வாலிபர்களே தயாராய் இருங்கள்!

பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. 02.05.2024 இதழின் தொடர்ச்சி…
இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோட்சம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து தீர வேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.
நிஷ்காமிய கர்மம் யாது?
இதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் சொல்லலாம். நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப் படுவது முன்னுக்குப் பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில் நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர் பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும்? நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே “ஒரு பலன் ஏற்பட வேண்டும்” என்பதற்காக வேண்டி செய்வது என்பது அருத்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப் பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ, தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தைக் கொடுத்து சலிப்பாக வேலை செய்யச் செய்யவில்லை; உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.
சுயமரியாதைத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதேயாகும். என்னவென்றால் காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத் திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. விபரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்த காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டு விடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவு களுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.
சுயமரியாதையே சுதந்திரம்
இன்றைய சுதந்திரவாதிகள் சுதந்திரத்திற்காகச் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரியாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லாதவர்களுக்கு சுதந்திரமேது என்பதுதான் சரியான வார்த்தையாகும்.
சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் சுதந்திரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்குச் சுயமரியாதை தேவைப்படாது. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத் தக்கதாய் இருக்குமென்றும் சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொருத்ததாக மாத்திரம் இருக்கும்.
உதாரணமாக இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம். இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகின்றது. ஒன்று தோழர் காந்தியார் பெயர், மற்றொன்று தோழர் ஜவஹர்லால் பெயர். முந்தியவர் இந்தியாவில் உலக அனுபவமுள்ள சோம்பல் கூட்டத்தார், மத உணர்ச்சியாளர் (மூட நம்பிக்கைகாரர்கள்) பழமை விரும்பிகள் ஆகியவர்களது உலகில் மதிக்கப்படுகிறவர். அவரது சுதந்திரம் என்பதெல்லாம் பழமையை அனுபவிக்கச் சுதந்திரம் வேண்டுமென்பதே. பிந்தியவர் உலக அனுபவமற்ற உற்சாகக்கார புதுமை விரும்பிகள் உலகத்தில் மதிக்கப்படுகிறவர் என்பதோடு குறிப்பற்று ஏதாவதொரு மாறுதல் வேண்டுமென்பவர். இந்த இரண்டு பேருக்கும் தெளிவான ஞானம் கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில் சுதந்திரத்தின் யோக்கியதையே – சுதந்திரம் விரும்புகின்றவர்களின் தன்மையே அவ்வளவுதான். எப்படியெனில் இருவர் கோரும் சுதந்திரம் இன்று உலகில் எந்தப் பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அங்கெல்லாம் ஏறக்குறைய முழு மக்களும் சுயமரியாதை இல்லாமல் இருப்பதைக் காணலாம்.
காந்தியார் இந்து மதம் புனருத்தாரணம் ஆவதும் பழைய முறைகள் உயிர்ப்பிக்கப்படுவதும் சுதந்திரம் என்கிறார். ஜவஹர்லால் பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்ததானாலும் அல்லது இரண்டும் வந்து விட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ந்து பார்த்தால் சுதந்திரம் சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.
முழு சுயராஜ்யமுள்ள பிரிட்டிஷ் தேசத்தில் குடிகளுக்கு ஏன்? ராஜாவுக்கே தன் இஷ்டப்படி கல்யாணம் செய்துகொள்ள சுதந்திரம் இல்லாமல் ராஜ்யத்தை துறக்க வேண்டியதாகிவிட்டது என்றால் – அதுவும் ஜனப்பிரதிநிதிகளால் – அதுவும் பொது ஜனங்களுடைய விருப்பம், ஆமோதிப்பு என்பவைகளின் பேரால் என்றால் ஜவஹர்லால் சுயராஜ்யத்தில் காந்தியார் சுதந்திரத்தில் மனிதனுக்கு கடுகளவாவது சுயமரியாதை இருக்க இடமுண்டா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதையின் பெருமை
அப்படிக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுயமரியாதைக்குப் பிறந்த) சுதந்திரமாய் இருந்தால் “காதலுக்கு” பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது போல் விலங்கு இருக்குமா? என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பது என்போன்ற சாதாரண மனிதனால் கையாளப் பட்டதனால் அதன் பெருமை விளங்காமல் போய் விட்டது என்று சொல்லலாமே தவிர அதற்கு நிகர் உலகில் மனிதனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் பத்து வருஷகாலமாய் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக் கிடையில் நேரப் போக்குப் பிரசாரமாக நடந்து வந்திருந்தபோதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது – ஏன்? சுயமரியாதைக் கூட்டத்தில் இருந்தவர் களுக்குள் இருந்து கூட – ஏற்பட்டு இருந்தாலும் ஒரு குடம் பாலுக்கு ஒரு சொட்டு விஷம் என்பதுபோல் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்குக்கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகா பண்டிதர்கள் ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக்கொள்ளச் செய்திருக்கிறது. தோழர் காந்தி யாரையே பல கரணங்கள் போடச் செய்து விட்டது.
பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பி விட்டு விட்டது. கீழ் ஜாதி மேல் ஜாதி யென்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக் கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும் குர் ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். தோழர் காந்தியாரோ அல்லது காங்கிரஸ் தொல்லையோ இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு பார்ப்பனீயம் மாண்டு இருக்கும் என்றே சொல்லலாம்.
சுயமரியாதை இயக்கம் காந்தியாரை ஒரு அளவுக்கு மூலையில் உட்கார வைத்துவிட்டது என்றாலும் பார்ப்பனீயம் வேறு ஆட்களைப் பிடித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முன்வந்து விட்டது. ஆனபோதிலும் காந்தீயம் பட்டு மாய்ந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பெருமை சுயமரியாதை இயக்கத்துக்கே உண்டு.
இனி இரண்டு மாதம் சென்றவுடனே ஜவஹர்லாலை சுயமரியாதை இயக்கம் மூலையில் உட்கார வைக்க முழு மூச்சில் முனையப் போகின்றது. சுயமரியாதை இயக்கம் இதுவரை செய்து வந்த பிரசாரத்துக்கு மேலாக, கேரள ஆந்திர கர்நாடக தேசம் மாத்திரமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பிரசாரம் செய்யப் போகின்றது. அது தனது பழைய வாலிபர்கள் பெரும் பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்து விட்டதால் புதிய வாலிபர்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சமயம் “குறை” ஏற்பட்டாலும் சுயமரியாதைக்கு குறை ஏற்படாது.
வாலிபர்களே தயாராய் இருங்கள்!
(இக்கட்டுரை “நவமணி” ஆண்டு மலருக்காக பெரியார் எழுதியது) (18.7.1937)
நிறைவு

பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

You may also like...