இந்தியாவின் முதல் நாத்திகர் மாநாடு – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(10)

நம் நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத புதுமையானதொரு மாநாடு சென்னை எழும்பூரில் அமைந்த ‘ஒயிட்ஸ் மெமோரியல் ஹால்’ என்ற மண்டபத்தில் 31-12-1933 அன்று வெற்றியாக நடந்தேறியிருக்கிறது. நாஸ்திகர் மகாநாடு என்று அழைக்கப்பட்ட அம்மாநாட்டின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை விரிவாகப் ‘புரட்சி’ ஏடு தந்தது. நாடெங்கிலுமிருந்து கணக்கற்ற எண்ணிக்கையில் மக்கள் வந்து கலந்து கொண்டார்கள். குறிப்பாக, படிப்பறிவு பெற்ற நிறையப் பெண் வீராங்கனைகள் மாநாட்டில் பங்கேற்ற செய்தியைப் படிக்கும்போது பெருமையாக இருக்கின்றது. இம்மாநாட்டில் கருத்துரைகள் ஆற்றிய சான்றோர்தம் சுவையான சில சொற்பொழிவுகள் படிப்பவர் எவருக்கும் உணர்ச்சியூட்டும் என்பதில் அய்யமில்லை. வரவேற்புரை நிகழ்த்திய சி.கே. குப்புசாமியின் கருத்துரை ஒவ்வொருவருக்கும் சிந்தனை விருந்தாகும்.

“நாஸ்திகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மாகாண நாஸ்திகர் மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம். இதிலிருந்து உலகத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பாமர மக்களுக்கும் நாஸ்திக உணர்ச்சி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாஸ்திகம் என்றால் என்ன? சர்வசக்தி, சமகுணம், தயாளகுணம், ஜீவகாருண்யம், அன்பு, சமதர்மம் இவ்வித குணங்கள் நிறைந்த ஒரு கடவுள் உண்டென்று ஆஸ்திகர்கள் கூறுவதை அறிவுள்ளவர்கள் மறுப்பதே நாஸ்திகம். தயாளகுணங்கள், ஜீவகாருண்யம், பூர்ண சக்தியுள்ள கடவுள் உலகத்தவர்களுக்கு வறுமையையும் பிணியையும் சச்சரவுகளையும் குரோத புத்தியையும் ஏன் சிருஷ்டித்திருக்க வேண்டும்?

உலகத்தில் முதலாளி, தொழிலாளி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, ஜமீன்தாரன், குடியானவன், உழைப்பாளி, சோம்பேறி இவ்வித வித்தியாசங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்விதக் கொடுமைகளைக் கடவுள் சிருஷ்டித்திருந்தால், கடவுளை யோக்கியமற்றவன் என்றும் நீதியற்றவன் என்றும் உலக துரோகி என்றும் பாரபட்சமுடையவன் என்றும் கொலையாளி என்றும் நயவஞ்சகமுடையவனென்றும், தீயகுணங்கள் நிறைந்த திருடனென்றும் உலக முட்டாள் என்றும் அறிவுள்ளவர்கள் கூறினால் அவர்களை நாஸ்திகர்களென்று ஆஸ்திகவாதிகள் கூறுகிறார்கள். கடவுள் என்ற பதத்தை அகராதியினின்று எடுத்து விட வேண்டும்”.

-(புரட்சி: 7-1-1934).

எஸ். நீலாவதி அம்மையாரின் திறப்புரை

நாத்திகர் மாநாட்டினைத் திறந்து வைக்கும் பொறுப்பு பெண்மணி ஒருவருக்கு அளிக்கப்பட்டமை இவ்வியக்கத்தின் தனித்தன்மையினைக் காட்டுவதாகும். திருச்சி எஸ். நீலாவதி அம்மையாரின் திறப்புரை சூடு நிரம்பியதாயிருந்தது.

“இங்கு கூட்டப்பட்டிருக்கும் நாஸ்திக மகாநாடானது ஒரு நூதன மகாநாடென்று கூறப்படுவதற்கு உரித்தாகும் (பொருத்தமானதாகும்). இம்மகாநாட்டிற்கு மூலகாரணமாயுள்ள சுயமரியாதை இயக்கம் சுமார் 9 ஆண்டுகளாகச் செய்து வந்த வேலைகளின் பயனாகவே இன்று சென்னையில் முதன்முதலாக இந்த மகாநாடு கூடுவதற்குக் காலம் கிடைத்தது.

இன்றைய நாஸ்திக மகாநாட்டிற்கு இடையில் இன்னும் பல நூதன மகாநாடுகளைக் கூட்டினோம். ஜமீன்தாரர் அல்லதார் மகாநாடு, பணக்காரர் அல்லாதார் மகாநாடு, லேவாதேவிக்காரர் (வட்டிக்கடை நடத்துவோர்) அல்லாதார் மகாநாடு முதலிய அல்லாதார் மகாநாடுகளையும் கூட்டுவித்து நமது அபிப்பிராயங்களைப் பொதுமக்கள் பலரும் அறியுமாறு செய்தோம். அதிலிருந்து இன்னும் ஒரு படி அதிகமாகப் பச்சை நாஸ்திகர் மகாநாடு துவக்கிவிட்டோம். நமது இயக்கம் உலக மக்கள் யாவருக்கும் பொதுவானது.

நமது இன்றைய மகாநாட்டின் நோக்கம் மதம்-கடவுள் ஒழிய வேண்டும்; அதை மெருகு கொடுத்துப் புகழுபவர்களின் மதிப்பை அழிக்க வேண்டும் என்பதே. நம்மை என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளட்டும். உலகத்திலேயே நாஸ்திகனுக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது. நான் தப்பு செய்து விட்டேனானால் அதற்கு உண்மையில் நான் உதித்தாரார் (பொறுப்பு) ஆகிறேன். உடனே திருத்திக் கொள்ள வேண்டுமென்று உணருகிறேன். ஆஸ்திகன் அப்படியல்ல. என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரு தேங்காயோ பாவசங்கீர்த்தனப் பெட்டியோ அவ்வயோக்கியத் தனங்களை நிவர்த்தி செய்து விடும் என்கிறான்.”

– `புரட்சி’: 7-1-1934.

தோழர் ம.சிங்காரவேலரின் தலைமையுரை

மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்ற அறிஞர் பொதுவுடைமைத் தோழர் ம. சிங்காரவேலர் அரியதொரு தலைமையுரை வழங்கினார்.

“இந்தியா முழுமைக்கும் இந்த மகாநாடே முதல் நாத்திக மகாநாடு என்று சொல்லலாம். இந்த மகாநாட்டால் நமது இந்திய தேசத்திற்கு நன்மை உண்டாகுமேயல்லாமல், கெடுதியாதொன்றும் விளையாது. ஆனால் அறியாதோர் சிறுபிள்ளைத்தனமாக இம்மகாநாட்டைப் பரிகாசம் செய்வார்கள்.

மூட உலகம் நன்மை அளிக்கும் இயக்கங்களை முதலில் பழித்தே வந்திருக்கிறது. பழிப்பதோடு நில்லாமல் இம்சித்தும் வந்திருக்கிறது. நாஸ்திக போதகரான இங்கர்சாலை அமெரிக்க நாடு முழுமையும் பழித்தது. இன்று அவரின் நூறாம் ஆண்டுப் பெருநாளைக் கொண்டாடுகிறது. அய்ம்பது வருஷத்துக்கு முந்தி, ஆங்கில நாஸ்திகரான ப்ராட்லாவை ஆங்கில நாடு சிறையிலிட்டது. இன்று அவருடைய ஜுபிலியைக் கொண்டாடுகிறது. இன்று நாஸ்திகர்களாகியவர்கள் பழிக்கப்படுவர்; இம்சிக்கப்படுவர். ஆனால் இந்த மகாநாட்டைப் போன்ற அரிய பெரிய நாஸ்திக மகாநாடுகள் தேசமுழுமையுமே நாஸ்திகத்தைப் பரவச் செய்யும். காலப்போக்கில் இந்த மகாநாட்டை உண்டாக்கியவர்களை உலகம் மறந்து விடும். ஆனால் அவர்கள் நாஸ்திக விஷயமாகக் கொண்ட எண்ணங்கள் மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து சுகப்படுத்தும் என்பதற்குத் தடை இல்லை.

உலகில் நாஸ்திகம் ஒரு பழமையான சித்தாந்தம். ஆஸ்திகம் உண்டான போதே நாஸ்திகமும் உண்டானது. கடவுள் உண்டு என்ற சொல் கிளம்பியதும் கடவுள் இல்லை என்ற சொல்லும் கிளம்பியது. ஆதி மனிதன் பேசுவதற்கு முந்தி ஆஸ்திகம் என்பதே அறியான். பேசத் தெரிந்த பிறகே ‘கடவுள்’, ‘தெய்வம்’, ‘பேய்’, ‘பிசாசு’, ‘உயிர்’, ‘ஆத்மா’ என்ற சொற்களை உச்சரிக்க ஆரம்பித்தான். காட்டுமிராண்டிகளில் சிலர் கடவுள்’ என்ற சொல்லே தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்திருக்கிறார்கள். சில பாதிரிமார்கள் அன்னோரிடம் கடவுளைப் பற்றிக் கேட்டபோது அந்தச் சொல்லே தங்கள் பாஷையில் இல்லை என்றார்களாம்! இவர்களை ஆதி நாஸ்திகர்கள் Primitive Atheists- என்று எண்ணலாம். எனவே ஞாயமுறையில் நாஸ்திகன் என்ற பதத்தில் யாதொரு இழிவுமில்லை. ஆனால் மதஸ்தர்கள் தங்கள் மூட வைராக்கியத்தாலும் மூடதுவேஷத்தாலும் நாஸ்திகர்களை இகழ்ந்தும் இம்சித்தும் வந்திருக்கின்றனர்.”

தோழர் ப.ஜீவானந்தம் உரை

நாத்திகர் சங்கச் செயலாளராக இருந்த ப.ஜீவானந்தம் நாத்திக பிரச்சாரம் ஏன்? என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை 21-1-1934-ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் வெளியானது. அதன் ஒரு பகுதி இதோ:

“நமது இலட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதையில் காணப்படும் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் பற்பல. அவற்றில் முக்கியமானவற்றில் இரண்டு மதமும் கடவுளும். சென்ற காலச் சீர்திருத்த வீரர்கள் இவற்றின் எதிர்ப்புக்கு ஆளாக அஞ்சினர். மக்கள் மனப்பான்மையில் புரட்சி உண்டு பண்ண அவர்கள் பயந்தனர். நமக்கோ நமது கோரிக்கைதான் பிரதானமே யொழிய ஏற்படும் இடையூற்றை யொட்டிய பரிசுத்தப் பெயர்களைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலையில்லை. இக்காரணத்தால்தான், பொதுஜனங்கள் தாங்களாகவே யோசித்துத் தீர்மானிக்கத்தக்க நிலைமையை உண்டாக்க முயற்சிக்கிறோம். பொதுஜனங்கள் சுயேச்சையாகச் சிந்திக்கும் மார்க்கம் ஏற்படாதவரையில் கோரிய பலனை அடையலாமென்பது வீண். ஒரு முறை பொது ஜனங்கள் தாங்களாகவே சிந்திக்கத் தொடங்கிவிட்டால், பின், முன்னேற்றப் பாதை திறக்கப்பட்டு விடும்.

அறிவியல்வாதிக்கு ஆஸ்திக வாதம் ஒத்துவராது. மனித வர்க்கத்தைத் தக்க வழியில் செலுத்த வேண்டுமென்று விரும்பும் சீர்திருத்தக்காரர்கள், புரட்சிக்காரர்களெல்லோரும் அஞ்சா நெஞ்சர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் அஞ்சா நெஞ்சராய் இருக்க வேண்டுமானால் அவர்கள் அறிவியல்வாதிகளாகி. சுயேச்சா சிந்தனா சக்தியை வளர்க்க வேண்டும். விதிவிலக்கின்றி சகல அறிவியல்வாதிகளும் (Free Thinkers) மனித வர்க்கத்தை நேசிப்பவர்களே, எத்துறையில் அஞ்சாது சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் ஆஸ்திகம் குறுக்கே படுத்து வழியை மறிப்பது நமக்கு நன்றாகத் தெரியும்.ஆகவே பிறரைப் புண்படுத்தவல்ல, மக்களின் சுயேச்சை சிந்தனா சக்தியை வளர்க்கும் பொருட்டு நாம் நாஸ்திகம் பிரசாரம் செய்து தீர வேண்டியவர்களாய் இருக்கிறோம்.”

ஆதாரம் : பெரியார் பேருரையாளர் இறையன் எழுதிய `இதழாளர் பெரியார்’ நூல்
பெரியார்முழக்கம்இதழ்14082025

You may also like...