இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

காட்சி – 5

இடம் : பஞ்சவடி குடிசை

பாத்திரங்கள் – ராமன், லட்சுமணன், சீதை.

[வழக்கம்போல் குடித்துக் குலவிக் கொண்டிருக்கிறார்கள்.)

ராமன் ; லட்சுமணா! நேற்ற நடந்த அஜமேத யாகத்துலே ஏண்டா நமக்கு சரியா பங்கு வரல்லே? இந்த ரிஷிப் பசங்களுக்கு யாகம் யாகம்னு ஊர்லே உள்ள ஆடுமாடுகளை எல்லாம் ஒழிச்சுக் கட்ட, நாம் உதவுறோம். நமக்கு என்னடான்னா ஒன்னும் சரியான பங்கே வரமாட்டேங்குதே! உம்….

லட்சும : அண்ணா ! நம்ம பசிக்கு இனிமே யாகத்துக்கு அஜம் போதாது கஜம் தான் வேணும்.

ராமன் : அதுக்கென்னடா நடத்தினா போச்சு (சீதையிடம்) பிரிய நாயகி! என்ன அவனையே பார்த்துகிட்டு இருக்கே! போய் நேற்று குதிரைக்கால் ரசம் வச்சேல்லே, அதிலே பாக்கியிருந்தா கொண்டா.

[சீதை உள்ளே போனதும்.]

லட்சும : ஏன் அண்ணா ! நானோ இளைஞன், வயிறு சரிந்து வாலிபம் குலைந்து நிற்கும் அண்ணியைப் பற்றி நீ ஏன் அடிக்கடி சந்தேகப் படறே! (“வாரா.ஆ.கா. 19-ம் சருக்கம் 1-11)

ராமன் : நான் சந்தேகப் படலேடா… நமது பழக்கம் படச் சொல்றது அப்படி… புரியறதோ !

[இப்போது தூரத்தில் அரண்மனைத் தாதி ஒருத்தி ஒரு மானுடன் விளையாடிக் கொண்டிருப்பதை ராமன் பார்த்து விடுகிறான். சீதை ரசத்துடன் வருகிறாள்.]

சீதை : அங்கே என்ன பார்க்கறேள்?

ராமன் : உம்… மான்… மான்…!

சீதை : மானா அல்லது மங்கையா? உங்கள் வழக்கத்தை விட மாட்டீர்கள்; காட்டுக்கு வந்தும் உங்கள் வெறி குறையலியே!

ராமன் : காட்டிலிலே தானேடி அது அதிகமாவுது!

சீதை : போதும் வாயை மூடுங்க.

ராமன் : சீதை, உனக்கு மானுன்னா ரொம்பப் பிரியமாச்சே! அதோ அந்த மானைப் பார் எவ்வளவு அழகா இருக்கு. வேணுமா ஒனக்கு?

சீதை : ரொம்ப அழகா இருக்கு! அது அரண்மனை மானாக இருக்கும்; பிடித்தால் அசுரர்கள் சண்டைக்கு வருவார்கள் வேண்டாம்.

ராமன் : சண்டை வந்தால் தம்பி இருக்கான் பார்த்துக்குவான். நான் போய் புடிச்சுகிட்டு வர்றேன். இந்நேரம் நமது அரண்மனையாயிருந்தால் எத்தனை மான்கள் இருக்கும்! நீ எப்படீல்லாம் விளையாடுவே

சீதை : பார்த்துப் போங்க… மானைப் பிடிக்கறேன்னு வேறு எங்காவது போய்விடாதீர்கள். ஏற்கனவே நமக்கு இருக்கிற பகை போதும்.

ராமன் : அதெல்லாம் பார்த்துக்கிறேன். தம்பி அசுரப்பசங்க இருக்கிற எடம்; அண்ணியை அங்கே இங்கே உடாமே பார்த்துக்கோ அரை நொடியிலே வந்துடறேன்.

[மானுடன் விளையாடிக் கொண்டிருந்த மங்கையை நோக்கிச் சென்று… அவளிடம்]

ராமன் : ஏய், ராட்சசி! ஏதுடி உனக்கு மான்?

[இப்போது மாரீசன் திடீரென்று முன் வந்து]

மாரீசன் : யாரடா அவன் ஆரியன்? என் மகளிடம் வந்து வம்பு பேசுவது?

ராமன் : ஓ! நீங்க இங்கேயே இருக்கீங்களா? ஒன்னுமில்லே…. மான் அழகா இருக்குதேன்னு….

மாரீசன் : இருக்கும். இருக்கும்….

ராமன் : என்ன விலையோ? (அவளைப் பார்த்துக் கொண்டு)

மாரீசன் : அதெல்லாம் உங்க நாட்டிலே!

ராமன் : ஓ… அப்ப இங்கே சும்மாவே கெடைக்குமோ? வா மானே

[அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கிறான்.)

அந்தப் பெண் : கிடைக்கும்…. [ஓங்கி அறைகிறாள்.)

ராமன் : அய்யோ லட்சுமணா! அபயம்! சீதா! லெட்சுமணா செத்தேன்!

(அலறுகிறான்.)

[இங்கே சீதையும் லட்சுமணனும் காட்டில் குடிசையில் தனியே இருந்தவர்கள்.)

சீதை : லட்சுமணா! அய்யோ ! அவர் கதறுவது உன் காதில் விழலியா? அவருக்கு என்னமோ ஆபத்து போல இருக்கே…

லட்சும : அதெல்லாம் அவருக்கு ஒன்றும் வராது… நீ சும்மா இரு.

சீதை : அவர் அப்பாவியாச்சே, சண்டைன்னா பயப்படுவாரே சிங்கத்திடம் அகப்பட்ட மாடு போல அசுரர்களிடம் மாட்டிக்கிட்டாரோ என்னமோ… நீ ஓடிப் போய்ப் பாரேன்.

லட்சும : அதிகமா அலட்டிக்காதே சீதா! உன் பதி பக்தி” தான் உலகத்துக்குத் தெரியுமே…. சும்மா இரு, பயப்படாதே!

சீதை : பயப்படவேண்டாமா? ஏன் நீ இருக்றேன்னு சொல்றியோ?

லட்சும : சீதை உன் சின்னபுத்தியை அதுக்குள்ளே காட்டிட்டியே?

சீதை : *நானாடா சின்னபுத்தியைக் காட்றேன்? (* வா.ரா.ஆ.கா. 45-ம் சருக்கம் 22-27) அடப்பாவி, இப்பதாண்டா புரியது; நீயும் காட்டுக்கு ஏன் வந்தேன்னு! ஏண்டா கொலைகாரா! எப்படியாவது அவரை ஒழிச்சுட்டு என்னை நிரந்தரமா அடையனும்னு தானேடா எங்களோட வந்தே? அதுக்காகத் தானேடா பரதன் உன்னை அனுப்பி இருக்கிறான்?

லட்சும : ஆமாமா, நீ பெரிய அழகி காமவல்லி! அதனாலே உம்மேலே எனக்கு ஆசை வந்துவிட்டது. சீ சீ! நீயும் ஒரு பெண்ணா ? பிசாசே….

சீதை : பேசிக்கிட்டே என்னைப் பார்த்து அனுபவிச்சுக்கிட்டு நில்லுடா பாதகா! போடா! போய்த் தொலையடா! என்ன ஆனாலும் உனக்கும், பரதனுக்கும், மட்டும் நான் மனைவியாகவே மாட்டேன். போடா, என் கண்முன் நில்லாதே….

லட்சும : சீ! நீயும் ஒரு பெண்ணா கேடுகெட்டவளே, உனக்கு என்னமோ நாசகாலம் வந்துவிட்டது; அது தான் இப்படியெல்லாம் பேசறே. உம், உன் முகத்திலே விழிப்பது கூடப் பாபம். இதோ, இப்போதே நான் இந்த இடத்தை விட்டுப் போயிடறேன்; நீ எக்கேடாவது கெட்டுப் போ…..

[ஆத்திரமாக அந்த இடத்தை விட்டுப் போகிறான். லட்சுமணன் போனதும் இராவணன் அங்கே வருகிறான். சீதை அவனைப் பார்த்து அன்புடன் வரவேற்கிறாள்.)

இராவ : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்….

சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை…

இராவ : இல்லை உன் உருவம்! பேரழகி! நீ யாரோ?

சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்….

இராவ : ஜானகி… ராமனின் மனைவி!

சீதை : ஆமாம்..

இராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவைகளின் அமைப்புக்கே எடுத்துக் காட்டு!

சீதை : (பெருமையுடன்) பெரியவரே! உங்கள் பிரிய மொழி. என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!

இராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்…. வேல்விழி…

சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போடு உரையாடும் தாங்கள் யாரோ?

இராவ : நான் இலங்கையின் வேந்தன்…. இராவணன்…

சீதை : (திடுக்கிட்டு) இராவணன்! – இராட்சதன்!!!

இராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள். நான் மனிதன்… மறந்தமிழர் மன்னன்.

சீதை : (நடுங்கிக் கொண்டே) காமவல்லியின் அண்ணன்.

இராவ : ஆமாம்.

சீதை : அய்யோ , மோசம் வந்துவிட்டதே. நாதா? லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!

இராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க….

சீதை : அப்படியானால், நீ ஏன் இங்கு வந்தாய் ? நான் தனிமையாக இருக்கும் போது?

இராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க…..

சீதை : அதற்கு அவரிடம் போ…

இராவ : இல்லை. அவன் வரவேண்டும் என்னிடம்!

சீதை : அதற்காக?

இராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்!

சீதை : இது அநீதி! (கத்துகிறாள்)

இராவ : இல்லை ; அரச மரபு….

சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.

இராவ : நீ பாவிகளின் மனைவி! என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய்; அந்த ஒரு குற்றத்திற்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னையல்ல; உன் கணவனை.

சீதை : அதற்கு?

இராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு.

[அருகில் நெருங்கிப் பிடிக்கிறான் சீதை அலறுகிறாள்.]

சீதை : வேண்டாம், என்னை விட்டுவிடு….

இராவ : விட்டுவிடலாம்; அதனால் அந்த மட்டரகங்களுக்குப் புத்தி வந்து விடாது…. உம், வந்து விடு!

*[அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக் கொண்டு தேரிலே ஏறிப் போகிறான்.] *வா.ரா.ஆ.கா. 49-ம் சருக்கம் 12-22

[காட்டில் ஓரிடத்திலே ராமனும் மாரீசனும் மற்போர் புரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த லட்சுமணன் ஓடிவந்து பின்புறமாக மாரீசன் முதுகில் ஒரு அம்பு போட்டு அவனை வீழ்த்துகிறான்.]

மாரீ : ஆ ! அய்யோ ! அம்மா! நான் வீழ்ந்து விட்டேன்.

[இறந்து விடுகிறான்]

ராமன் : ஆ, லட்சுமணா! நீயேண்டா இங்கு வந்தாய்? சீதை அங்கே என்ன செய்கிறாளோ! அவளைத் தனியே விட்டு விட்டு வந்துவிட்டாயே, அய்யோ ?

லட்சு : அண்ணா ! நான் அங்கு இருக்கும்படி அவள் விடவில்லை மிகக் கேவலமாகப் பேசிவிட்டாள்.

ராமன் : பேசறது இன்றுதான் புதுசுபோல் இருக்கிறது? அதுதான் உங்களுக்குள் எப்போதும் வழக்கமாயிற்றே! அய்யோ, சீகா சீதா!

(ஓடிவந்து பர்ணசாலையின் உள்ளும் புறமும் ஓடியாடிப் பார்த்துவிட்டு.]

ராமன் : அய்யோ லட்சுமணா! போயிட்டாடா! நீ ஒரு பெரிய முட்டாள். அவள் என்னதான் சொன்னாலும் ஏண்டா நீ வந்தே? அய்யோ சீதா! எந்த அசுரப்பய உன்னை எடுத்துச் சாப்பிட்டானோ!

லட்சு : அவர்கள் நம்மைப்போல, மிருகங்களைக்கூட சாப்பிடுவதில்லையே அண்ணா?

ராமன் : *சீதை மிருகமல்லடா, அழகி! (“வா.ராஆ.கா. 60-ம் சருக்கம் 8-22) அந்த அமிர்தத்தை எவன் சாப்பிட்டானோ! அய்யோ சீதா! நீ இல்லாது சீதாராமன் உலகத்தில் இருக்க வேண்டுமா? இனிமேல் உன் போதை தரும் பேச்சை எங்கே கேட்பேன்! கனியின் ரசமே! காமத்தின் ஊற்றே! கள்ளின் வெறியே! உன் அங்கங்களின் அழகு என் கண்களை விட்டு அகலவில்லையே! அய்யோ லட்சுமணா! அவள் தந்த இன்பத்தை இனி எனக்கு யாரடா தருவா!

லட்சு : அண்ணா , ஒரேயடியாகப் பிதற்றாதீர்கள். வாருங்கள் தேடிப்பார்க்கலாம். எங்காவது ஒளிந்து கொண்டு நம்மை ஏமாற்ற அப்படிச் செய்தாலும் செய்வாள் அந்த நீலி!

ராமன் : அய்யோ மடையா! நான் இப்படிக் கதற, அவள் ஒரு நாளும் பொறுக்கமாட்டாளடா. சீதா? சீதா! தசரதகுமாரன் தவிப்பதைப் பார் சீதா! ஓடிவா கண்ணே ! சிற்றிடையே! சிருங்காரவல்லியே! உன்னை விட்டு ஒருநாள் கூட வாழ முடியாதே என்னால்! தம்பி லட்சுமணா! அந்தச் சண்டாளி கைகேயி இதற்குத் தான் நம்மைக் காட்டுக்குப் போகச் சொன்னாள் போலும். இப்போதாவது அவள் மனங் குளிரட்டும். நான் இங்கேயே இறந்துவிடுகிறேன். நீ இதையெல்லாம் போய் அவளிடம் சொல் போ. –

லட்சு : அண்ணா வாருங்கள், அற்றங்கரைப் பக்கம் தேடிப் பார்க்கலாம்.

[இருவரும் போய்த் தேடிப் பார்க்கிறார்கள். தேடிப் பார்த்துவிட்டு.]

ராமன் : லட்சுமணா! எங்கு தேடித்தான் என்ன? இனிமேல் அவள் அகப்படப்போவது இல்லை. எனக்கு விரகதாபம் மேலிடுகிறதே…. அய்யோ ! எப்படி நான் இனி உயிரோடு இருப்பேன்! அதோ ஆற்றங்கரையில் ஆடும் மயில்களைப் பார்… அதைப் பார்க்கும் போது சாராயக் கடைகளிலே குடித்துவிட்டு ஆடும் ஜோடிகளைப் போல் இல்லையா? சீதை இருந்தால்…. இந்நேரம், அவளும் நானும் கண்கள் சிவக்கக் கள்ளருந்திக் ககனமார்க்கத்திலே சஞ்சரிப்போமேடா!

(லட்சுமணனைக் கட்டிப் பிடிக்கிறான். லட்சுமணன் விடுவித்துக் கொள்கிறான்.) *ஆம்: ஆம்; சீதா என்னை அழைக்கிறாள். லட்சுமணா, நீ பரதனிடம் போய்ச் சொல்லிவிடு. எனக்கு ராஜ்யமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம்… அவனுடைய ராஜ்யம் அவனுக்கே இருக்கட்டும்… நான் பேராசைக்காரன்; என் தகப்பன் ஒரு சதிகாரன்… கடைசியில் எங்கள் எண்ணம் எல்லாம் பாழாகிவிட்டது… இனிமேல் நான் எதற்காக வாழவேண்டும்? இதோ இந்த மரக்கிளையில் தூக்கிட்டுக் கொண்டு சாகப் போகிறேன்! போ போ! நீ போய்ச் சொல்லி விடு. (வா.ரா.ஆ.கா. 63-ம் சருக்கம் 1-7 )

*(என்று சொல்லிக் கொண்டே கழுத்தில் சடாமுடியைப் போட்டு இறுக்கிக் கொண்டு மரத்தை நோக்கிப் போகிற ராமனை லட்சுமணன் தடுத்து நிறுத்திக் கொண்டு.] *வா.ரா.ஆ.கா. 58-ம் சருக்கம் 1-20

லட்சு : * அண்ணா ! கொஞ்சம் பொறுங்கள்… எப்படியும் சீதையைக் கண்டுபிடிப்போம்! நாம் செய்ய வேண்டிய வேலைகளை மறந்து விட்டீர்களா அண்ணா? நாம் இங்கே எதற்காக வந்திருக்கிறோம்? நமது முறைகளைப் பரப்ப இந்த நாட்டை அடிமைப்படுத்த, இங்குள்ளவர்களை அடிமைகளாக்க – அந்த வேலைகள் முடிந்து விட்டதா? (*கி.கா. 1-ம் சருக்கம் 114-124)

ராமன் : இல்லை. புது ராஜ்யம் பிடிக்க வந்து என் இன்ப ராஜ்யத்தை இழந்துவிட்டேனடா… என் அருமை சீதை போய்விட்டாளே!

லட்சு : சீதையையும் தேடுவோம், அதோடு நாம் வந்த வேலையையும் கவனிப்போம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இங்குத் தேடிப் பார்ப்போம். பலரையும் விசாரிப்போம். பதறி ஆத்திரத்தில் எதையும் செய்து விடாதீர்கள் அண்ணா ! (அழைத்துப் போகிறான்.)

காட்சி – 5 (அ)

இடம் : காடு.

[இராவணன் சீதையைத் தூக்தி வருவதை ஜடாயு என்ற ஆரிய வேள்வித் தலைவன் பார்த்துவிட்டு உடனே தடுக்கிறான்.]

ஜடாயு : ராவணா, இது கொடுமை, எமதய்யன் இல்லாத வேளையில் நீ அம்மையைக் கவர்ந்து செல்கிறாய்…

இராவ : உனது அய்யன் மட்டும் தனிமையில் அகப்பட்ட என் தங்கையைப் பங்கப்படுத்தியது நேர்மை போலும்….

ஜடாயு : அவள் அரக்கி, அது நியாயம்!

இராவ : இவள் ஆரியச் சிறுக்கி, இவளை எது வேண்டுமானாலும்! செய்யலாம்!

ஜடாயு : சீதா பிராட்டியை நீ மரியாதையாக விடாவிட்டால், உன்னைப் போகவே விடமாட்டேன்….

இராவ : அப்படியானால் உனக்கு இறுதி நெருங்கி விட்டது போலும்!

ஜடாயு : யாருக்கு? இதோ உன்னை என்ன செய்கின்றேன் பார்! –

[அம்பு எய்கிறான்]

இராவ : ஒழிந்து போ.

[ஒரு வாளை வீசுகிறான்.) [அது பட்டு ஜடாயு குற்றுயிராகக் கிடக்கிறான். இராவணன் தேரைச் செலுத்திக் கொண்டு போகிறான்.] [சீதையைத் தேடி வரும்போது தூரத்தில் ஜடாயு இரத்த வெள்ளத்திலே கிடப்பதை ராமன் பார்த்து விடுகிறான். உடனே வந்து]

ராமன் : தம்பீ, அதோ பாரடா! என் சீதையைத் தின்ற இராட்சதனை… இரத்த வெள்ளத்திலே கிடக்கிறான்; அவனைக் கொன்றுவிடுகிறேன் பார்!

[வில்லைத் தூக்கிக்கொண்டு ஓட லட்சுமணன் தொடருகிறான்.]

லட்சு : அண்ணா , இவன் அசுரன் அல்ல, ஆரிய முனி!

ஜடாயு : ராம பிரபு! என் பெயர் ஜடாயு! தங்கள் தந்தையின் நண்பன்… அசுரவேந்தன் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது பார்த்துத் தடுத்தேன்.

ராமன் : ஆ! இராவணனா என் சீதையைக் கவர்ந்து சென்றான்? அய்யோ தம்பி! அவன் மகா பலசாலியாயிற்றேடா. இனி என்னடா செய்யப் போறோம்?

லட்சு : விளையாட்டுக்குச் செய்தது இப்படியாய் விட்டதே; அண்ணா காமவல்லியைப் பங்கப்படுத்தும்போதே நான் பயந்தேன் (ஜடாயுவைப் பார்த்து) இராவணன் எந்தப் பக்கம் போனான்?

ஜடாயு : பிராட்டியைத் தூக்கிக்கொண்டு வருவதையும், அவர்கள் அழுது கொண்டிருப்பதையும் பார்த்து நான் இராவணனை வழி மறித்தேன். இராவணன் என்னைத் தாக்கிவிட்டு, தென்திசை நோக்கிப் போய் விட்டான். ஆ…. அய்யோ … ராமா…

[இறந்து விடுகிறான்.)

[ராமனும் லட்சுமணனும் மிகுந்த துயரத்தோடு அவ்விடம் விட்டு அகலுகின்றனர்.)

ராமன் : தம்பி, இனிமேல் என்ன செய்யப் போறோம்?

லட்சு : வாருங்கள் அண்ணா பார்ப்போம். சீதா பிராட்டியை மீட்க எப்படியும் ஏற்பாடு செய்வோம். நம்மிடம் படைஇல்லை; ஆனால், பழிகாரர்களைச் சிருஷ்டிக்கும் வழி இருக்கிறது. வீரம் இல்லை. விவேகம் இருக்கிறது. சதியும் சூதும் சாய்க்க முடியாத சாம்ராஜ்யமே இருக்க முடியாது அண்ணா ! இராவணன் எப்படிப்பட்டவனாகத்தான் இருக்கட்டுமே பார்த்துவிடுவோம்.

[ராமனைத் தாங்கி அழைத்துப் போகிறான்.)

ராமன் : சீதா, உன் நகை… புன்னகை… அய்யோ என்னைக் கொல்றியே சீதா!

(ஆடிக்கொண்டு போகிறான்.)

You may also like...