75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது”

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர்.
அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் கருத்துரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை சதாசிவம் அவர்களுக்கு “ பெரியாரியல் பேரொளி ” என்ற விருது வழங்கப்பட்டது.. மூத்த குடும்ப உறுப்பினருக்கு கொள்கை மக்களும், பேரக்குழந்தைகளும் புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்தனர். ஒரு சட்டைக்கான துணி பாராட்டு ஆடையாக அணிவிக்கப்பட்டது.. அவரது பெரியாரியல் பணிகள் பற்றி சேலம் தோழர் சரவணன் சிறிது நேரம் எடுத்து விளக்கினார். அதைத் தொடர்ந்து தோழர்களின் வேண்டுகோளின்படி “நான் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் விழா நாயகர் சதாசிவம் 45 நிமிடங்கள் உரையாற்றினார்.
விழாவில் அனைவரையும் வரவேற்று மேட்டூர் நகரக் கழகச் செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளஎ சி. கோவிந்தராசு, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல், செயலாளர் டேவிட், தலைமைக்குழு உறுப்பினர் அ. சக்திவேல், நங்கவள்ளி அன்பு, சேலம் வீரமணி, முல்லை வேந்தன், மேட்டூர், ஆர்.எஸ்., நங்கவள்ளி, கொளத்தூர் பகுதி பொறுப்பாளர்களும் தோழர்களும் வந்திருந்தனர்.மேட்டுர் நகரக் கழகத் தலைவர் செ. மார்ட்டின் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply