மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஏற்காதபோது பெரியார் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே இருந்த பார்ப்பனர்கள் கூச்சலிட, அவர்களைப் பார்த்து, “நீங்கள் கூச்சலிட்டு நான் அமைதியாக வேண்டுமா? நாங்கள் திரும்பி கூச்சலிட்டால் நீங்கள் என்ன ஆவீர்கள் என யோசித்துப் பாருங்கள்” என்றாராம் பெரியார். அப்படித்தான் மார்கழி மாதம் வந்துவிட்டாலே போதும்… பார்ப்பனர்கள் சில நூறு பேர் சபாக்களை நடத்துவதும், பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்பட்ட இந்த சபாக்கள் இல்லாவிட்டால் சென்னைக்கு இசையே இல்லை என்பதுபோல, பார்ப்பன ஏடுகள் பக்கம், பக்கமாக சிலாகித்து எழுதுவதும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், இப்போதெல்லாம் மார்கழி மாதம் வந்துவிட்டாலே “மார்கழியில் மக்களிசை” எங்கே நடக்கிறது என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், 4-வது ஆண்டாக மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பகுதியில் டிசம்பர் 30, 31 ஆகிய 2 நாட்கள் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னையின் இசை சபாக்களில் இல்லை, கானாக்களில்தான் இருக்கிறது என ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் மக்களிசைக்கு கூடிக்கொண்டே செல்லும் மக்கள் கூட்டம் நிரூபித்து வருகிறது. பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனிய எதிர்ப்பை, நவீன முறையில் மேற்கொள்ளும் நீலம் பண்பாட்டு மையத்தின் இம்முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்

You may also like...