பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது!
பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது! ஊழலில் சிக்கி கைது நடவடிக்கைக்கு ஆளானவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதா? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!
தமிழ்நாட்டு அரசு இத்துணைவேந்தர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை!
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு பெற தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்.
இத்துணைவேந்தர் மீது தனியார் நிறுவனத்தை பல்கலைக்கழகத்தில் துவங்கியது, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு மதிப்பு அளிக்காமல் பதிவாளரைப் பணியில் இருந்து விடுவித்தது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும் ஊழல் தொடர்பாக கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்வது கண்டனத்திற்குரியது. மேலும் இவர் மீது பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு புகார் மனுக்களை அளித்து உள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு அரசு இம்மாத இறுதிக்குள் துணைவேந்தர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டரசுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பும் வழங்கக் கூடாது. விரைவில் ஒரு நல்ல ஊழலற்ற துணை வேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
இது தொடர்பாக பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கம் ஆளுநருக்கும், தமிழக முதல்வருக்கும் அளித்துள்ள புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
13.06.2024
பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்