பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு கண்டனம்

சேலம் பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர்கள் 77 பேருக்கு கருத்துக்கேட்பாணை‌ வழங்கிய துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்திக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!
உத்தரவை உடனே திரும்பப் பெற வலியுறுத்தல்!
இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை :
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், அரசு இருமுறை அறிவுறுத்தியும் பதிவாளர் மீது பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காதத் துணைவேந்தரைக் கண்டித்து ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டங்களைப் பணி நேரத்திற்கு முன்பும் பின்பும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்காத வண்ணம் அறவழியில் நடத்தின.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத துணை வேந்தர் போராட்டம் நடத்திய 77 பேரையும் மிரட்டும் வகையில் காரணக் கேட்பு கடிதம் அனுப்பி உள்ளார். இது போராட்டங்கள் நடத்துவதை ஒடுக்கும் செயலாகும்.
காரணக் கேட்புக் கடிதம் கொடுத்த பதிவாளர் யார் எனில், பதிவாளர் பதவிக்குத் தேர்வான பின்னர் ஆட்சிக் குழுவால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் தான் பதிவாளர் பொறுப்பு விசுவநாதமூர்த்தி. நிரந்தரப் பதிவாளர் பதவிக்குத் தகுதி இல்லாத ஒருவர் எப்படி பொறுப்புப் பதிவாளராக வரமுடியும்?
எனவே உடனே நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இந்த உத்தரவினைத் திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் – ஆசிரியர் விரோதத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (பொ) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய அறிவுறுத்தலையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
22.07.2024

பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

You may also like...