நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!
மாணவர் தகுதியை நிர்ணயிக்கும் நுழைவுத்தேர்வு முறைகள் தோல்வி அடைந்து வருகின்றன. மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன.
மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடு களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற்றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். நீட் குளறுபடிகள், முறைகேடுகள், சிபிஐ விசாரணையில் தொடங்கி உச்ச நீதிமன்றம், நரடரளுமன்றம் வரை பேசுபொருளாகின.
இந்தியா சீனா, என்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் நுழைவுத் தேர்வுகள் `தெரிவுவிடை வினா’ தெரிவுவிடை (Multiple Choice Questions) தேர்வுகளாகவே நடத்தப்படுகின்றன. இந்த வகைப்பட்ட தேர்வுகள் மூலமாக (Subjective Knowledge) மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை. இது போன்ற இயந்திரத்தனமான தேர்வுகள், மாணவர்களிடையே `கண்மூடித்தனமான மனப்பாடம்’ (Mindless Memorization) செய்யும் பழக்கத்தையும், தகவல்களைச் சேகரித்து நினைவில் இருத்திக் கொள்ளும் ஆற்றலையும் மட்டுமே உற்பத்தி செய்பவையாக உள்ளன. குறைபாடுகள் நிறைந்த இந்த நுழைவுத் தேர்வு முறை மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாவதாகப் பல கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் நுழைவுத் தேர்வுகள் உடல்ரீதியிலான பிரச்சினைகள் தொடங்கி உளவியல் பிரச்சினைகள் வரை மாணவர்களைப் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன. வாழ்க்கை மீதான மாணவர்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து, தற்கொலையின் விளிம்புக்கு அவர்களைத் தள்ளுகின்றன. அவர்களின் பெற்றோர் களும் கடுமையான மன உளைச்சலுக்கு இரையாகிறார்கள். நகரப் பகுதிகளில் வாழ்ந்து வரும், சமூகப் பொருளாதாரரீதியில் பின்தங்கி உள்ள மாணவர்கள், ஊரகப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துவருகிறார்கள்.
நுழைவுத் தேர்வு முறையின் விளைவாக எண்ணற்ற தனியார் பயிற்சி மையங்கள் ஆங்காங்கே புற்றீசல் போலத் தோன்றி உள்ளன. இந்தியாவில், தனியார் பயிற்சி மையங்கள் ஒரு பிரத்யேகமான தொழில் துறையாகவே விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்தத் துறையின் மதிப்பு, தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ 58,000 கோடி ரூபாய் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பயிற்சி மையங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் இயங்குகின்றன. பெரும் பணக்காரர்கள், உயர் மத்திய தரக் குடும்பத்து மாணவர்கள் மட்டுமே இந்த நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற முடிகிறது. பணக்காரர்கள், ஏழைகள் என்னும் பிளவு இங்கே மேலும் வலுப்பெறுகிறது. இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகக் கல்வி கற்பதற்கான வாய்ப்பிலும் சமத்துவமின்மை ஏற்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற கருத்தாக்கத்தை தேசிய கல்விக் கொள்கை 2020 முன்னிறுத்துகிறது. மையப்படுத்தப்பட்ட (Centralised Examination) என்பது இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைமையில் அதிர்வலைகளை உண்டாக்குகிறது. மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும், தேவைக் கேற்பக் கல்விக் கொள்கைகளும் பாடத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்றதொரு சூழலில், மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், பெரும் சமூக-அரசியல் பின்னடைவு ஏற்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
கல்வி வணிகமயமாவதை அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கக் கல்விக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். வாய்ப்புகளை மறுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் கல்விமுறை, நுழைவுத் தேர்வுகள் குறித்துப் பொது விவாதங்கள் நடைபெற வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை ஏழை, எளிய மக்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் முற்போக்கான, சமத்துவம் நிறைந்த கல்விக் கொள்கை, திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
– அருண் அசோகன், தமிழ் இந்து நாளேடு.
பெரியார் முழக்கம் 26062025இதழ்
