வறுமை ஒழிப்புக்கு தடையாக நிற்கும் ஜாதியமைப்பு

இந்தியாவில் ஜாதிய கட்டமைப்பு குறித்து ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ, இயக்கங் களோ விவாதிக்கக்கூட தயாராக இல்லை. சமூகத்தில் ஆழமாக புரையோடிப் போயிருக்கும் ஜாதியத்தை தகர்க்காமல், எத்தனை பொருளாதாரத் திட்டங் களையும் அறிமுகப்படுத்தினாலும் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற கருத்தை பெரியார் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பல்வேறு ஆய்வுகளும் இதே கருத்தை உறுதி செய்து வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அப்போது சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை தீட்டுவது குறித்து, தொடர்புடைய பல்வேறு சமூகப் பிரச் சினைகள் குறித்து ஆராய்ந்தனர். அத்தகைய ஆய்வு நடத்திய நார்வே நாட்டைச் சார்ந்த குன்னர்மிர்தால் என்ற சமூக ஆய்வாளர் ‘ஏசியன் டிராமா’ என்ற ஆய்வு நூலை 1968இல் எழுதினார். வறுமைக்கான பிரச்சினையை வறுமை என்ற எல்லைக்கோட்டுக்குள் நின்று பார்க்க முடியாது. இந்திய சமூகத்தில் இறுகிப் போய் நிற்கும் ‘ஜாதிய கட்டமைப்புடன்’ அதை இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த அவர், ஜாதிய கட்டமைப்பே வறுமையை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறது என்று தமது ஆய்வில் நிறுவினார்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம், இந்த ஆய்வு நூல், நோபல் பரிசைப் பெற்றது என்பதாகும். இப்போது இதேபோல் மற்றொரு ஆய்வு நூல் வெளி வந்திருக்கிறது. இந்தியாவில் நிலை கொண்டுள்ள வறுமை (ஞநசளளைவநnஉந டிக ஞடிஎநசவல in
ஐனேயை) என்ற நூலை நந்தினி கூப்து, ஜொனாத்தன் பாரி என்ற ஆய்வாளர்கள் தொகுத்துள்ளனர். பல்வேறு ஆய்வு கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் குறித்த விரிவான திறனாய்வு, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஏப்.5, 2015) வெளிவந்திருக் கிறது. இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் இதற்காக பல ஆண்டுகாலம் செலவிட்டு இந்த ஆய்வு நூல் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப் படையிலான சமூக கட்டமைப்பும் அதனடிப்படை யில் நிர்ணயிக்கப்பட்ட ஜாதித் தொழில்களும் ஏழ்மையும் நெருக்கமாக பின்னிப் பிணைந்து நிற்கிறது. ஏழைகளின் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட திட்டங்கள், அதன் இலக்கில் தோல்வி அடைந்துவிட்டன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும், வறுமையில் வாழும் மக்கள் நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருப்பதற்கு ஜாதி யமைப்பே காரணம் என்று ஆய்வு அழுத்தமாக எடுத்துரைக் கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை என்பதை புள்ளி விவரங்களுடன் உறுதிப்படுத்துகிறது. விவசாயம் முடக்கப்பட்ட நிலையில் இப்போதும் விவசாயக் கூலிகளாகவே உழலும் தலித் மற்றும் ஆதிவாசிகள்தான் வறுமைப் பிடிக்குள் பெருமளவில் சிக்குண்ட மக்களாக இருக்கிறார்கள்.
சென்னை குடிசைப் பகுதியில் ஏழ்மையில் வாழும் வயதில் மூத்தவர்கள் நிலை குறித்து பல ஆண்டுகாலம் ஆய்வு நடத்திய இலண்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பென்னி வெரா – சார்கோ என்ற பெண் ஆராய்ச்சியாளர், தனது கட்டுரையில் நிறுவியுள்ள முடிவுகள் வழமையாக முன் வைக்கப்படும் கருத்து களை மறுக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக முதியவர்கள், குறிப்பாக அவர்களில் பெண்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும், அது அவர்களின் வறுமை ஒழிப்புக்கோ வளர்ச் சிக்கோ உதவிடாமல், வாழ்நிலையை மேலும் மோசமாக்கி யுள்ளது. சமூக நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு களை அரசு கை கழுவி, ‘வர்த்தக சந்தை’க்குள் கொண்டு வந்தது – நெருக்கடிகளுக்கு மற்றொரு காரணம். அரசு பள்ளிகளை, அரசு மருத்துவமனை களை வசதி படைத்தவர்களும் நடுத்தரப் பிரிவினரும் முற்றிலுமாக புறக்கணித்ததால் ஜாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு, வறுமையில் உழலும் மக்களுக்கு மட்டுமே அவை அடைக்கலம் வழங்கும் இடங்களாகிவிட்டன.
தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பகுதிகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆய்வு வேறு ஒரு முக்கிய கருத்தை முன் வைக்கிறது.
1960ஆம் ஆண்டுகளிலிருந்து இந்தப் பகுதியில் திராவிடர் இயக்கமும், இடதுசாரி கட்சிகளும் ஜாதி கட்டமைப்பு, ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இயக்கம் நடத்தியதால்தான், இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது. விவசாயம் மற்றும் உள்ளூர் தொழில் வளர்ச்சியும் பெருகியது. அரசுகளையும் ஒதுங்கி நிற்காமல் முனைப்பாக செயல்பட வைத்தது இதற்கான காரணம் ஜாதியத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கங்கள்தான் என்று பதிவு செய்கிறது இந்த ஆய்வு. (The working of democratic forces since mid-1960s through the Dravidian and Left Parties has led to “a general rise in living standards… with modest agricultural growth, local industrialisation and an active role for the state.”)
– ஜாதிய கட்டமைப்பைத் தகர்க்காமல், அதன் இறுக்கத்தைக் குலைக்காமல் பொருளாதாரத் திட்டங்களால் மட்டும் எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியாது என்பதை உறுதியாக நிலைநாட்டுகின்றன ஆய்வுகள்! பெரியாரும் அவரது இயக்கமும் இடது சாரிகளும் நடத்திய ஜாதி எதிர்ப்பு இயக்கத்தின் சமூகத் தாக்கத்தையும் பதிவு செய்கிறது; இந்த உண்மைகளை கருத்தில் கொள்ள மறுத்து பெரியாரை சிறுமைப்படுத்திட துடிக்கிறார்கள் நவீன பார்ப்பனியர்கள்!

‘ஏ’ பிரிவு பணியில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை!
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பவர் காங்கிர° கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன். அவரது பேட்டியை தமிழ் ‘இந்து’ நாளேடு, ஏப்.5, 2015இல் வெளியிட்டிருக்கிறது. அதில் பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசுப் பதவிகளில் முழுமையாகப் புறக்கணிக்கப் படுவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1993ஆம் ஆண்டு முதல் 27 சதவீத இடஒதுக்கீடு அமுலில் இருந் தாலும் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளாக ஒரு பிற்படுத்தப் பட்டவர்கூட இதுவரை நியமனமாகவில்லை. அனைத்து துறைகளிலும் பார்த்தால் பூஜ்யம் சதவீதத்திலிருந்து 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ‘ஏ’, ‘பி’, ‘சி’ பிரிவுகளில் பல பதவிகள் காலியாக இருந்தும் நிரப்பப்படவில்லை. நிரப்புவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவும் இல்லை.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதே நிலைதான். மத்திய அரசின் கேந்திரவித்யாலயா பள்ளிகள் மற்றும் இந்திய இராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டா லும், இதுவரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவே இல்லை. எத்தனையோ முறை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வேண்டு கோள் விடுத்தும் பலனில்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 15(5)க்கு புறம்பாக அவை செயல்படு கின்றன.
பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளைக் காக்க பணியாளர் நலத்துறை அமைச்சகம் வலியுறுத் தும் வழி காட்டும் முறைகள் பின்பற்றப்படுவது மில்லை. இதன்படி, பிற்படுத்தப்பட்ட ஊழியர் களுக்காக தனி ஒருங்கிணைப்பு அதிகாரி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட வேண்டும்; குறைந்தது ஆண்டுக்கு இருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்காக அனைத்து வசதிகளுடன் தனி அலுவலக அறை ஒதுக்கித் தரவேண்டும்; பணி நியமனங்களுக்கான குழுவில் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரதிநிதி இடம்பெற வேண்டும். ஆனால், பல பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இதில் எந்த ஒரு வழிகாட்டுதலையும் பின்பற்றவில்லை என்று கூறியிருக்கிறார், எ°.கே. கார்வேந்தன். தலித் மக்களுக்கு எதிராக, தமிழ்நாட்டில் தொடை தட்டி கிளம்பும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக் கட்சிகள், மத்திய அரசில், இப்படி, உரிமைகளை இழந்து நிற்பதற்காக போராட முன் வருவதில்லை. 27 சதவீத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்து 22 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் ‘ஏ’ பிரிவு அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர் கூட வர முடியாமல் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்க வாதிகள் தடுத்து வருவதை கருத்தில் கொள்ளாமல் பார்ப்பனியத்தைக் காப்பாற்றும் சங்பரிவாரங்களுக்கு வெட்கமில்லாமல் ‘ஜால்ரா’ தட்டுகிறார்கள், இந்த பிற்படுத்தப்பட்ட ஜாதிக் கட்சியினர்!
கார்ப்பரேட் நலனுக்கு கைப்பற்றப்படும் நிலங்கள்
அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ என்ற திட்டத்துக்காக அரசு ஏற்கெனவே கையகப்படுத்திய 18,024 எக்டேர் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு – மின்சாரம் – தண்ணீர் என்று ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியும், இதில் தொழில் தொடங்கிய நிறுவனங்கள் பலவும் வெளியேறி விட்டன. ஆனாலும், இதற்காக 20 மாநில அரசுகள் கைப்பற்றிய நிலங்கள் எந்தப் பயன்பாடுமின்றி கிடக்கின்றன.
இதில், குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றா மிடத்திலும் உள்ளன. 10,714 எக்டேர் நிலங்கள் இந்த மாநிலங்களில் கைப்பற்றப்பட்டு, வீணாகக் கிடக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 27.95 எக்டேர் நிலங்கள்! விவசாயிகளிடமிருந்து அவர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி இந்த நிலங்கள் கைப்பற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு 438 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பூர்வாங்க அனுமதி வழங்கியது. இதில் 347 மண்டலங்கள் முறையாக தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், செயல்பாட்டுக்கு வந்தவை 199 மட்டுமே. ஏற்கெனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களே பயன்படுத்தப் படாமல் கிடக்கும்போது, மேலும் ஏன் நிலத்தைப் பறிக்கிறீர்கள் என்று மதுரை விவசாயிகள் கேட் கிறார்கள். விவசாயத்துக்குப் பயன்படாத வறண்ட நிலங்கள் இருக்கும்போது அதை எடுக்காமல், விவசாயத்துக்கு பயன்பட்டு வரும் வளமான நிலங்களை 1480 ஏக்கர் அளவுக்கு கரிசல்கலான் பேட்டை, சுவாமி மல்லப்பேட்டை போன்ற மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அரசு கைப்பற்றுகிறது. இதை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தியுள்ளனர்.
கார்ப்பரேட் நலன்களுக்காகவே ஆட்சி நடக்கிறது. அதில், பார்ப்பன மேலாதிக்கமும் இணைந்து நிற்கிறது. (தகவல்: டைம்° ஆப் இந்தியா, மார்ச். 27).

தமிழகம் எதிர்நோக்கும் ஆபத்து
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குமுன் ‘இந்துத்துவா’ மதவெறி நடவடிக்கைகளை தீவிரப் படுத்திட, பா.ஜ.க., சங் பரிவாரங்கள் திட்டமிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் மக்களை அணி திரட்டி, அதை இந்துக்களின் வாக்கு வாங்கியாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்காக வகுத்துள்ள தேர்தல் உத்தி. இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க. தலைவர், கூறுகையில் : “உ.பி. மாநிலத்தைப் போல், ‘இந்து-மு°லிம்’ என்ற அடிப்படையில் பிளவு ஏற்படுத்துவது தமிழகத்தில் சாத்தியமல்ல என்பதால், ஜாதியமைப்புகளை ஊக்குவித்து அவர்களிடம் இந்து பழம் பெருமைகளை எடுத்துக் கூறி, பல்வேறு ஜாதியமைப்புகளையும் ஒருங் கிணைத்து வாக்கு வங்கிகளாக்க திட்டமிட்டுள் ளோம். இதற்கு எங்கள் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை பயன் படுத்துவோம்” என்று கூறினார். இ°லாமியர்களை மீண்டும் இந்து மதத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் பா.ஜ.க. முன்னணி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த மார்ச் 2ஆம் தேதி பொள்ளாச்சியில் 55 மு°லிம்களை மீண்டும் ‘இந்து’க்களாக மாற்றும் நிகழ்வை இந்து முன்னணி நடத்தியுள்ளது.
பா.ஜ.க., சங்பரிவாரங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் முடுக்கிவிட ஆர்.எ°.எ°. பிரச்சாரகர் கேசவ விநாயக் என்பவர் தமிழ்நாட்டுக்கு கூடுதல் செயலாளராக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அமைப்பு செயலாளராக உள்ள எ°.மோகன் ராஜூலு என்பவருடன் இணைந்து இவர் செயல்படுவாராம். தமிழகத்தில் காலூன்ற ஜாதி வெறியையும் மதவெறியையும் தூண்டிவிட்டு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்துகளை முறியடிக்க பெரியார் கொள்கை கைத்தடியை தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள் கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்
‘குறுக்குசால்’ ஓட்டுகிறது
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் காங்கிர° ஆட்சி சேர்த்தது. உச்சநீதிமன்றம், மத்திய அரசின் இந்த உத்தரவை அண்மையில் இரத்து செய்து விட்டது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. காரணம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஜாட்’ சமூகத்தினர் ஆதிக்க நிலையிலேயே இருந்து வருகிறார்கள். விரிவாக ஆய்வு நடத்திய மண்டல் ஆணையம் ‘ஜாட்’ சமூகத்தினரை பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. பிற்படுத்தப்பட் டோருக்கான தேசிய ஆணையமும் வாக்கு அரசி யலுக்காக இந்தப் பிரிவினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் காங்கிர° கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதே நேரத்தில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போதெல்லாம், வழக்கிற்கு தொடர்பே இல்லாமல், இடஒதுக் கீட்டையே கேள்விக்குள்ளாக்கி, கருத்துகளை தெரிவிப்பது உச்சநீதிமன்றத்தின் வழக்கமாகி விட்டது. இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இதேபோல் விவாதத்துக்குரிய பிரச்சினைகளை எழுப்பியிருக்கிறது. நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் ரோகின்டன் எஃப். நாரிமன் ஆகியோர் இந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட தன்மையை அடை யாளப்படுத்துவதற்கு ஜாதி என்ற ஒற்றை அளவு கோல் மட்டுமே போதுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
தீர்ப்பில், “உண்மையிலேயே பிற்படுத்தப்பட் டோராக கருதப்பட வேண்டிய சமூகப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவினரின் தொடர்ச்சியான பின்தங்கிய நிலையை ஆராய, ஜாதி என்ற அடை யாளத்தையும் தாண்டி மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார்கள். திருநங்கைகள் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க தகுதியானவர்கள் என்றும் நீதிமன்றம் கூறுகிறது. இடஒதுக்கீட்டை ஒழிக்கக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன உயர்ஜாதியினர், இத்தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளார்கள். திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு செய்வதில் தவறில்லை; அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கச் சொல்வதுதான் பிரச்சினை. பார்ப்பனர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில், சில மாதங்களுக்கு முன்பு நீலிக்கண்ணீர் வடித்து கட்டுரை எழுதிய ‘கிழக்குப் பதிப்பக’ உரிமையாளர் பத்ரி சேஷாத்திரி இப்போது நீதிபதிகளின் இந்தக் கருத்தை வரவேற்று, அதே ஆங்கில நாளேட்டில் எழுதியிருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது, ஏதோ, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ‘சலுகை’ என்பது போலக் கருதி, இந்த ‘சலுகை’யை எவ்வளவு காலத்துக்கு வழங்க முடியும் என்பதுபோல் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவது சரியான பார்வை அல்ல. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை. ‘நலத் திட்டம்’ என்று சுருக்கிப் பார்க்க முடியாது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விமர்சித்து, டெல்லி பல்கலையின் சமூகவியல் துறை பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மார்ச் 27) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஜாதி ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களை முழுமையான குடி மக்களாக்குவதற்கும் கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை ‘சலுகைத் திட்டமாக’ நீதிமன்றம் கருதுவது சரியான பார்வை அல்ல. எந்தெந்த ஜாதிப் பிரிவினர், பிரதி நிதித்துவம் பெறாதவர்களாக இருக்கிறார்களோ, அவர்களைக் குறிப்பாகக் கண்டறிந்து, அவர் களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும்போதுதான் அவர்கள் முழுமையான குடிமக்களுக்கு உரிய நிலையை எட்டுகிறார்கள். தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் உள்ள குறைகளை சரி செய்து, அனைத்து ஜாதிப் பிரிவினருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைப்பதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் சமமான பிரதி நிதித்துவம் உறுதி செய்யப்படுவதே இடஒதுக்கீட் டின் நோக்கம் என்ற கருத்தை சதிஷ் தேஷ்பாண்டே அந்த கட்டுரையில் முன் வைத்துள்ளார். வரவேற்கப்பட வேண்டிய சரியான கருத்து!
– இரா

பெரியார் முழக்கம் 09042015 இதழ்

You may also like...

Leave a Reply