ஜாதிச் சங்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! – கழகத் தலைவர் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ஜாதிவெறி கும்பல் தாக்கிய சம்பவத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!
தாக்குதல் நடத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கை!
இது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் ஜாதி மறுப்பு காதல் இணைய ர்களுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜாதி அமைப்பு நடத்திவரும் பந்தல் ராஜா என்பவரின் தலைமையில் வந்த ஜாதி வெறி பிடித்த 25 பேர் கொண்ட கும்பல் காவல்துறை முன்பே அலுவலக கண்ணாடிகள் கதவுகள் பிரிட்ஜ் உள்ளிட்ட உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளார்கள்.
திருநெல்வெலி மாநகரம் பாளையங்கோட்டை நம்பிக்கை நகரில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மதன் குமார் (28) என்பவரும்,பெருமாள் புரத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரின் மகள் உதய தாட்சாயினி (23) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஜாதியை காரணம் காட்டி இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி 13.06.24 அன்று திருமணம் செய்வதற்காக திருநெல்வேலி மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்திருந்தனர்.
பெண்ணின் பெற்றோர் தங்களை தாக்க கூடும் என்று அஞ்சிய காதல் இணையர்கள் வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகதில் தங்களுக்கு ஜாதி வெறியர்களால் உயிர் அச்சம் இருப்பதாக கூறி பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்துள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட ஜாதி வெறியர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு கும்பலாக வந்து காதல் இணையர்களை கடத்தி பிரிக்கும் நோக்கில் வந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அவ்விணையர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்ட காரணத்தினால் கோபமடைந்த அக்கூட்டம் அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளது.
அங்கு இருந்த காவல்துறை தாக்குதலில் ஈடுபட்ட சிலரை அப்பொழுதே கைது செய்து உள்ளார்கள்.
தங்களின் சுய நலத்திற்காகவும், சொகுசு ஆடம்பர வாழ்க்கை வாழவும் ஜாதி வெறியை தூண்டிவிட்டு அப்பாவி இளைஞர்களை தவறாக வழிநடத்தியும் இது போன்ற வன்முறை தாக்குதல்களையும் நடத்தி விளம்பரம் தேடிக் கொள்ளும் சிறு சிறு ஜாதி அமைப்புகளை நடத்தும் ரவுடிகள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நீதி கொள்கையை நடைமுறைப்படுத்த திட்டங்கள் வகுத்து சீரிய வகையில் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசை இது போன்ற சம்பவங்களை பயன்படுத்தி அவப்பெயரை உண்டாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
அவற்றிற்கு இடம் கொடாத வகையில் இது போன்ற ஜாதி வெறிபிடித்த ரவுடிகளை அவர்கள் நடத்தும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு இந்த அரசு ஒடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
தங்கள் அரசியல் பணியுடன் ஜாதி ஒழிப்பு பணியையும் மேற்கொண்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் அலுவலகம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மேலும் இது போன்ற தாக்குதலை ஒரு எச்சரிக்கையாகவும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களில் இது போன்ற ஜாதி வெறியர்களின் தாக்குதலை நேர் நின்று எதிர்கொள்ள நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதும் அவசியம் என்றும் கருதுகிறோம்.
தற்போது ஜாதி வெறியர்களின் தாக்குதலுக்கு எந்நேரமும் ஆளாக்கப்படும் அபாயத்தில் இருக்கக்கூடிய உதய தாட்சாயினி – மதன்குமார் இணையர்களுக்கு தமிழ்நாடு அரசு தக்க பாதுகாப்பு வழங்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
15.06.24

பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

You may also like...