வினாக்கள்… விடைகள்…!

சபரிமலை அய்யப்பன் பாதுகாப்புக்கு ‘ரோபோ’க்களை (எந்திர மனிதன்) பயன்படுத்த நிர்வாகம் முடிவு. – செய்தி
பெண் ‘ரோபோ’வாக இருந்துடப் போவுது; அப்புறம் சாமிக் குத்தமாயிடும்.

யோகாவில் ‘சூரிய நமஸ்காரம்’ வேண்டாம் என்பவர்கள் – கடலில் போய் விழலாம். – பா.ஜ.க. எம்.பி. ஆதித்ய நாத்
வேண்டாம் என்று முடிவு செய்தவர் மோடிதான்!

‘அங்கன்வாடி’யில் குழந்தைகளுக்கு முட்டை போட ம.பி. பா.ஜ.க. ஆட்சி தடை. – செய்தி
இப்படியே போனா, கோழிகளே முட்டை போட தடை விதிச்சுடுவாங்க போல!
இந்தியாவில் 2015இல் பசி, பட்டினியால் வாடுவோர், 19 கோடியே 40 இலட்சம் பேர். – சீத்தாராம் எச்சூரி
அம்புட்டு பேரையும் அப்படியே ‘யோகா’வுக்கு கொண்டு வாங்க! மனசோடு உடலை இணைச்சுக் காட்டுவோம்; அப்பவே பசி பறந்து போயிடும்!

கோயிலுக்கு தேர் செய்வதில் ரூ. 60 இலட்சம் மோசடி; திருநின்றவூர் பார்ப்பன அர்ச்சகரை நீக்கியது அறநிலையத் துறை. – செய்தி
இதற்குத்தான் கோயிலில் அரசு தலையீடே இருக்கக் கூடாதுன்னு இராம கோபாலன் தலையில அடிச்சுக்குறாரு! யாரு கேட்கிறா?

பல ஆண்டுகளாக போர் எதுவுமே நடக்காததால் இராணுவத்துக்கு மரியாதையே இல்லை.
– இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்
அதுக்காக, உள்நாட்டுப் போரை தொடங்கிடாதங்கய்யா…

பீகாரில் ஷேக்புரா மாவட்டத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 50 குழந்தைகள் வாந்தி மயக்கம்.
– செய்தி
‘மேகி நூடுல்ஸ்’ன்னா தடை போட் டிருக்கலாம்; கோயில் பிரசாதமா யிற்றே!

வர்ணபூஜை நடத்த சுற்றறிக்கை விட்ட தலைமைப் பொறியாளர் மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு! – செய்தி
அதனால் என்ன? வழக்கிலிருந்து விடுதலை பெற யாகம் நடத்த சுற்றறிக்கை அனுப்புவாரு, பாருங்க!

விநாயகன் கடவுள் சிலைகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது கவலையைத் தருகிறது.
– இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்
இதுக்கு ஏங்க வருத்தப்படுறீங்க? அவன் தான் ‘மாம்பழத்துக்கு’ உலகத்தையே சுற்றிய உலகக் குடிமகனாச்சே!

பெரியார் முழக்கம் 25062015 இதழ்

You may also like...

Leave a Reply