தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் பதிவு:
“வேறு எந்தப் பிரிவினரின் போராட்டத்தையும்விட தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முன்னுரிமை தர வேண்டியதுதான் சமூக நீதி அரசின் முதன்மையான கடமையாகும்”. சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அவர்கள் தங்களின் வேலை உத்தரவாதத்திற்கும், ஊதியம் குறைக்கப்படக்கூடாது என்பதற்கும் போராடுகிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில், போராட்டத்தை உடைப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன.
மழை வெள்ளம் வரும்போதும், புயல் வீசும்போதும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் சுமை, தூய்மைப் பணியாளர்கள் உழைப்பின் மீதுதான் விழுந்து கிடக்கிறது. வெள்ளத்தால் சென்னை நகரம் பாதிக்கப்பட்டபோது, தூய்மைப் பணியாளர்கள்தான் சென்னையை மீட்டெடுத்தார்கள். அதற்காக தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பாராட்டு விருந்து அளித்து மதிப்புத்தொகை வழங்கியதையும் நினைவுபடுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் பழங்குடி பள்ளிகளில் படித்த மாணவர்களை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை அமல்படுத்துகிற தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏன் இழுத்தடிக்க வேண்டும்? அறிவுப்பணிக்கு உயர் ஊதியம்; உடல் உழைப்புப் பணிக்கு குறைந்த ஊதியம் என்ற வர்ணாசிரமப் பார்வைதான் இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற பிரிவினருக்கு நிர்ணயிக்கப்படும் ஊதியத்தைப் போல், திராவிட மாடல் அரசு தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்க முன்வர வேண்டும். ஏழு நாட்களாக பேச்சு வார்த்தை இழுத்தடிக்கப்படுகிறது என்றாலே, போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிதான்! ஆதிதிராவிடர் பள்ளிகளில் படித்த மாணவர்களை உயர்கல்வி வரை அழைத்துச் செல்கின்ற தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணியாளர்களின் இந்த போராட்டத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்காமல், அவர்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த முன்வர வேண்டும். முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
10.08.25.
பெரியார்முழக்கம்இதழ்14082025
