காங்கிரசின் வாக்குறுதிகளை வரவேற்போம்!
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாயை ‘திராவிட மாடல்’ திமுக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் இத்தகைய திட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. நேரடியாக மக்களிடத்தில் பணத்தை வழங்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் தூண்டி விடப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்றும், சாமானிய மக்களின் சமூகப் பொருளாதார ஏற்றத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது என்றும் இருக்கிற பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு, இத்திட்டமே பிச்சை போடுவது என மிக அநாகரீகமாகப் பேசி, மக்களிடத்தில் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறார். ஒரு திட்டம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் பின்பற்றுவார்கள். தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தை டெல்லி, கர்நாடகா போன்ற அரசுகளும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன. சில மாநிலங்களில் பாஜகவே இதை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது. அதையும் ‘பிச்சை’ என்று சொல்ல நடிகை குஷ்புவுக்கு தைரியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
தற்போது இதேபோன்றதொரு திட்டத்தை காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசுப் பணிகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதுவும் தமிழ்நாட்டில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும்.
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சாவித்ரிபாய் பூலே பெயரில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் ஊதியத்தை இரட்டிப்பாக்குதல், பெண்களின் உரிமைகள் குறித்து கற்பிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு சட்ட ஆலோசகர் நியமனம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. பாரட்டத்தக்க வாக்குறுதிகள் இவை, வரவேற்போம்.
பெரியார் முழக்கம் 21032024 இதழ்