பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்? – ர.பிரகாசு
(நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் சார்பில் 14.04.2024 அன்று திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 20-வது கூட்டத்தில் ர.பிரகாசு ஆற்றிய உரை)
பாரதமா அல்லது இந்தியாவா? என்கிற விவாதத்தில் நாம் எந்த பக்கம் நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது. அதனால்தான் பாரதமும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். தனித் தமிழ்நாடு கொள்கையைக் கொண்ட திராவிட இயக்கம் இந்தியா பக்கம் நிற்க வேண்டிய தேவை எங்கே எழுகிறது என்ற கேள்வியை சிலர் முன்வைக்கிறார்கள். ம.பொ.சி.-யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தமிழ்தேசியர்களிடம் இருந்தே இக்கேள்வி பெரும்பாலும் எழுகிறது. தெற்கெல்லை போராட்டத்தில் பெரியார் எடுத்த நிலைப்பாடுதான் இதற்கும் சரியான பதிலாகும் என்று கருதுகிறேன். தேவிக்குளம், பீர்மேடு என்ற 2 பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டம் எழும்போது, முதலில் தட்சணப் பிரதேசத்தில் இருந்து நாம் தமிழ்நாட்டைக் காக்க வேண்டுமென்று பெரியார் கூறினார்.
அதாவது, முதலில் தலையைக் காப்போம், பிறகு தலைப்பாகையை காப்போம் என்பது பெரியாரின் நிலைப்பாடாக இருந்தது. அதேபோலத்தான் இப்போதும் இந்தியாவை முதலில் காக்க வேண்டிய காலச்சூழலுக்கு 10 ஆண்டுகால பாஜக ஆட்சி நம்மைத் தள்ளியிருக்கிறது. இந்தியா பாரதம் ஆகிவிட்டால், எதை நோக்கி நகரும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இந்தியா என்பது மிச்சசொச்ச ஜனநாயகத்தின் இருப்பாக இருக்கும். ஆனால் பாரதம் என்பது இந்து ராஜ்ஜியத்தை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். அதனால் நாம் இன்றைய காலச்சூழலில் பாரதத்திற்கு எதிராக இந்தியாவின் பக்கம் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
பாரதம் சர்ச்சை வலுத்தது எப்போது?
இந்தியா என்பதையே மறுத்துவிட்டு பாரதியம் என்ற சொல்லாடலை மட்டுமே பாஜக பயன்படுத்தத் தொடங்கியது 2023ஆம் ஆண்டு ஜூலையில்தான். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிட்டதை அடுத்து நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பயன்படுத்தும் முடிவுக்கு அக்கட்சி வந்தது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இனி பாடத்திட்டங்களில் ‘பாரத்’ என்று மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று கூறியது. ஆனால் “இந்தியா, பாரதம் இரண்டுமே பயன்பாட்டில்தான் உள்ளது. பாரதம் என்று மட்டும் பயன்படுத்த முடியாது” என கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. ஜி20 நாடுகளின் டெல்லி மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்புக் கடிதத்தில் கூட President of bharath என்றே பயன்படுத்தினார்கள். அப்படியானால் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதை ரிசர்வ் பேங்க் ஆஃப் பாரத் என்றும், இந்திய வெளியுறவுத்துறை என்பதை பாரத வெளியுறவுத்துறை என்றும் மாற்றுவீர்களா என்று கேள்வி எழுப்பினார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
அரசியலமைப்புச் சட்டத்திலேயே பாரத் என்று இருக்கிறது, அதனால் இனி பாரத் என்றே அழைப்போம் என்றெல்லாம் பாஜகவினர் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இனி எல்லா வகையான பயன்பாட்டுக்கும் நாட்டின் பெயரை பாரத் என்றே அழைக்க உத்தரவிட வேண்டுமென்பது மனுதாரரின் முறையீடு. டி.எஸ்.தாக்கூர், யு.யு.லலித் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “அரசியலமைப்பு சபையில் நீண்ட விவாதத்திற்கு பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டது. எனவே இதற்காக Article 1-இல் திருத்தம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் ஏற்படவில்லை” என்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சகமும் இதே பதிலையே தெரிவித்தது. ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் பாரதம் என்றுதான் சொல்ல வேண்டுமென்ற நிலைக்கு பாஜகவை தள்ளியது எதிர்க்கட்சிகளின் கூட்டணிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மீண்டும் 2020-இல் இதே கோரிக்கையுடன் ஒரு வழக்கு தொடரப்பட்டபோதும், உச்சநீதிமன்றம் அதற்கான தேவை இல்லை என்றுகூறி நிராகரித்தது.
‘ஒன்றியம்’ என்பதை ஏற்க தயாரா?
அரசியலமைப்புச் சட்டத்தில் பாரத் என்று இருப்பதால் அப்படியே அழைக்க வேண்டுமெனச் சொல்பவர்களுக்கு இன்னொரு கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது. India that is Bharath என்பதுடன் சேர்த்து shall be a union of states என்பதும் உள்ளது. பாரத் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சங்கிகள் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? ஏன் ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களின் உரிமையை நசுக்குகிறது? “இந்தியா என்பது கிழக்கிந்திய கம்பெனி கொடுத்த பெயர். பாரதம் என்பது 7,000 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள பெயர். பாம்பே மும்பை ஆனதுபோல இதுவும் ஒரு சாதாரண மாற்றம்” என்றும் பாஜகவினர் விளக்கம் தர முயன்றனர். சரி, இந்து என்ற பெயர் எத்தனை ஆயிரம் வருடங்களாக புழக்கத்தில் இருக்கிறது? அதுவும் ஆங்கிலேயர் கொடுத்த பெயர்தானே? அதை மாற்றவோ அல்லது ‘இந்து’ என்ற சொல்லை பயன்படுத்தாமல் தவிர்க்கவோ பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு துணிச்சல் இருக்கிறதா?
வெறும் அரசியலுக்காக மட்டுமே ‘பாரத்’ என்ற சொல்லை பாஜக பயன்படுத்துகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கால அடையாளங்கள், முகலாயர் ஆட்சிக்கால அடையாளங்களை அழிக்க வேண்டுமென்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்திட்டங்களில் ஒன்று. கடந்த ஆண்டு செப்டம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இனி இந்தியா என்று யாரும் சொல்ல வேண்டாம். பாரத் என்றே பயன்படுத்துவோம். உலகில் எங்குமே சிறப்புப் பெயர்களை மாற்ற மாட்டார்கள். பாரதம் என்பது நமக்கு சிறப்புப் பெயர்” என்று பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ‘இந்தியா’ என்பது இந்துக்களின் ராஜ்ஜியமாக மாற வேண்டுமென்பதுதான் ஒற்றை லட்சியம். அந்த லட்சியத்திற்கு இன்றைக்கு தடையாக இருப்பது ‘இந்தியா’. ஜனநாயகப் பாதையில் செல்லும் வரை அந்த லட்சியத்தை அடைவது எளிதானதல்ல. எனவே இந்தியா பாரதமாக மாறும்போதுதான் இந்துராஜ்ஜியத்திற்கான பாதை தெளிவாகும். அதனால்தான் பாரதம் என்றே பயன்படுத்த வேண்டுமென்று மிக அழுத்தமாகக் கூறுகிறார் மோகன் பகவத். 2017-இல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் மோகன் பகவத் பேசியது இன்னும் பொருத்தமாக இருக்கும். “ஜெர்மனி ஜெர்மானியர்களுடையது, அமெரிக்கா அமெரிக்கர்களுடையது. அதுபோல இந்தியா இந்தியர்களுடையது. அதற்காக மற்றவர்கள் இருக்கக்கூடாது என்று பொருள் அல்ல. இந்திய கலாச்சாரத்துடன் ஒத்து வாழ்பவர்கள் அனைவரையும் குறிக்கும் சொல் இது” என்றார். ஆக, இந்து கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கலாம், மற்றவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை என்பதுதான் மோகன் பகவத் பேச்சின் சாராம்சம். அதைத்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
இசுலாமியர்களே ஆர்.எஸ்.எஸ்.-ஸின் முதல் எதிரி
இந்து மகாசாபையும் நீதிக்கட்சியும் சமகாலத்தில் தொடங்கப்பட்டவை. அடுத்த 10 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் உருவாகிவிட்டது. நீதிக்கட்சி எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவக் கோட்பாட்டை ஏந்தியது. கல்வி, வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தது. ஆனால் இந்து மகாசாபாவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் இந்துக்களுக்காக ஒரு தேசம் அமைக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்தியா இந்துக்களின் நாடு என்பதில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தோற்றுவித்த ஹெட்கேவர் மிக உறுதியாக இருந்தார். இந்து தேசத்திற்கு எதிரிகளே முஸ்லிம்கள்தான் என்று பேசினார். முஸ்லிம்களை யவனப் பாம்புகள் என்று சாடினார்.
பிஷிக்கர் என்பவர் தருண் பாரத் பத்திரிகையில் ஹெட்கேவர், தீன் தயாள் உபாத்யாயா உள்ளிட்டோர் குறித்து எழுதியுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இலக்குகள் என்ன என்பதை மிகத் தெளிவாக எழுதியுள்ளார். சிறுபான்மை ஆணையத்தை மூடுவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்குவது, சிறுபான்மை அமைப்புகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதை தடுப்பது போன்றவற்றை லட்சியங்களாக அவர் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறுபான்மை ஆணையம் செயலிழந்துவிட்டது, பிரிவு 370 நீக்கப்பட்டுவிட்டது, சிறுபான்மை அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவது மிகக் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். எத்தகைய அபாயமான அமைப்பு என்பதற்கு அந்த அமைப்பு உருவான காலத்தில் இருந்தே எச்சரிக்கைகள் இருந்துகொண்டே உள்ளன. 1932-இல் தசரா கொண்டாட்டத்தை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். நடத்திய பேரணி தொடர்பாக உளவுத்துறை அப்போது ஒரு அறிக்கையை அரசிடம் கொடுத்தது. “இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை இந்துக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். மற்றவர்கள் தலையீட்டை பொறுத்துக்கொள்ள முடியாது” என ஹெட்கேவர் பேசியதாக உளவுத்துறை அறிக்கை அளித்தது. 1940-இல் அதிகாரிகள் பயிற்சி முகாமில் ஹெட்கேவர் பேசும்போது, “இங்கே ஒரு குட்டி இந்து ராஜ்ஜியத்தையே காண்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இது ஆர்.எஸ்.எஸ். எத்தனை ஆபத்தான அமைப்பாக வளர்ந்து வந்தது என்பதை உணர்த்துகிறது.
ஹெட்கேவர் மறைவுக்குப் பிறகு கோல்வாக்கர் காலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி வேகமெடுத்தது. ஹெட்கேவர் காலத்தில் 50 சாகாக்கள் இருந்த நிலையில், கோல்வாக்கர் காலத்தில் 1,000ஆக அதிகரித்தது. உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அதிகரித்தது. 1946- 47 வரையிலும் ஆர்.எஸ்.எஸ். பணிகள் பெரும்பாலும் ரகசியமாகவே இருந்தன. பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாடுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கையாக இருந்தது. ஏனெனில் இன்னும் சிறிது காலத்தில் நாட்டை விட்டுப் போகப்போகிற ஆங்கிலேயர்களை ஏன் வீணாக எதிர்க்க வேண்டும்? இந்துராஜ்ஜியத்திற்கு முஸ்லிம்களே முதல் எதிரி என்ற சிந்தனைப்போக்கைக் கொண்டிருந்தது ஆர்.எஸ்.எஸ்.
அன்றே எச்சரித்த உளவுத்துறை
நாக்பூரில் மத்திய, மாகாண அரசுகளிடம் சமர்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, ஆர்.எஸ்.எஸ். எத்தகைய பயங்கரவாத அமைப்பு என்பதை தெளிவுபடுத்தியது. “ஆர்.எஸ்.எஸ். மேலும் தயாராகும் வரை, அவர்களுடைய தலையீட்டுக்கு உகந்த சூழல் உருவாகும் வரை அமைதிகாப்பார்கள். அதுதான் அவர்களின் தந்திரம்” என்று அந்த அறிக்கை சொன்னது. தற்போதைக்கு சங் பரிவார் அபாயமற்றதாக இருக்கலாம், ஆனால் மதக் கலவரம் நடக்கும் சமயத்தில் மிக மோசமாக மாறலாம் என்றும் அந்த அறிக்கை எச்சரித்தது.
ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய இந்துராஜ்ஜிய கனவை அடைய தேர்ந்தெடுத்த வழி மிக ஆபத்தானது. ஹிட்லர், முசோலினியின் கொள்கைகளின் வழியில் இந்துராஜ்ஜியத்தை அடைவது எளிதானது என்று கருதினார்கள். அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கினார்கள். இத்தாலிய அறிஞரான மார்சியா கேசலோரி இந்த கோணத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தின் தரவுகள் மற்றும் ரோம் நகரில் இருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களை ஒப்பிட்டு இந்த கட்டுரையை அவர் எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பெ, “1930-களில் இந்துத்துவத்தின் அந்நியக் கூட்டணி; ஆவணக் காப்பகச் சான்று” என்பதுதான்.
குறிப்பாக மூஞ்சே 1931-இல் இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தார். அதற்குப் பிறகுதான் இந்துராஜ்ஜியத்தின் எதிரி இசுலாமியர்கள் என்று உறுதிபட இலக்கு நிர்ணயித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்படத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் இத்தாலியில் இருந்த பாசிச இளைஞர் அமைப்பின் செயல்திட்டங்கள் உட்புகுத்தப்பட்டன. சாகாக்களில் மாணவர்களை வயது வாரியாக பிரித்ததும் அதனடிப்படையில்தான். சாகாக்களில் ஆயுதம் கொடுப்பதைப் போலவே, பாசிச இளைஞர் குழுக்களும் மாணவர்களை ஆயுதமேந்த வைத்தன. இவ்வாறு நாஜிக்கள், பாசிச குழுக்களிடம் இருந்த பல ஒற்றுமைகள் ஆர்.எஸ்.எஸ்.ஸிடமும் காணப்படுகின்றன.
சாவர்க்கர் இன்னும் பல படி மேலே போய் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தார். “முஸ்லிம்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ இது தாய்நாடு இல்லை. அரேபியாவோ, பாலஸ்தீனியமோதான் உங்களுக்கு தாய்நாடு. இது தந்தை நாடுதான் உங்களுக்கு. எனவே நீங்கள் தாய் மதம்” திரும்ப வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசினார் சாவர்க்கர். ஒரு தூய்மையான இந்து தேசியம் என்றால் என்ன என்று bunch of thoughts-இல் விவரித்து விளக்கியிருப்பார் கோல்வாக்கர்.
இந்துக்களுக்கே எதிரானது இந்துராஜ்ஜியம்
ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இந்துராஜ்ஜியம் என்பது ஏதோ இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அது பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கான ராஜ்ஜியமாக ஒருபோதும் இருக்காது. பார்ப்பனர்களுக்கான நலன் பேணும் ஒரு ராஜ்ஜியமாகவே அது இருக்கும் என்பதுதான் வரலாற்றில் இருந்து நாம் பெறும் எச்சரிக்கை. இந்துராஜ்ஜியம் என்பது அரசியலுக்காக பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்ட பயன்படுத்தப்படும் வார்த்தை. உண்மையில் ராமராஜ்ஜியம் என்பதுதான் சரியான பெயர்.
ராமராஜ்ஜியத்தில்தான் சூத்திரனான சம்பூகன் தவம் இருந்ததற்காக, பார்ப்பனர் முறையீட்டின் அடிப்படையில் ராமனால் கொல்லப்பட்டார். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும் முன், தனது சகோதரனிடம் பார்ப்பனர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள் என்று கட்டளையிட்டுச் சென்றார். வனத்திற்குள் தன்னை பார்க்க வந்த சகோதரனிடம், நாட்டில் பிராமணர்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா என்று கேட்டதாக வால்மீகியின் ராமாயணம் சொல்கிறது. அதுமட்டுமா பவுத்தர்கள் போன்ற நாத்திகர்களிடம் நீ பழகாமல்தானே இருக்கிறாய்? திருடனும் நாத்திகனும் ஒன்று என்றெல்லாம் ராமன் அறிவுறுத்தியதாகவும் ராமாயணம் சொல்கிறது. இப்படிப்பட பாரபட்சமான பார்ப்பன நலன் பேணும் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்று சங்கிகள் பெருமை பேசுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியிலும் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை ஒரே நாளில் நிறைவேற்றிவிட்டார் நரேந்திர மோடி. இந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பாதிப்படையாத ஒரே சமூகம் பார்ப்பன சமூகம்தான். ஆக, இந்த மோடி ஆட்சி ராமராஜ்ஜியத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை வேகப்படுத்த வேண்டுமென்றால் இந்தியாவாக இருந்தால் சரிவராது. அதனால் பாரதமாக மாற்றிவிட வேண்டுமென்று துடிக்கிறார்கள். பாரதமாக மாறிவிட்டால் அரசியலமைப்புச் சட்டம் இருக்காது, அரசியலமைப்புச் சட்டம் இல்லாவிட்டால் ஜனநாயகம் இருக்காது. ஜனநாயகம் இல்லாவிட்டால் கருத்துரிமை இருக்காது. கருத்துரிமை இல்லாவிட்டால் ஒன்றிய அரசை எதிர்த்து நியாயமான குரல்களைக் கூட எழுப்ப முடியாது. ஆகவே பாரதத்தை எதிர்த்து இந்தியாவின் பக்கம் நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த அடிப்படையில் பாரதத்திற்கு எதிராக, ஜனநாயக இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்.
பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்