பெரியார் பல்கலை-யை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். வேண்டும் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி (அதன் உண்மைத் தன்மையையும் ஒரு மருத்துவக் குழு உறுதி செய்ய வேண்டும்) மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.
2024 ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது.ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல் எந்த முன்னெடுப்புகளும் தீவிரமாய் எடுக்க முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம்.
இன்னொரு பக்கம் பிணையில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாகவே நாம் அறிகிறோம்.வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கின்றன என்ற நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்றோ, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகளைப் பற்றிய அக்கறையில்லாமல் அங்கு இருக்கிற பல்வேறு பதிவேடுகள் எடுக்கப்படுவதும் வைக்கப்படுவதுமான செயல்பாடுகள் நடக்கின்றன என்றாலே சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார் என்று தான்பொருள். அவ்வாறாயின் புதிய நிபந்தனைகளையாவது அறிவித்தாக வேண்டும் அல்லது உரிய காப்பு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
அதோடு பல்கலைக்கழகத்தில் எதுவும் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதற்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்து தான் தீர வேண்டும்.
நாம் ஏற்கனவே பலமுறை துணைவேந்தர் மீது விசாரணை நடத்துகிற போது ஒரு பொறுப்புள்ள அய்.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து அவர் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இயங்குவற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்; அப்போதுதான் அவர்கள் செய்துள்ள முறைகேடுகளை நிரூபிக்க முடியும் என்ற காரணத்தால் இந்த வேண்டுகோளை கைதுக்கு முன்னதாகவே பல வேளைகளில் நாம் வைத்திருக்கிறோம்.
இப்போது உள்ள நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வேண்டுகிறோம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் இல்லாமல் இருக்கிற நிலையும் அவர்களுடைய முறைகேடுகளை சரியாக விசாரிப்பதற்கு ஏதுவாகவும் பல்கலைக்கழகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பில் இயங்கச் செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசையும் உயர் கல்வித் துறையையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
02.01.2024
பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்