இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?
காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது. இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபோது அமைதிகாத்தது போலவே, இப்போதும் அமைதிகாக்கிறது மோடி அரசு. வணிக நோக்கித்திற்காக இன அழிப்புக்கு உதவும் டிரோன்களை தயாரித்து அனுப்பும் அதானி குழுமத்தின் நடவடிக்கையை தடுக்காமல், ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதும் இன அழிப்புக்கு துணைபோகும் செயலே என கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
பெரியார் முழக்கம் 15.02.2024