சுயமரியாதைக்காக கருப்புச் சட்டை ஏந்திய ‘கீழப்பாலையூர்’ (13)

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். கீழப்பாலையூர் வரலாறு இது.

ராஜராஜன் காலத்தில் சமணப்பள்ளியைக் கொண்டிருந்த ஊர், தஞ்சை பெரிய கோயிலின் தென்புறக் கருவறைச் சுவற்றில் பெரிய நெல் களம் குறித்த வரலாற்றுக் குறிப்பு என திருவாரூரில் உள்ள கீழப்பாலையூருக்கு வரலாற்றுப் பெருமிதங்கள் ஏராளம் சொல்லப்படுகின்றன.

ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கொடூரமான ஜாதிய- பண்ணை அடிமைத் தனத்திற்குத் தப்பாத பகுதி என்ற வரலாறு பதிவாகவில்லை. சுற்றியிருந்த சுமார் 50 கிராமங்களிலும் நிலமும் ஆதிக்கமும் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தன. ராமசுப்ரமணிய ஐயர், சேஷாத்ரி ஐயர் போன்றோரிடம்தான் கீழப்பாலையூர் மண்ணும் மக்களும் சிக்குண்டு இருந்தனர். அக்ரஹாரத் தெருவுக்குள் ஆடு, மாடுகள் நுழையலாம். ஆனால், ஐயர் வயலில் கூலியாட்களாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்துவிடக்கூடாது.

பிற்படுத்தப்பட்டவர்கள் ஆடு, மாடுகளை அக்ரஹாரத் தெருவுக்கு வெளியே கொண்டு விடுவார்கள். மீண்டும் மாலையில் அக்ரஹாரத் தெருவுக்கு வெளியே ஆடு, மாடுகளைத் தாழ்த்தப்பட்டவர்கள் விட்டுவிட்டால், பிற்படுத்தப்பட்டவர்கள் இழுத்துச் சென்று கட்டி விடுவார்கள். அவர்களும் செருப்பு போட்டுச் செல்லக்கூடாது.

தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக்குளத்தில் விரலைக் கூட நனைக்கக் கூடாது. ஆனால், இந்தக் கொடுமைகள் எல்லாம், கீழப்பாலை யூருக்குள் திராவிடர் கழகக் கொடி பறப்பதற்கு முன்பு வரைதான். அருகே, இருந்த மஞ்சக்குடி, நரசிங்கம்பேட்டை கிராமங்களில் வேர் விட்டிருந்த திராவிடர் கழகம், அதன் முன்னோடிகளாக இருந்த தளபதி, கல்யாணி, முத்துக்கிருஷ்ணன், சீனிவாசன் பிள்ளை, சிவானந்தம் போன்றோரின் வீரியம் மிக்க களப்பணிகளால் குடவாசல் முழுக்கப் படரத் தொடங்கியது.

மக்களை அலை அலையாய் திராவிடர் கழகத்தை நோக்கி வந்தனர். மஞ்சக்குடி, சேங்காலிபுரம், குடவாசல் ஆகியவை இன்றும் சிறுகிராமங்கள்தான். ஆனால், சாலை வசதியே இல்லாத அந்தக் காலகட்டத்திலேயே பலமுறை இங்கெல்லாம் வந்து சென்றிருக்கிறார் பெரியார். குறிப்பாக, தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கிணறு, தனிப் பள்ளி போன்ற காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி சேங்காலிபுரத்தில் பள்ளிக்கூட கட்டுமான முயற்சிகள் தொடங்கின. ஆனால், `பொதுப்பள்ளியில் தாழ்த்தப்பட்டோரை அனுமதி, அதுதான் ஜாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும்’ என போர்க்கொடி தூக்கினார் பெரியார். தனிப் பள்ளி கட்டும் முயற்சி தவிடுபொடியானது.

கீழப்பாலையூர் கிராமமும் தங்கள் சுயமரியாதை காக்க கருப்புச்சட்டையைக் கவச மாக ஏந்தியது. பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம் என இடைவிடாத போராட்டத் தால் ஆதிக்கவாதிகளை வீழ்த்தினர். இன்றும் கீழப்பாலையூரில் சுமார் 40 வீடுகளில் கருப்புச் சட்டையின் இருப்பு இருக்கிறது. கோயில் திருவிழாவைப் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சமூகங்கள் இணைந்தே இன்றும் கொண்டாடுகின்றன. ஊர்த்தெருவுக்குள் போகும் சாமி சிலை, தவறாமல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கும் செல்கிறது.

ஜாதியத்தின் கோரத்தைத் தணித்து, சமத்துவத்தை ஏந்தி நிற்கும் கீழப்பாலையூரில் இன்றும் அக்ரஹாரம் இருக்கிறது. ஆனால், பார்ப்பனர்கள் யாரும் அங்கே இல்லை. ஐயனார் குளம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், `நான் மட்டும்தான் தண்ணீர் எடுப்பேன்’ என்று சொல்ல எவருக்கும் அங்கே துணிச்சல் கிடையாது! காரணம் அது இன்று `பெரியார் மண்’.
பெரியார்முழக்கம்இதழ்14082025

You may also like...