நிமிர்வோம் வாசகர் வட்டம் எடுத்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு

நிமிர்வோம் வாசகர் வட்ட‌த்தின் 27-வது சந்திப்பு 09.05.2025 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, மறைந்த திராவிட இயக்க இளம் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் உருவப் படத்தை, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் திறந்துவைத்தார்.

கழக வெளியீடுகளான “பெரியாரின் மானுடம்”, “பெரியார் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு” ஆகிய நூல்கள் குறித்து தி.வி.க. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார்.
“அம்பேத்கர் நம் தலைவர்”, “இறுதிமூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” ஆகிய நூல்களை, தாம்பரம் நகரக் கழக அமைப்பாளர் அருண் கோமதி திறனாய்வு செய்தார்.

அதன்பிறகு, மறைந்த எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரை நினைவுகூரும்விதமாக, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் கனடாவில் இருந்து காணொளி வாயிலாக உரையாற்றினார். கழகத்துடனான விஜயபாஸ்கரின் தொடர்பு, ஜாதி ஒழிப்புக் களங்களில் ஆற்றிய பணிகள் குறித்து பல்வேறு செய்திகளை தோழர் விஜயகுமார் பகிர்ந்துகொண்டார்.

இறுதியாக, நூற்றாண்டு காணும் திராவிட இயக்க மூத்த முன்னோடி திருவாரூர் தங்கராசு அவர்கள் பற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், “திராவிட இயக்க மாவீரர் திருவாரூர் தங்கராசு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் காலந்தொட்டு, பெரியார் திராவிடர் கழகக் காலம் வரை திருவாரூர் தங்கராசு ஆற்றிய பணிகள், அவரின் எழுச்சிமிக்க உரைகள், தனித்துவமான கொள்கைப் பண்புகள் குறித்து இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறுதியாக நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் நன்றி கூறினார். நிகழ்வை, நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர் பிரகாசு தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் தோழர் ஹானஸ்ட் தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவருக்கு கழக வெளியீடுகள் வழங்கி வரவேற்றார்.
பெரியார் முழக்கம் 22052025இதழ்

You may also like...