கண்டா வரச்சொல்லுங்க!
சர்வதேச விண்வெளி நிலையமாம்! அங்கே மனிதர்கள் போகிறார்களாம்! நமது பகவான்களும் தேவதைகளும் வாசம் செய்யும் புண்ணிய ஆகாயம் அது.
“நாம் ஆண்டுதோறும் தர்ப்பைப்புல் வழியாக தர்ப்பணம் செய்து அரிசி, பருப்பு போன்ற பதார்த்தங்களை பிதுர்களுக்கு பார்சல் செய்கிறோம். அவர்களும் அதை சாப்பிட்டு சகல சௌபாக்கியத்துடன் வாழும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை? இது ஆச்சாரத்துக்கு பங்கம் விளைச்சுடும்” இப்படி வேத புரோகிதர்கள் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்; ஆனால் வாயைத் திறக்கவில்லை. சுபான்சு சுக்லா என்பவர் இப்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மய்யத்துக்கு போய்விட்டார்! அங்கே ஏற்கெனவே பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
“சூரிய மண்டலத்தில் சூரிய பகவான் ஏழு குதிரைகளைப் பூட்டிய ஒற்றைச் சக்கரம் உள்ள ரதத்திலிருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் உலகத்துக்கு வெளிச்சத்தை தந்து கொண்டு வந்து வருகிறான். `பிராமண’ குடும்பத்துக்கு அவன் தான் தெய்வம். வேத ஆகம மந்திரங்களுக்கு அதி தேவதை” என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இதற்குப் பிறகும் ஆராய்ச்சிகள் தேவைதானா என்று ஆத்திக சிகாமணிகளோ, சங்கராச்சாரிகளோ, பார்ப்பன சங்கங்களோ, ஆடிட்டர் குருமூர்த்திகளோ கேள்வி கேட்கவில்லை. வாயை மூடிக்கொண்டு அன்றாடம் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“எங்களின் `ஆகாய கங்கை’ தான் உங்களுக்கு ஆராய்ச்சிக்குக் கிடைத்தா? கிறிஸ்தவக் கடவுள், முஸ்லிம் கடவுள் உங்களுக்கு கிடைக்கவில்லையா” என்று இந்து முன்னணி அர்ஜுன் சம்பத்தும் கேட்கவில்லை. சூரியனை மட்டும் அல்ல சந்திரனையும் ஆராய்கிறார்களாம். சந்திரன் யார் தெரியுமா?
“வானலோகத்தில் பரணிதேவி, பசுபதிதேவி, ரோகிணி தேவி என்று 27 பத்தினிமார்களை சுபமுகூர்த்தம் செய்து வாழ்கிறான். ஆனாலும் ரோகிணி தேவியைத் தவிர எந்த தேவியையும் அவன் விரும்பவில்லை. தன்னை கவனிக்கவில்லை என்று மற்ற தேவிகளுக்கு கோபம். கோபம் கொண்ட தேவிகள் “உன் அழகு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போவது என்று அவர்கள் சாபம் விட்டனர்.” அந்த சாபம் தேய்பிறையாக சந்திரன் உடைய அழகைக் குறைத்துக் கொண்டே வந்தது. பிறகு சிவபெருமான் தலையிட்டு முழு அழகையும் மீட்டுத் தந்தார். இப்படி சந்திரனுக்காக நாங்கள் புராணங்களை எழுதி வைத்திருக்கிறோம். அந்த சந்திரனையா நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள்? அங்கே போய் மண் எடுத்து வருகிறீர்கள்? சூரியனும் சந்திரனும் சேர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் இந்த பூலோகம் என்ன ஆவது என்பதை பற்றி சிந்தித்தீர்களா? என்று எந்த சங்கிகளும் பக்தி `பரவசத்தோடு’ கேட்கவில்லை.
சரி அது போகட்டும்! குறைந்தபட்சம் இந்த ஆராய்ச்சிக்கு தடை போடுங்கள் என்று வழக்கமாக மனு போடும் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு போகவில்லை. அப்படி போயிருந்தால் மதுரை நீதிமன்றம் தடை போட வாய்ப்பு கிடைத்திருக்கும். அதையும் நழுவவிட்டார்கள்.
சங்கிகளும் இப்படி வாய் மூடிக் கிடந்தாலும் கூட நம்மால் வாய் மூடி சும்மா இருக்க முடியாது. நாம் சில கேள்விகளை விண்வெளியில் இருக்கும் சுக்லாவிடம் கேட்க வேண்டியிருக்கிறது:
அங்கே விண்வெளியில் சொர்க்கம் நரகம் இருக்கிறதா?
சொர்க்கவாசிகளுக்கு இங்கிருந்து பிராமண உத்தமர்கள் தர்ப்பைப் புல் வழியாக வேத மந்திரங்களை ஓதி அனுப்பி வைக்கும் உணவுகள் `சுகி’ `டென்சோவைப்’ போல ஒழுங்காக டெலிவரி செய்யப்படுகிறதா?
சிவன் விஷ்ணு நோயின்றி நலமுடன் இருக்கிறார்களா?
நட்சத்திரங்கள் எல்லாம் பூமியில் வாழும் மனிதர்களின் சோதிடங்கள் தலைவிதிகளை நிர்ணயிக்கும் வேலைகளை முறையாக ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களா?
நரகத்தில் எவராவது இருக்கிறார்களா?
சித்தர புத்திரன் கணக்குப் புத்தகத்தை ஒழுங்காக எழுதுகிறானா?
எருமை மாடு நலமா?
வேத மந்திரங்கள் சாட்டிலைட் உதவி இன்றி அதற்கு உரிய சக்தியோடு வந்து சேருகிறதா?
கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்களுக்கு ஒப்புதல் தருகிறீர்களா?
சிலை திருட்டு, உண்டியல் திருட்டு மற்றும் குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் வேதக்காரர்களையும் சொர்க்கத்துக்கு தான் அனுப்புறீர்களா?…
இப்படி ஏராளமான கேள்விகள் கேட்பதற்கு இருக்கிறது. இந்த விடைகளுக்காக பூலோகத்தில், பூதேவர்களும், முருகன் கூட்டணியும் காத்திருக்கிறார்கள்…
– கோடங்குடி மாரிமுத்து!
பெரியார் முழக்கம் 03072025இதழ்
