மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை
கொளத்தூரில் மே24-ல் நடந்த நாத்திகர் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
முன்மொழிந்தவர்: ஈரோடு மணிமேகலை
தீர்மானம்-1: சமூகத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாமியார்களின் அதீத சக்திகளை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை வாய்ப்பு ஆக்கிக் கொண்டு சாமியார்கள் பெண்களின் நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற குற்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு நாளும் இந்த குற்ற செயல்களை நிகழ்ச்சிகளாக ஒளிப்பரப்பி வருகின்றன.
பேய்,பில்லி, சூனியம், பரிகாரம், தாயத்து போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. அறிவியல் மனப்பான்மையை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியல்சட்டப் பிரிவு (51 (A) (h) கூறுகிறது.
இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களுக்கு பல்வேறு நிலைகளில் அரசு ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்வதோடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று நாத்திகர் விழா வலியுறுத்துகிறது.
அறிவியல் பாடம்
முன்மொழிந்தவர்: தனுஷ்யா
தீர்மானம்-2: பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் கருத்துக்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பைப் பாராட்டி வரவேற்கிறோம். அதே நேரத்தில் பேய், பிசாசு, பில்லி, சூனியம்,ஜோதிடம், ஜாதகம், பரிகார பூஜைகள் செய்தல் போன்றவற்றின் பெயரால் பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை அரசு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிப் பாடப் புத்தகங்களிலேயே மேற்கண்டவை அறிவியலுக்கு புறம்பானவை என்றும் அவற்றை நம்பாமல் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற வகையில் பாடத்திட்டங்களை உருவாக்கி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நாத்திகர் விழா வலியுறுத்துகிறது.
சடங்குகள் வேண்டாம்
முன்மொழிந்தவர்: பாரதி
தீர்மானம்-3: சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளும், பாகுபாடுகளும் காலப்போக்கில் ஒழிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு வரையிலும் கணவன் இறந்தால் மனைவிக்கு நிகழ்த்தப்படுகிற தாலி அறுப்பு என்கிற சடங்கு பெரும்பாலான குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.
கணவனின் இழப்பை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு வெளிவருவதற்குக் கூட அவகாசம் இல்லாத வகையில் கணவன் உடல் இருக்கும்போதே பெண்ணுக்கு பட்டுப் புடவை உடுத்தி, பூ அணிவித்து, புது வளையல்கள் போட்டு மணப்பெண் போல அலங்கரித்து, பின் அவற்றையெல்லாம் உடைப்பது, அகற்றுவது என்கிற சடங்கு பெண்ணின் தனி மனித உணர்வைப் புண்படுத்துவதாகவும் பெண்களின் மாண்பிற்கு எதிரானதாகவும் இருக்கிறது. எனவே அந்தச் சடங்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பொது சமூகத்தை நாத்திகர் விழா கேட்டுக்கொள்கிறது.
பெரியார் முழக்கம் 29052025இதழ்
