ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

கடவுள் ஜாதி மதத்தைக் கடுமையாக எதிர்த்த புரட்சிக் கவிஞருக்கு தமிழ்நாடு முதல்வர் அரசு விழா அறிவித்ததோடு காலனி என்ற சொல்லும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைப் பார்வையாகவே இதைக் கருத வேண்டும். இதே போல் நீதிக் கட்சி ஆட்சி ஆணைகளில் குறிப்பிடப்பட்டு வந்த “பஞ்சமன், பறையன்” என்ற வார்த்தைகளை நீக்கி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க ஆணையிட்டார். இதிலும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், `காலனி’ என்ற பெயரை நீக்கி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா? என்று கேட்கிறார்கள்.

தனது பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை பெரியார் ஒழித்தார் ஜாதிப் பெயரை போட வேண்டாம் என்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது.

இப்போது ஜாதிச் சங்க தலைவர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போடுவதில்லை ஜாதி ஒழிப்பில், ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஒரு முன்னெடுப்பு தான்.

ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு போராட்ட வடிவங்களில் அதன் அடையாளங்களை அழிக்கின்ற போராட்டங்களும் இணைந்து நிற்கின்றன. `அரிஜன்’ என்ற வார்த்தையை காந்தியார் பயன்படுத்திய போது அம்பேத்கர் அந்த அவமானச் சொல்லை கடுமையாக எதிர்த்தார். அதற்காக “வார்த்தையை மாற்றி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா?” என்று கேட்பது அபத்தம். ஜாதியத்திற்கு கருத்தியலை வழங்கி அதை உயிருடன் பாதுகாக்க துடித்துக் கொண்டிருப்பது பார்ப்பனியம்.

அந்தப் பார்ப்பனிய கருத்தியல் கட்டமைத்த மதிப்பீடுகளை தான் பார்ப்பனர் அல்லாத ஜாதியவாதிகள் தங்களின் மதிப்பீடுகளாகக் கருதி ஜாதியவாதிகளாக போலிப் பெருமை கொள்கிறார்கள்.

இந்த ஜாதிய மனநிலையையும் செயல்பாடுகளையும் எதிர்க்கும் போது பார்ப்பனியக் கருத்திலையும் இணைத்து எதிர்க்க வேண்டும். பார்ப்பனியத்தை துண்டித்து விட்டு ஜாதி எதிர்ப்பை மட்டும் பேசுவது அம்பேத்கரையும் மறுப்பதாகும்.

விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர்
01.05.2025
பெரியார் முழக்கம் 08052025இதழ்

You may also like...