சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)
ஏப்.14, 2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
மாநில சுயாட்சியின் அடிப்படை நோக்கம் சுயமரியாதைத் தத்துவம். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்கு, மாநிலங்களின் அடிப்படை உரிமை, பொருளாதாரச் சுதந்திரம், அனைவருக்கும் சமமான சரி நிகர் வாழ்வாதாரம், இன உணர்வு என்ற பல்வேறு கோணங்களில் அர்த்தங்களைப் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக “சுயமரியாதை” என்ற தத்துவமே மாநில சுயாட்சியின் அடி வேராக விளங்குகிறது என உறுதியாகக் கூறலாம்.
மாநில சுயாட்சி திராவிடத்தின் கொள்கை : 1962 அக்டோபர் வேலூர் சிறையில் இருந்து விடுதலையான பின் மாநில சுயாட்சிக்காக அண்ணா முன் வைத்த முழக்கம் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர அதனைக் கேட்பதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நான் விட்டுவிடவில்லை” என்றார்.
நமது பள்ளிப்பருவத்திலேயே படித்து இருப்போம் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, பன்முகத்தன்மை கொண்டது இந்தியா, வேற்றுமை யிலும் ஒற்றுமை காணும் இந்தியா, இப்படி பல்வேறு வாசகங்களைக் கேட்டு கடந்து தான் அனைவரும் வந்திருப்போம். மாநில சுயாட்சியின் நோக்கமும் இதுவே… இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களை ஒன்றிணைத்துள்ள ஒரு ஒன்றியம் அல்லது கூட்டமைப்பு ஆகும். அனைத்து மாநில அரசு களுக்கும் அவரவர் தேவைகளை நிறைவு படுத்தும் வண்ணம் அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே இதன் முக்கியக் குறிக்கோள். ஆனால் உண்மையில் இந்திய ஒன்றியத்தில் அப்படியொரு அம்சம் காணப்படவில்லை. இங்கே நாகரீக வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகளாக உள்ள கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற உரிமைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அரசுகள் சுதந்திரமாக எதையும் செய்ய இயலவில்லை.
பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசுக்கு பலம் எதற்காக ? அந்த பலன் யாருக்கு எதிராக ? என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பலம் என்பது தனிப்பட்ட ஆளுக்கு இருக்கலாம்; தனிப்பட்ட அமைப்புக்கு இருக்கலாம்; மாநில துரைத்தனத்துக்கு இருக்கலாம்: மத்திய துரைத்தனத்துக்கு இருக்கலாம்; அந்தப் பலன் யாருக்கு எதிராக பயன்படுத்துவது என்பது பற்றி விளங்கிக் கொள்ளாமலும், விலகிச் செல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
“மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்து இருப்பது மாநில அரசு தானே தவிர மத்திய அரசு அல்ல. மக்கள் மீது அக்கறை இருக்க லாம் அது எப்படிப்பட்ட அக்கறை! குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் மூன்றாவது மாடியில் உள்ள சீமான் ஏதோ கரும்புகை தெரிகிறதே, பெரும் தீவிபத்து போலிருக்கிறதே! என்று கூறுவானே அதைப் போன்ற கதை தான் அது. ஆனால் குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் துடிப்பவர்கள் யார் ?அந்த குடிசை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள குடிசை வாசி தான். அதைப்போல மாநில அரசினர் தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள் என நமக்கான தேவையையும் மாநில-ஒன்றிய அரசு களின் கடமையையும் எளிமையாக விளக்கியுள்ளார் அறிஞர் அண்ணா.
இதன் வெளிப்பாடு ஒன்று தனக்கான உரிமையை கேட்டுப் பெறுவது அது தான் சுயமரியாதையை உணர்வுள்ள மாநில சுயாட்சித் தத்துவம்.
கொத்தடிமையாக்கும் ஒன்றியக் கடன் : மத்திய அரசு வழங்கும் கடன் திட்டத்தைப் பற்றி அண்ணா வின் பார்வை :
“அரசியலமைப்புச் சட்டம் உருவானதற்குப் பின்னர் மாநில தன்னாட்சியை மாநிலங்களே கெடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசால் செய்யப் பட்ட ஒருவகை ஏற்பாடு தான் மத்தியக் கடன்கள் ஆகும். அய்ந்தாண்டு திட்டங்களில் வழங்கப்படும் விருப்ப மானியங்களின் மூலமாக மத்திய அரசு மாநில தன்னாட்சியின் ஒரு கண்ணை மாநிலத்தின் கையாலேயே குத்திக் கொள்ள வைக்கின்றது. மேலும், மத்தியக் கடன்களை மாநிலங்களுக்கு வழங்குவதன் மூலம் மாநில தன்னாட்சியின் மற்றொரு கண்ணும் மத்திய அரசால் குத்தப்படுகிறது. மாநிலங்களால் கடன்களை மறுக்கவும் முடியவில்லை ஆனால் திருப்பிக் கட்டவும் முடியவில்லை.
கம்ப ராமாயணத்தில் ‘இலங்கை வேந்தன்’ தான் இறக்கும் முன்னர் கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கினானோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால் மத்திய அரசிடமிருந்து கடன் பட்ட மாநில நெஞ்சங்கள் தீராத வேதனையில் துடித்துச் சாகும் நிலையை நாம் நாளும் காண்போம்”.
சம காலத்தில் கோடியில் புரள்கிற அம்பானி, அதானி குழுமங்களுக்கு பல கோடி ரூபாய் கடன் களை தள்ளுபடி செய்தும், ஒரு வருடத்திற்கும் மேலாக பல உயிர் பலிகளை கொடுத்து போராடி வந்த விவசாயிகளை சற்றும் மதிக்காமல் இருந்த ஒன்றிய அரசின் போக்கை நாம் அனைவரும் கண்டிருப் போம்.
மக்களின் மனநிலையையும், சிரமத்தையும் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசைப் புரிந்து கொள்வதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை.
பிரிவினைவாத நோக்கமுடையதா மாநில சுயாட்சி ? : பெரியார் தனித்தமிழ் நாடு வேண்டும் என்ற போதும் சரி, அண்ணா திராவிட நாடு வேண்டும் என்ற போதும் சரி பல தேசியவாதக் குழுக்களும் அந்த சித்தாந்தத்தில் உள்ள தலைவர் களும் இது பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது. இந்த எண்ணத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று பொங்கிவிட்டனர். ஆனால் நிதர்சனம் என்னவெனில் பல்வேறு பெரிய நாடுகளில் இருந்து பல மாகாணங்கள் பிரிந்து சென்று சிறு நாடு களாக மாறி பல்வேறு வளர்ச்சியை எட்டியுள்ளது.
நமது இந்தியாவில் இன்றளவும் ஜாதிய உணர்வு பலதரப்பட்ட மக்களின் மனதிலும் ஊறிப்போய்க் கிடக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர்,கவுன்சிலர் என பதவிகள் கிடைத்தாலும் ஜாதியின் காரணமாக சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றக் கூட உரிமை மறுக்கப்படுகிறது.
வெவ்வேறு ஜாதியை சார்ந்த ஆண்-பெண் காதலித்து மணம் முடிப்பதை இந்திய சமூகம் இன்னும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது. அவர்களை மான பங்கப்படுத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி ஏன் ஆணவக் கொலை கூட செய்யத் துணிகின்றனர்.
அடுத்தது மதம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று வாயளவில் பெருமை பேசிக்கொண்டு இங்குள்ள சிறுபான்மை மத மக்களை பெரும் பான்மையாக இருக்கின்ற ஒரு காரணத்தால் இந்துத்துவ மத வெறியாளர்கள் எவ்வளவு கொடுமை களுக்கு உள்ளாக்குகின்றனர். மாமிசம் சாப்பிடக் கூடாது குறிப்பாக மாட்டுக்கறி, ஆங்கிலப் புத்தாண் டுக்கு தேவாலயங்களில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தக் கூடாது, இப்போது பரவலாக பேசப்பட்ட சம்பவம் ஹிஜாப் அணியக் கூடாது என்பதெல்லாம் எந்த வகை மத சார்பின்மையை சாரும் ?
இதில் இல்லாத பிரிவினை வாதம் தான் தனி நாடு கோரிக்கையில் வந்துவிடப் போகிறதா ? ஒரு மனிதன் இயல்பாக வாழ்வதற்கே தனியுரிமை (Privacy) என்ற கோட்பாடு தேவைப்படும் பட்சத்தில் ஒரு அரசாங்கம் தன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, வாழ வைப்பதற்கு தன்னாட்சி (autonomy) என்பது அவசியம். இந்தக் கருத்தில் பிரிவினை வாதம் இருக்கிறது என்று கண்டறிபவர்கள், இந்த மனித இனத்தின் அறிவியல் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ஜாதி, மத, மூட நம்பிக்கை, ஏற்றத் தாழ்வுகளில் உள்ள பிரிவினை வாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தால் மகிழ்ச்சி தான்.
மாநில சுயாட்சியின் பயன்கள் – திராவிடத்தால் தமிழகம் அடைந்த வளர்ச்சி
கல்வி : எந்தவொரு சமூகமும் முன்னேற்றமடைய கல்வி என்பது மிக மிக அவசியமான பேராயுதமாக இருக்கிறது. திராவிடச் சித்தாந்தம் என்பது கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கைகளைக் கொண்டு தமிழகத்தை பகுத்தறிவால் செதுக்கி யுள்ளது. ஒரு நாட்டின் கல்வியின் அளவீடு என்பது மக்கள் பெற்றுள்ள படிப்பறிவு மற்றும் எழுத்தறிவை (Literacy) மட்டுமே வைத்து கணக்கிட்டு விட முடியாது. மாறாக GER Gross Enrollment Ratio அதாவது உயர் கல்வி பயில்வோரின் சேர்க்கை விகிதத்தின் அடிப்படையிலேயே கல்வியை துல்லியமாக அளவிட முடியும். அப்படி பார்த்தோமேயானால் தமிழ்நாடு- 51ரூ மற்றும் இந்தியா – 26ரூ ழுநுசு இல் அளவிடப்பட்டுள்ளது. எனவே இந்தியாவைக் காட்டிலும் தமிழகம் கல்வியில் சிறப்பாகவே விளங்கு கிறது. இது திராவிட ஆட்சிகளினால் ஏற்பட்ட மாற்றம். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் தான் அந்தந்த மாநிலத்தில் உள்ள கல்வி கட்டமைப்புக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்து மாநில அரசு மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியும்.
பொருளாதாரம் : கல்வியைப் போலவே பொருளாதாரத்தை அளவிடவும் GDP – Gross Domestic Product அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகம் GDP ல் இந்தியாவிலேயே 2 வது இடத்தில் உள்ளது. அப்போது முதல் இடத்தில் உள்ள மாநிலம் எதுவாக இருக்கும் என்றால் மகாராஷ்டிரா தான். இங்கு தான் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது. மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் தொழிற் சாலைகளின் எண்ணிக்கையும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் தமிழகத்தின் பல பெரிய நிறுவனங்களின் தலைமைக் கிளை மும்பையை மையமாகக் கொண்டு செயல்படுவதால், வரி செலுத்தும் போது இங்குள்ள அதன் துணைக் கிளைகளும் மும்பைக்கு சேர்ந்த நிறுவனங்களாகவே போய்விடுகிறது. எனவே தான் தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா முதல் இடத்திலும் இருக்கிறது. அப்படியல்லாமல் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் தமிழகம் முதல் இடத்தில் இருக்கும்.
சுகாதாரம் : GER, GDP போன்றே சுகாதார கட்டமைப்பை அளவிடவும் IMR – Infant Morality Rate அதாவது குழந்தைகள் இறப்பு விகிதம் என்ற அளவீட்டை வைத்து நிர்ணயிக்கலாம். அப்படி பார்த்தால் இந்தியாவின் மொத்தத்தில் 1000 க்கு 32 குழந்தைகள் பிறக்கும் போது இறந்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் 1000 க்கு 16 குழந்தைகள் தான் இறக்கின்றன. இது மொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவு. காரணம் இங்குள்ள சுகாதாரத்துறையில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பல்நோக்கு மருத்துவமனை வரை செய்யப்பட்டுள்ள வசதிகள். இதிலும் தமிழகம் முன்னோடியாகவே திகழ்கிறது. சமீபத்தில் கொரானா காலத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களைக் காப்பாற்றியது சுகாதார துறையின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
போக்குவரத்து வசதி : இந்திய ஒன்றியத்துடன் ஒப்பிடும் போது போக்குவரத்து வசதிகளும் தமிழ்நாட்டில் மிகவும் சௌகரியமாக இருப்பதை நாம் பார்க்க முடியும். இன்றும் வட நாடுகளில் பேருந்துகளே இல்லாத கிராமங்கள் இருக்கின்றன. சரியான சாலை வசதிகளும் அங்கே காணப்படுவ தில்லை. “அம்புலன்ஸ் வர முடியாததால் உறவினர்கள் கர்ப்பணிப் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதி” என்ற தலைப்புச் செய்திகளை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் அப்படியான நிலைமைகளை பார்ப்பது அரிது தான். காரணம் இங்குள்ள கட்டமைப்பு. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே ஏழு விமான நிலையங்கள் உள்ளன. அதில் 4 பன்னாட்டு விமான நிலையங்கள் ஆகும். இது மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கிடும் அளவீடாகவும் விளங்குகின்றது.
தற்போதைய தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மகளிருக்கு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் (சாதாரண கட்டணப் பேருந்துகள்) கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், திட்டத்தை அமல்படுத்தி வெற்றியடையச் செய்திருக்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை என்பது தமிழகத்தின் தனித்தன்மையை விளக்குகிறது.
இட ஒதுக்கீடு : சமூக நீதியின் அளவுகோலாக பார்க்கப்படும் ஓர் அங்கமே இட ஒதுக்கீடு. இந்தியா வில் தமிழகத்தில் மட்டுமே 69ரூ இட ஒதுக்கீடு உள்ளது. சட்டதில் கூட 50ரூ க்கும் மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ள போது தமிழகத்தில் அதற்கென ஒரு தனி ஆணையை பிறப்பித்து 69ரூ இன்றும் எவராலும் அசைத்துப் பார்க்க முடியாத வண்ணம் பாதுக்காக்கப்பட்டு வரு கிறது. இதற்கு முக்கிய காரணமும் திராவிட ஆட்சி தான்.
கல்வி, பொருளாராதம், போக்குவரத்து, சுகாதாரம், இட ஒதுக்கீடு போன்றவற்றின் அளவீடு என்பது கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழகம் அடைந்த வளர்ச்சி ஆகும். நீதிக் கட்சி காலம் தொடங்கி தற்போதுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் வரை. இதற்கு அடிப்படையாக விளங்கியது; சுயமரியாதைத் தத்துவமும் அதனடிப்படையில் உருவான மாநில சுயாட்சியும் தான்.
மாநிலங்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவதன் நோக்கமே “மாநில சுயாட்சி”. நீதிக் கட்சி தலைவர்கள், சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர் தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் வரை மாநில சுயாட்சி கொள்கையில் இருந்து தடம் மாறவில்லை.
தற்போது கேரளாவில் நடந்து முடிந்த சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் அவர்கள் மாநில சுயாட்சியை வலியுறுத்தி பேசியுள்ளார்.
இப்படி மாநில சுயாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் அமைந்த முதல்வரின் அசத்தலான பேச்சு அடிமை மற்றும் பாசிச கூட்டத் திற்கு பதற வைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கும்.
“தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தோன்றாமல் இருந்திருந்தால் தமிழ் சமூகம் முன்னேறி இருக்காது” இதுவும் முதல்வர் ஸ்டாலின் அண்மையில் பேசிய செய்தி தான். ஆம்.
தமிழகத்தை இப்போதும் சரி இனி வரும் காலங்களில் ஆட்சி செய்யப் போகின்றவர்களும் சரி பெரியாரை தவிர்த்து விட்டு தமிழகத்தில் ஒரு புள்ளி அளவு அரசியல் கூட செய்ய முடியாது என்ற நிலையை கட்டமைத்துள்ளது பெரியாரிய இயக்கங்கள்.
நம் தமிழ் சமூகம் பிரிவினைகளற்று மென்மேலும் பகுத்தறிவு பாதையில் தொடர்ந்து வளர என்றும் தந்தை பெரியாரின் பாதையை பின்பற்றுவோம்.
பெரியார் முழக்கம் 21042022 இதழ்