தலையங்கம் : கள்ள மவுனம்!
19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது.
மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கச் செய்துள்ளது.
ஜாதியமைப்பு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதி யினரின் ‘உயிர்’ ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவது இல்லை. இப்படித்தான் உ.பி. மாநிலத்தில் கத்ரா மாவட்டத்தில் இரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப் பட்டுள்ளனர். இந்தக் கொடும் செயலைப் புரிந்த 7 பேர் கொண்ட கும்பலில் இருவர் காவல்துறையினர். உ.பி. அரசு முதலில் அலட்சியம் காட்டி, புறக்கணித்த இந்த வழக்கு, இப்போது நாடு முழுதும் கடும் கண்டனத்தை உருவாக்கிய பிறகு சிபி.அய். விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அய்.நா.வில் பொதுச் செயலாளர் பான்.கி.மூன், “இந்தியா, பாகிஸ்தான், நைஜிரியாவில் – பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குல்கள் அதிர்ச்சியைத் தருகின்றன” என்று கூறியுள்ளார். அய்.நா.வின் குழந்தைகள் நிதியத்தின் இந்தியப் பிரதிநிதி லூயிஸ் ஜார்ஜ் அர்செனாட், “இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் 65 சதவீதம் பேர் கழிவறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக் கின்றனர். இதனால் பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் அவர்களின் பாதுகாப்புக் கேள்விக்குரியாகியுள்ளது” என்று பேசியுள்ளார்.
சேரிகள் இல்லாத கிராமங்கள் இல்லை; கழிப்பறைகள் இல்லாத வீடுகளே அதிகம். ஜாதிய ஒடுக்கு முறைகளும் வன்கொடுமைகளும் வாழ்வியல் போக்குகளாகவே மாறிவிட்டன. அய்க்கிய நாடுகள் அவையிலேயே விவாதங்கள் வந்தால்கூட இந்த நாட்டில் இவைகள் பிரச்சினைகளாகவே மதிக்கப்படுவதில்லை. மோடியின் ஆட்சி நாட்டை எதிர்நோக்கியுள்ளதாக பட்டியலிட்டுள்ள செயல்திட்டங்களில் இந்த ஜாதி, தீண்டாமைகள் எதுவும் இடம் பெறவே இல்லை. வளர்ச்சி வீதம், கட்டமைப்பு வசதி, அன்னிய முதலீடு, நிதிப் பற்றாக்குறை, அன்னிய செலாவணி என்ற சொல்லாடல்களுக்குள்ளே பிரச்சினைகள் முடங்கிப் போய்விடுகின்றன.
தீண்டாமைக் கொடுமை; அதன் அடித்தளமான ஜாதியமைப்பு; பெண்கள் மீதான ஒடுக்கு முறை; தலித் பெண்கள் சந்திக்கும் பாலின வன்முறைகள்; மதிப்பிழந்து போய் நிற்கும் இவர்களின் உழைப்புச் சந்தை; இந்த அவலங்களைப் புனிதப்படுத்தும் மதம், மதச் சடங்கு, பக்தி, கலாச்சாரம், சமூக ஒழுங்கு இவைகளைப் பற்றி எல்லாம் பேசுவதற்கோ, போராடுவதற்கோ, மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கோ, கட்சிகளையோ இயக்கங்களையோ காண முடிகிறதா? இத்தகைய இயக்கங்களும் அதற்கான போராட்டங்களும் முன்னெடுக்கப்படாத வரை இந்த சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியுமா? இந்த பேதங்களை உறுதிப்படுத்திக் கொண்டே அரசு கொண்டுவர முயலும் திட்டங்களின் பயன்கள் ஒடுக்கப்பட்ட மக்களை சென்று அடையுமா? இந்த அடக்குமுறைகளுக்கு துணை போகும் அதிகார மய்யங் களான காவல்துறையும் நிர்வாக அமைப்பும் மாற்றியமைக்கப்படுவதற்கோ மக்களுக்கு நீதி வழங்கு வதற்கோ இந்த அரசுகள் கடுகளவு முயற்சிகளையாவது மேற் கொள்கின்றனவா?
சமூக மாற்றம் – சமூக விடுதலை – அரசியல் மாற்றம் பற்றியெல்லாம் தத்துவங்களையும் நடைமுறைகளை விவாதித்துக் கொண்டிருக்கும் இயக்கங்களாவது இது பற்றிக் கவலைப்படுகிறதா?
நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்!