அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கப்பெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘குடிஅரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடிஅரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தியால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது.
தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய்ப் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடிஅரசு 18.04.1926 ) பின்னர், ம.சிங்காரவேலர், சாமி.சிதம்பரனார், கைவல்ய சாமியார், மயிலை.சீனி.வேங்கடசாமி, சா.குருசாமி, சந்திரசேகர பாவலர், ஈழத்து சிவானந்த அடிகள், பண்டிதர் முத்துசாமி, கோவை அய்யாமுத்து, ஜனக சங்கர கண்ணப்பர், அ.இராகவன், ஆர்.நீலாவதி, அ.அன்னபூரணி போன்ற சிந்தனையாளர்களின் கட்டுரைகளும் பாரதிதாசன், ஜீவானந்தம் போன்ற கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
1925 இல் தொடங்கிய ‘குடிஅரசு’ 1933ஆம் ஆண்டில் அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்துக்காக பிரிட்டிஷ் ஆட்சி பெரியார் மீது அரசு துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்தது. 9 மாத சிறைத் தண்டனையும் ரூ.300 அபராதமும் விதிக்கப்பட்டு பெரியார் சிறையேகினார். ‘ குடிஅரசி’ன் பதிப்பாளர் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் 6 மாத சிறைத் தண்டனைக்கு உள்ளானார். ரூ.100 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் 19.11.1933 – லிருந்து ‘ குடிஅரசு’ தற்காலிகமாக நிறுத்தப் பட்டு மீண்டும் 13.01.1935 – லிருந்து வெளிவரத் தொடங்குகிறது. தொடர்ந்து 29.12.1940 வரை வெளிவந்த ‘குடி அரசு’ மீண்டும் நிறுத்தப்பட்டு 16.10.1943 – லிருந்து வெளிவரத்தொடங்கி, 1949 ஆம் ஆண்டில் மீண்டும் அரசின் ஒடுக்கு முறைக்கு உள்ளானது. மேலும் ரூ.3000 ஜாமீன் தொகை கேட்கவே ‘ குடி அரசு’ விடைபெற்றுக் கொண்டது.
‘குடிஅரசு’ 1933ஆம் ஆண்டில் அடக்குமுறைக்குள்ளாகிய சூழ்நிலையில், “அடுத்தவாரம் ‘குடிஅரசு’ பத்திரிகை வரத் தவறும் பட்சத்தில் வேறு பத்திரிகை வெளிவரும்” என்ற அறிவிப்பு 19.11.1933 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழிலேயே வெளிவந்து விடுகிறது. அறிவித்தது போலவே ‘குடிஅரசி’ன் அடுத்த இதழ் வெளிவரவேண்டிய 26.11.1933ஆம் நாள் ‘குடிஅரசு’க்கு பதிலாக ‘புரட்சி’ என்ற பெயரில் இதழ் வெளிவருகிறது. “ குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘புரட்சி’ தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் – அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால், கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும்” என்ற அறிவிப்போடு ‘புரட்சி’ வெற்றிநடைபோடத் தொடங்கியது. “ புரட்சி”யும் அடக்கு முறைக்குத் தப்பவில்லை. ஆசிரியர் பெயர் இல்லாமல் ‘புரட்சி’ வெளி யிட்டதற்காக வெளியீட்டாளர் சா.ரா. கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப்பட்டு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டில் மட்டும் 3 வழக்குகள் அடுக்கடுக்காய் தொடரப்பட்டன. அரசால் ஜாமீன்தொகை ரூ.2000 கேட்கப்பட்டது. ரூ.5000 – த்துக்கும் மேல் இழப்பைச் சந்தித்த ‘புரட்சி’ ஏடு 17.06.1934 இதழோடு நிறுத்தப்படும் நிலைக்கு வந்தது.
‘புரட்சி’ ஏடு வெளிவரும்போதே 15.04.1934 முதல் ‘பகுத்தறிவு’ எனும் நாளிதழைத் தொடங்கினார். ஆனால், அது வெளிவந்தது குறுகிய காலம்தான். 27.05.1934 ஆம் நாளோடு அந்த நாளேடு நின்று போனது.
பெரியார் ஓய வில்லை. புரட்சி நின்றபின் சுமார் 2 மாத இடை வெளியில் 26.08.1934 முதல் ‘பகுத்தறிவு’ வார இதழ் வெளிவரத் தொடங்கியது. 1934 மே 20இல் பெரியார் சிறையிலிருந்து விடுதலையானார். பகுத்தறிவு வார ஏட்டைத் தொடங்கும் போதே பெரியார் எழுதினார்.
“முடிவாய்க் கூறுமிடத்து, ‘பகுத்தறிவு’ மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்.” ( பகுத்தறிவு – தலையங்கம் – 26.8.1934)
06.01.1935 இல் பகுத்தறிவு வார ஏடு நின்றுபோய் விடுகிறது. “பகுத் தறிவு” ஏட்டையும் அரசு விட்டுவைக்கவில்லை. பகுத்தறிவு வார இதழ் நின்று, மாத இதழாகவும் காலணா தினசரிப் பதிப்பாகவும் நடத்த முயன்றபோது பகுத்தறிவு இதழுக்கும் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று 29.01.1935 இல் அரசு ஆணை பிறப்பித்தது. பிறகு மாத ஏடாக வெளிவரத் தொடங்கியது. 1935 இல் தொழி லாளர் தினமான மே முதல் நாளிலிருந்து பகுத்தறிவு மாத இதழாக பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் வெளிவரத் தொடங்கியது.
01.06.1935 முதல் வாரம் இருமுறை இதழாக ‘விடுதலை’ வெளிவரத் தொடங்கியது. அப்போது ‘குடிஅரசும்’ வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. 29.05.1937 இதழோடு விடுதலை வாரம் இருமுறை பதிப்பு நிறுத்தப்படுகிறது. 01.07.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக வெளிவருகிறது. அதற்குமுன் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ‘விடுதலை’ ஏடு வெளி வந்து பிறகு நின்றுபோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியார் இவ்வளவு அடக்குமுறைகளை எதிர்கொண்டே பத்திரிகைகளை நடத்தியுள்ளார்.

பெரியார் முழக்கம் 15.08.2024 இதழ்

You may also like...