இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. பாகுபாடுகள் அகற்றப்படாத வரையில், இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க வேண்டும். தேவை இருக்கும் வரை இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டுமென்று மோகன் பகவத் ஏற்கெனவே பேசிய காணொளி ஒன்று, தற்போது தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதிலளித்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.சி.,, எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக என்றைக்கும் ஆதரிக்கும். அவர்களின் உரிமையை என்றைக்கும் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டுமே கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டுள்ளன.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்
2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஊடகத்திற்கு பேட்டி அளித்த மோகன் பகவத், “சமூகத்தின் சில பிரதிநிதிகள் உட்பட, முழு தேசத்தின் நலனில் உண்மையாக அக்கறையுள்ள மற்றும் சமூக சமத்துவத்திற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு குழுவை உருவாக்கி, எந்தப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு தேவை, எவ்வளவு காலம் தேவை என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த எம்.ஜி.வைத்யா தி இந்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “இப்போது ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தேவையில்லை, ஏனென்றால் எந்த ஜாதியும் பின்தங்கியிருக்கவில்லை. அதிகபட்சம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் தொடரலாம். அதுவும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே. அதன்பிறகு ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்,” என்றார். அதேபோல ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த கோவிந்தாச்சார்யா 2016ஆம் ஆண்டில் ‘தி வயர்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்றும், குறிப்பாக இடஒதுக்கீடு நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்றும் கூறினார். ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த மன்மோகன் வித்யா 2017ஆம் ஆண்டில், இடஒதுக்கீட்டிற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டியது அவசியம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பாஜகவின் இடஒதுக்கீடு எதிர்ப்பு
அதேபோல பாஜகவும் இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கிற பல பணிகளை செய்திருக்கிறது. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கே இடஒதுக்கீடு என்ற அரசியலமைப்பின் நோக்கத்தை சிதைத்து, இரண்டே நாட்களில் உயர்ஜாதி ஏழைகளுக்கான பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டை வலிந்து திணித்தது பாஜக அரசு. ஓபிசி பிரிவினருக்கான நியாயமான இடஒதுக்கீட்டை வழங்கிட, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த மறுப்பதும் ஒன்றிய பாஜக அரசுதான். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முயற்சித்தபோது, கையெழுத்திட மறுத்தவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இறுதியில் அரசிதழில் வெளியிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது அதிமுக அரசு. இதேபோல புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்தபோது, அதற்கெதிராக வழக்குத் தொடர்ந்தது ஒன்றிய பாஜக அரசு.
மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து, திமுக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்திற்குப் பிறகு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது பாஜக அரசு. வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஏற்று, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோது, அதற்கெதிராகவே ரதயாத்திரையை நடத்தினார் அத்வானி. பல இடங்களில் அதனால் கலவரம் வெடித்தது. வி.பி.சிங் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்று, ஆட்சியைக் கவிழ்க்க வழிவகுத்தது பாஜக. ஆனால் மண்டல் பரிந்துரைகளை பாஜக எதிர்க்கவில்லை என்று இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் அமர்ந்துகொண்டு கூசாமல் பொய் பேசுகிறார்கள் பாஜகவினர்.
பெரியாரியலுக்கு கிடைத்த வெற்றி
பாஜக மட்டுமல்ல அப்போது காங்கிரஸ் கட்சியும் கூட ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீண்ட நேரம் பேசினார் ராஜீவ் காந்தி. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ராய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், கட்சிப் பொறுப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க தீர்மானித்தது அக்கட்சி. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று உறுதியோடு பேசுகிறார் ராகுல் காந்தி. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும் என்று உறுதி கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தொடங்கியிருக்கும் இவ்வேளையில், காங்கிரஸ் கட்சியின் இப்பண்பு மாற்றத்தை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்ற நோக்கத்திற்காகவே, 1925ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறினார் பெரியார். அதன்பிறகே சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் வழிவந்த திராவிடர் கழகத்தின் இடஒதுக்கீடுக் கொள்கையே தனித்துவமான தமிழ்நாட்டை கட்டியெழுப்பியது. இன்றுவரை தமிழ்நாடு தாங்கிப் பிடித்திருக்கும் சுயமரியாதை உணர்வு, சமூகநீதி கோட்பாடு, மதச்சார்பின்மை ஆகிய அனைத்துமே இடஒதுக்கீட்டில் திராவிட இயக்கம் காட்டிய உறுதியில் இருந்தே பிறந்தவை.
தமிழ்நாட்டின் அந்த உறுதி இப்போது அகில இந்திய அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது. சுமார் ஒரு நூற்றாண்டு தாமதமாகவேனும், இடஒதுக்கீட்டின் தேவையை மற்ற மாநிலங்களும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அதனால் இடஒதுக்கீட்டை நிராகரித்துவிட்டோ அல்லது எதிர்த்தோ இனி எவரும் அரசியல் செய்ய இயலாது என்ற சூழலை நோக்கி இந்தியா நகர்ந்துவிட்டது. அதுவே காங்கிரஸ் கட்சியின் பண்பு மாற்றமாகவும், பாஜகவின் தேர்தல் நாடகமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை ஒழிக்க நினைப்பவர்கள் ஒழிந்து போவார்கள் என்ற நிலைமைக்கு காலம் தள்ளியிருப்பதே பெரியாரியலுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி.
பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்