சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பழனியில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பழனியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர், அழகாபுரி, மானூர், புது ஆயக்குடி, பழைய ஆயக்குடி, பச்சளநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெயர் பலகையைக் கழகத் தலைவர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கழகத் தலைவரை அப்பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாச்சிமுத்து, துணை அமைப்பாளர் சங்கர், பழனி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் பெரியார், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் கபாலி, ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் ஜெயசங்கர், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் ஆயுதன் மற்றும் கழகத் தோழர்கள் உஷாராணி, ஆதித்யா, சுரேகா, முத்துராஜ், சஞ்சய், தினேஷ் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
சென்னை: தந்தை பெரியார் 146வது பிறந்தநாள் விழா சென்னை மாவட்டக் கழக சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
காலை 8:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன் பின்னர் சேத்துப்பட்டு, சிம்சன், தியாகராயர் நகர், தரமணி, எம்.ஜி.ஆர் நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் வாகனப் பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் சேத்துப்பட்டு இராசேந்திரன், வேழவேந்தன், அ.வ.வேலு, எட்வின் பிரபாகரன், தட்சிணாமூர்த்தி மற்றும் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதியம் மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டது.
சேலம் கிழக்கு : சேலம் கிழக்கு மாவட்டக் கழக தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்டக் கழகத் தலைவர் சக்திவேல் தலைமையில் சேலம் கோட்டை மைதானம் முதல் மாவட்டச் ஆட்சியர் அலுவலகம் வரையில் பெரியார் முகமூடி அணிந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் பிரபாத், தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, சிவசக்தி நகர், மூணாங்கரடு, உத்திரப்பன் நகர், மணியனூர், ஜங்சன், கே.ஆர்.தோப்பூர், பவளத்தானூர், கோனேரிப்பட்டி, கறிக்கடை பஸ் ஸ்டாப், இளம்பிள்ளை, பெத்தாம்பட்டி, முருங்கபட்டி, நாயக்கன்பட்டி, ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் கொடியேற்று விழா மற்றும் படத்திறப்பு விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் டேவிட், மாவட்ட அமைப்பாளர் பெருமாள், மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம், மாநகரத் தலைவர் பாலு, மாநகரச் செயலாளர் ஆனந்தி, மாநகர் அமைப்பாளர் தேவராஜ், சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் தேவபிரகாஷ், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திவ்யா, ஏற்காடு ஒன்றியச் செயலாளர் கார்த்திக், இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி: தருமபுரி மாவட்டக் கழக சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு பண்ட அள்ளி, பென்னாகரம் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் வெ.வேணுகோபால், மாவட்டச் செயலாளர் கு.நாகராசன், மாவட்ட அமைப்பாளர் மா.பரமசிவம், ஒன்றியச் செயலாளர்கள் அசோக்குமார், இராமதாசு, நஞ்சப்பன், பெரியார் பெருந்தொண்டர் கடைமடை மு.மாதையன், வி.தேவன், ம.தி.மு.க கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்