள்
அதனால் நகரத்தில் குடியேறி இருவரும்
சேர்ந்து வாழலாம் சேர்ந்து போராடலாம்
வா, ஜாதியை ஒழிக்க.
– வெ.ப. அம்பிகாபதி

பெரியார் முழக்கம் 12022015 இதழ்

You may also like...

Leave a Reply