இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்
(18.01.2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி)
தென்னிந்தியாவில் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சங்ககாலம் என்று பெயர். அந்த காலத்தில் ஜாதி என்பதே அறவே கிடையாது. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மீது ஆசை கொண்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை போன்ற வாழ்க்கைமுறைகளில் இவர்கள் வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்லவர்கள் வருகிறார்கள். பின்னர் தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திரம் எனும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். இது அவர்களுடைய கல்வெட்டு செப்பேடுகளில் உள்ளது.
அவர்கள் தமிழ்நாட்டில் நுழையும் போதே வர்ண தர்மத்தை கொண்டுவருகிறார்கள். பின்னர் சிறுகச்சிறுக பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். இந்த பல்லவர்கள் காலத்தில் தான் குகை கோயிகள், கற்கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திற்கு பிறகு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கியது. அப்பொழுது தான் இங்கு மிகப்பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. வெறும் கற் கோயில்கள் உருவாக்கப்பட்ட போதே கங்கை கரையில் இருந்து ஏராளமான பார்ப்பனர்கள் இங்கு வரவழைக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
அவர்கள் அதிகமாக வந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. பார்ப்பனர்கள் இங்கு நுழைவதற்கு முன்புவரை நிலம் என்பது சமூக சொத்தாகத்தான் இருந்தது. அவர்கள் வந்த பின்னால் தனியுடைமை என்பது உருவாகி நிலவுடமைச் சமூகங்கள் உருவெடுத்தன. கற் கோயில்கள் – பார்ப்பனர்கள் வருகை – நிலவுடமைச் சமூகம் தோற்றம் – பேரரசுகளின் தோற்றம் இவைகளெல்லாம் சமகாலத்தில் நடந்தவை. அப்போது இந்த நிலவுடமைச் சமூகத்தவருக்கு உழைப்புச் சுரண்டல் செய்வதற்கான தத்துவங்களை வந்தேறிப் பார்ப்பனர்கள் வழங்கினார்கள்.
எங்களிடம் சனாதன தர்மம் என்ற வாழ்வுமுறை இருக்கிறது. அந்த சனாதன தர்மத்தை அரசர்களே நீங்கள் கைகொண்டீர்கள் என்றால் உங்களுக்கு எல்லா நிலங்களும் விளையும், விருப்பப்பட்டால் ஊதியம் வழங்கலாம், உழைப்பை சுரண்டி கொழுக்கலாம் என்றனர். அதை மன்னர்களும் நிலவுடமையாளர்களும் கைக்கொண்டார்கள். அந்த சனாதன தர்மம் நிலைநிறுத்தப்பட்டது.
புறநானூறில் ஜாதிகளை குறிப்பிடவில்லை. ஆனால் குடிகளைப் பற்றி பேசியிருக்கிறது. குடிகளும், குலங்களும், வெவ்வேறு தொழிற்பிரிவுகளும் மெல்ல மெல்ல ஜாதிகளாக மாற்றப்பட்டன. ஜாதிகளாக மாறிய பிறகு இவர்கள் தங்கள் ஜாதிகளை மாற்ற முடியாது என்று கட்டாயமாக்கப்பட்டது. இப்படித்தான் சனாதனம் என்பது தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது.
சனாதனம் என்பது ஆரிய மதம். ஆரியர்களின் சமூகக் கட்டமைப்புக்கு பெயர் வர்ணாசிரம் தர்மம். அது அவர்களுடைய நூல்களிலேயே வருகிறது. வருண + ஆஸ்ரம + தர்மம் = வர்ணாசிரம தர்மம். பிராமண – சத்திரிய + வைசிய + சூத்திரர், இது வருண தர்மம். ஆஸ்ரம தர்மமென்றால் ஒவ்வொரு ஆரியருடைய வாழ்க்கையிலும் நான்கு பருவங்கள் இருக்கிறது. பிரம்மச்சாரி – பாடம் படிப்பவர், கிரகஸ்தா = திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்த வேண்டும், வன பிரஸ்தன் – காட்டுக்குள் சென்று நூல்களைப் படிக்க வேண்டும், சன்னியாசி– எல்லாம் துறந்தவனாக இருக்க வேண்டும். இது ஒவ்வொரு ஆரியனுக்கும் கட்டாயம். அந்த ஒட்டுமொத்த ஆரிய சமூகமும் அவனவன் கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும். மாறக்கூடாது, இதுதான் வர்ணாசிரம தர்மம்.
பார்ப்பனர் ஒருவர் ஓடிவந்து இராமா..! எனது மகன் இறந்து போனான், உனது ஆட்சியிலே எவனோ ஒருவன் தர்மத்தை மீறி இருக்கிறான் என்று சொன்னான். இல்லை தர்மத்தை மீறி இருக்கமாட்டான் என்று இராமன் கூற, இல்லை எவனோ ஒருவன் தனது ஜாதித் தொழிலை விட்டுவிட்டு உயர்ந்த ஜாதித் தொழிலை செய்கிறான். அதனாலல்லவா எனது மகன் இறந்தான் என்று கூற, உடனே இராமன் வாளை எடுத்துக்கொண்டு மலை மேல் ஏறிப் போகிறார். மலையில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அந்த புற்றில் ஒருவன் தலைகீழாக நின்று தவம் செய்துகொண்டிருந்தான்.
இராமன் : என்னது ஒரு சூத்திரன் தவம் செய்வதா? என்று கூறி சம்பூகனின் கழுத்தை அறுத்துக் கொண்டு வருகிறார் இராமன். என்ன ஆச்சரியம் இறந்து கிடந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். இவ்வாறு இராமன் வர்ண தர்மத்தை காத்தார். அதனால் தான் இராமனுக்கு கோயில் கட்டுகிறார்கள். இராமனுக்கு கோயில் கட்டுவதன் அர்த்தம் என்னவென்றால் இந்த நாட்டில் வருங்காலத்தில் கோயில் கட்டப்படும் என்று அர்த்தம். வர்ணாசிரம தர்மம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று அர்த்தம்.
இந்த தர்மத்தை தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டுவந்து சனாதன தர்மத்தை கடைபிடிக்க வைத்தார்கள். சனாதம் என்றால் மாறாதது. நிலையானது. இது மனுஸ்மிருதி, பகவத்கீதை, பாகவத புராணம் உள்ளிட்டவைகளில் வருகிறது. என்ன நிலையானது என்று கேட்டால் சூத்திரன் சூத்திரனாகவே இருக்க வேண்டும். பிராமணன் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும். இது இறைவன் வகுத்தது. இன்னொருவன் மாற்ற முடியாதது. மாற்ற வேண்டுமென்று நினைத்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அது அனுமதிக்க முடியாதது.
பிராமணனே என்றென்றும் தலைவன். பிராமணனுக்கு அடுத்தது இடைநிலை, கடைசியில் சூத்திரன், அவன் நிரந்தர அடிமை என்பது சனாதனம், அதாவது நிலையானது. இது எவ்வளவு காலமாக நிலைநிறுத்தப்பட்டுவருகிறது. இதை யார் மீற நினைத்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள். இதை மாற்றியமைக்க முயற்சித்த புத்தரையே இன்றைக்கு விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக மாற்றி மூழ்கடித்துவிட்டனர் பார்ப்பனர்கள். புத்த மதத்தை பரப்பிய அசோகரின் சந்ததியில் வந்த கடைசி மன்னர் பிரகத்ரதன் தனது படை அணிவகுப்பை பார்த்துக் கொண்டு வரும்போது புஷ்யமித்ர சுங்கன் என்னும் பார்ப்பான் வெட்டி துண்டாக்கி வீசிவிட்டு ஆட்சியை கைப்பற்றி மீண்டும் சனதன தர்மத்தை நிறுவினான். நிறுவி ஒரு புத்த பிட்சுவின் தலையை கொண்டுவந்தால் 100 பொற்காசுகள் என்று அறிவித்து புத்த பிட்சுகளையே அடியோடு அழித்தான் புஷ்யமித்ர சுங்கன்.
ஆர்.என்.ரவி என்ற பார்ப்பனர், சனாதனம் இந்தியாவின் ஆன்மா என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஜனவரி 26,1950-இல் நடைமுறைக்கு வந்தது. நவம்பர் 26, 1949-இல் இந்திய அரசியல் சட்டம் எழுதி முடிக்கப்பட்டது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னால் இந்தியாவிற்கு என்ன பெயர் வைப்பது என்ற விவாதம் நடைபெற்றது. காயிதே மில்லத் போன்றவர்கள், இந்தியா என்ற பெயர் சமய சார்பற்ற சொல். இந்த நிலப் பரப்பிற்கு அந்த காலத்தில் இருந்தே இந்தியா என்று தான் இருந்துவருகிறது. கிரேக்கர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஐரோப்பியர்கள் இந்தியா என்றுதான் குறித்திருக்கிறார்கள். ஆகவே இந்த நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது கோவிந்தாஸ் போன்றவர்கள் இந்தியாவிற்கு ‘பாரத வர்ஷா’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆரிய வர்ஷா என்று பெயர் வைக்க வேண்டும். இது ரிஷிகள் நடமாடிய இடம், ஆரியர்களின் புண்ணிய பூமி. ஆரியர்களின் பூர்வகுடி பரதன் ஆண்ட நிலம் இது. ஆகவே இதற்கு ஆரிய வர்ஷா என்று பெயர் வையுக்கள் என்று கோரிக்கை வைத்தார்.
உடனே ஜவகர்லால் நேரு, ஆரியர்கள் குடியேறிய இடத்திற்கு ஆரிய வர்ஷா என்று பெயர் இருக்கிறது. ஆகவே இந்தியாவிற்கு அந்த பெயர் வைக்க முடியாது என்று கூறினார். பாரதம் என்று வையுங்கள் அது புனித பெயர், இந்தியா என்பது அன்னியர்கள் கொடுத்த பெயர். ஆகவே இந்தியா என்பதை ஏற்க முடியாது என்றனர். இறுதியாக India that is Bharath, இந்தியா பாரத்தில் இருக்கிறது என்று கூறிய போது Bharath that is India என்று பெயர் வையுங்கள் என்றனர். இந்த சனாதனிகள், ஜாதிமத வெறியர்கள் அவர்களுடைய வெற்றியை அங்கு நிலைநிறுத்தினார்கள்.
பாரதம் அல்லது இந்து ராஷ்டிரத்தில் கிறுஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாழ அனுமதி கிடையாது. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் மாபெரும் தலைவர் சாவர்க்கர் கூறி இருக்கிறார். கிறுஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இல்லாமல் இந்துக்கள் மட்டுமே வாழும் நாடு. ஆனால் இந்துக்கள் சனாதன தர்மப்படி வாழ வேண்டும்.
காசி பல்கலைக்கழகம் 1890-களில் பள்ளிகூடமாக இருந்தது. மதன் மோகன் மாளவியா, அவருக்கு மண்ணுருண்டை மாளவியா என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்த பள்ளியில் பார்ப்பன பிள்ளைகள் படிப்பதற்கு சனாதன தர்மம் என்ற பாடத்தை உருவாக்கினார். அந்த நூலை 1905-இல் மதுரை பிரம்ம ஞான சபையின் தலைவர் பா.நாராயணன் சனாதனம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். அந்த நூல் மூன்று பகுதிகளை கொண்டது. அதில் இரண்டாவது தொகுதியில் ஆஷ்ரமங்கள் மற்றும் நான்கு வர்ணங்கள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அனைவருக்கும் கற்பித்தனர். அந்த சமூகக் கட்டமைப்புக்கு பெயர் வர்ணாசிரம தர்மம். அதில் பொருந்தி வாழக்கூடிய ஆரிய வாழ்வியலுக்கு பெயர் சனாதனம் என்று பெயர். எப்படி வாழ வேண்டும் விதிகளை விதிப்பதற்கு ஸ்மிருதி என்று பெயர். மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, யஜ்னவாக்ய ஸ்மிருதி இந்த மூன்று ஸ்மிருதிகளும் முக்கியமானவை. இதில் தான் பிராமணர்களை திட்டினால் 10 அங்குல கம்பியை பழுக்க காய்ச்சி அவனது கழுத்தில் சொருக வேண்டும். பெண்களுக்கு ஒருகாலமும் சுதந்தரம் என்பது கிடையாது, அது பிராமண வீட்டுப்பெண்ணாக இருந்தாலும் அவர்கள் சூத்திரர்களே என்று அந்த விதிகள் கூறுகிறது. அடிக்க வேண்டிய பட்டியலில் மத்தளத்திற்கு அடுத்தபடியாக பெண்கள் உள்ளனர். இந்த சனாதனத்தை தான் அவர்கள் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
(தொடரும்)
தொகுப்பு : விஷ்ணு
பெரியார் முழக்கம் 25012024 இதழ்