பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!
1980-களில் பாஜக தொடங்கப்பட்ட சமயத்தில் அது முழுக்க பார்ப்பன – பனியாக்கள் கூடராமாகத்தான் இருந்தது. இப்போதும் அதிகாரம் மிக்க உயர் பதவிகளில் அவர்கள்தான் இருக்கின்றனர் என்றாலும், ராமர் கோயில் இயக்கத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களை பொறுப்புகளில் அமர்த்தியது பாஜக. இப்போது கோயில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் மீண்டும் பார்ப்பனர்களுக்கே பதவி என்ற வழியில் வேகமாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக.
ஏற்கெனவே பார்ப்பனரான ஹிமந்த பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வராக நியமித்திருந்த பாஜக, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தானிலும் பார்ப்பனரான பஜன் லால் சர்மாவை முதல்வராக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேச துணை முதல்வராக ராஜேந்திர சுக்லா என்ற பார்ப்பனரையும், சத்தீஸ்கர் துணை முதல்வராக விஜய் சர்மா என்ற பார்ப்பனரையும் நியமித்தது பாஜக. ஏற்கெனவே உத்தரப் பிரதேச துணை முதல்வராக பிரஜேஷ் பதக் என்ற பார்ப்பனரும், மகாராஷ்டிர துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் என்ற பார்ப்பனரும் இருக்கிறார்கள். மக்கள் மிகச்சொற்பமாக இருக்கிற பார்ப்பனர்கள் பாஜக ஆட்சியில் 2 மாநிலங்களில் முதல்வர்கள், 4 மாநிலங்களில் துணை முதல்வர்கள். இதுதவிர கேபினட் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிற பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் சமூகத்தினருக்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாஜக ஆட்சியில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.
“அயோத்தியில் பிரதமர் மோடி ராமர் சிலையை நிறுவக்கூடாது, அவர் ஒரு சூத்திரர், சூத்திரர் சிலையை தொட்டு நிறுவினால் சமூக ஒழுங்கு என்ன ஆவது?” என்று கொதிக்கும் சங்கராச்சாரிகள் ஒருவர் கூட, பார்ப்பனர்கள் எப்படி நேரடியாக ஆட்சியதிகாரத்தில் அமரலாம்? அது சனாதன தர்மத்தை மீறும் செயல் என்று கேட்பதில்லை. பார்ப்பனர்கள் நலன் என்று வரும்போது எல்லா விதிகளையும் தளர்த்திக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு என்றால் இல்லாத விதிகளையெல்லாம் புதிது புதிதாக வகுத்து விடுவார்கள்.
பெரியார் முழக்கம் 18012024 இதழ்