உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் கருத்துச் செறிவுடன் நடந்தது இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஜூன் 11, 12-2017இல் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறை கிருஷ்ணா விடுதியில் சிறப்புடனும் கருத்துச் செறிவுடனும் கட்டுப்பாடு நேரம் தவறாமையுடன் நடந்தது. பயிற்சியில் 20 பெண்கள் உள்பட 75 இளைஞர்கள் பங்கேற்றனர். நபர் ஒருவருக்கு ரூ.200/- கட்டணம், முன்பதிவு, இரு நாள் பயிற்சிகளிலும் முழுமையாகப் பங்கேற்றல் என்ற ஒழுங்கு முறை விதிகளுடன் நடந்த இந்த பயிலரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டு குறிப்புகளை பதிவு செய்து கேள்விகளையும் எழுப்பினர்.

பயிற்சி பெறும் தோழர்கள், முதல் நாள் இரவே பயிற்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர். இதனால் முதல் நாள் பயிற்சி திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தொடங்கிவிட்டது. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வகுப்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி, “மதவாத அரசியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தொடர்ந்து வழக்கறிஞர் ப.பா. மோகன், “மனித உரிமைச் சட்டமும் மனித உரிமை மீறல்களும்” என்ற தலைப்பிலும், உணவு இடைவேளைக்குப் பிறகு ஆசிரியர் சிவகாமி, “பெரியார் பார்வையில் பெண்கள்” எனும் தலைப்பிலும் புலவர் செந்தலை ந. கவுதமன், “நீதிக்கட்சி-திறனாய்வும் தெளிவும்” எனும் தலைப்பிலும், தேநீர் இடைவேளைக்குப் பிறகு, விடுதலை இராசேந்திரன், “அம்பேத்கரும் பெரியாரும்” எனும் தலைப்பிலும் வகுப்புகளை எடுத்தனர். இரவு 7 மணி வரை வகுப்புகள் நடந்தன. தொடர்ந்து உலகம்   – உயிர் தோன்றியது எப்படி? நேரம் – காலம் ஆகியவற்றின் அறிவியல் விளக்கங்களைத் தரும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. பூமி, நிலா சுழற்சி, பெயர்ச்சி பேரவை சார்பில் கி.பெ. செந்தமிழ்ச் செல்வன் இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.

இரண்டாம் நாள் பயிற்சி முகாம், காலை உணவுக்கு முன் 8 மணியளவில் தொடங்கியது. பால் பிரபாகரன், “பெண்களை அடிமைப்படுத்தும் மதம் மற்றும் இடஒதுக்கீடு வரலாறு” குறித்து வகுப்பு எடுத்தார். காலை உணவுக்குப் பிறகு விடுதலை இராசேந்திரன், “ஜாதி தோற்றம்; ஜாதிய ஒடுக்குமுறை; ஜாதி இயங்கியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு, ‘கல்வியும் காவியும்’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். அதைத் தொடர்ந்து பயிலரங்கில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு கொளத்தூர் மணி, “பெரியார் திறனாய்வும்-தெளிவும்” என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற பெண், ஆண் தோழர்கள் இணைந்து, ‘ஜாதி ஆணவக் கொலையை’  சித்தரிக்கும்  வீதி நாடகத்தை நடத்திக் காட்டினார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி இரு நாள்களிலும் பங்கேற்றனர். பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கு முன்னின்று ஏற்பாடுகளை செய்த திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு நன்றி கூறினார். மடத்துக்குளம் மோகன், உடுமலை அருட்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் முகாம் வெற்றிக்கு பொறுப்பு ஏற்று செயல்பட்டனர்.

ஆழமான கருத்துரைகளுடன் முகாம் சிறப்புடன் நடந்தது. முகாம் பற்றி கருத்துத் தெரிவித்த தோழர்கள் ஏராளமான தகவல்களையும் விளக்கங் களையும் பெற முடிந்தது என்று கூறியதோடு, முகாம் மேலும் சிறக்க தங்கள் ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

உடுமலை பயிற்சி அரங்கில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

உடுமலை திருமூர்த்தி மலை பயிலரங்கில் ஜூன் 12, 2017 அன்று காலை அமர்வு முடிந்தவுடன், பகல் 2 மணியளவில் கழகத் தோழரின் ஜாதி மறுப்புத் திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் மிகுந்த உற்சாகத் துக்கிடையே நடத்தி வைத்தார். மணமகள் – பொள்ளாச்சி வட்டம் நாதேக்கவுண்டன் புதூர் ஈஸ்வரி – முருகேசன் ஆகியோரின் மகள் வினோதினி; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.  மணமகன் – ஆனைமலை சுந்தர்ராஜ்-சின்ன மணி ஆகியோரின் மகனான

கழகத் தோழர் சுந்தரமணி; ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவர். மணமக்கள் உறுதிமொழியை இருவரும் இணைந்தே கூறியபோது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.

திருமணத்தை நடத்தி வைத்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி – “இந்த ஜாதி மறுப்பு இணையர் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இவர்கள் இருவரின் ஜாதியைச் சாராதவருக்கு மணம் முடிக்க முன்வரவேண்டும். வாழ்நாளில் சில நேரங்களையும், வருமானத்தில் ஒரு பகுதியையும் பொதுத் தொண்டுக்கு செலவிட வேண்டும்” என்ற வேண்டுகோளை முன் வைத்தார்.

பயிற்சி அரங்கத்தின் அன்றைய மதிய உணவுக்கான செலவை இணையர்களே ஏற்றுக் கொண்டனர். அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி உணவு வழங்கப்பட்டது. ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மணமக்கள் சார்பில் ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பயிற்சி தர வந்திருந்த கல்வியாளர் பிரின்ஸ் கசேந்திரபாபு நிகழ்வில் பங்கேற்று புரட்சிகர திருமணத்தைப் பாராட்டினார்.

 

மடத்துக்குளம் மோகன் கட்டமைப்பு நிதிக்கு ரூ.25,000 வழங்கினார்

கழகத் தோழர் மடத்துக்குளம் மோகன் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் நினைவாக கழக கட்டமைப்பு நிதியாக ரூ.25,000/- உடுமலை பயிற்சி அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார்.

19060186_1838961379755653_1894206652637309738_n

பெரியார் முழக்கம் 15062017 இதழ்

You may also like...