தலையங்கம் ஜாதி-மத மறுப்புக்கு அரசு அங்கீகாரம்!
ஜாதி – மதங்கள், மனித சமூகம், கற்பித்த புனைவுகள், ஒருவர் ‘இந்து’ என்றாலே கட்டாயமாக ‘ஜாதி’ அடையாளத்தையும் சேர்த்தே சுமந்தாக வேண்டும். இந்துவும் ஜாதியும் பிரிக்க முடியாதவை. அதனால்தான் ஜாதிகளின் பட்டியல் தொகுப்பே இந்து மதம் என்று அம்பேத்கர் கூறினார். ஒருவர் தன்னைக் கடவுள், மத மறுப்பாளராக அறிவித்துக் கொண்டாலும் அவர் இந்து அடையாளத்திலிருந்தும் ஜாதி அடையாளத் திலிருந்தும் ‘சட்டப்பூர்வமாக’ விடுவித்துக் கொள்ள முடியாது.
இப்போது ஜாதி – மத அடையாளத்தி லிருந்து சட்டப்பூர்வமாக திருப்பத்தூரைச் சார்ந்த 35 வயது பெண் வழக்கறிஞர் சினேகா தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார். திருப்பத்தூர் தாசில்தார் டி.எஸ். சத்திய மூர்த்தி, சினேகாவுக்கு ‘ஜாதி – மதமற்றவர்’ என்ற அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கி யிருக்கிறார். இந்தியாவிலேயே முதல் முறை யாக ஒரு ‘குடிமகள்’(ன்) ஜாதி மதமற்றவர் என்று அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிற அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது. அது பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் தானே நிகழும்? அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.
இதற்காக தோழர் சினேகா நீண்ட போராட்டத்தை நடத்தியிருக்கிறார். “என்னுடைய பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ்களில் ஜாதி-மத மற்றவர் என்ற பதிவே இடம் பெற்று வந்திருக்கிறது. எந்த ஒரு விண்ணப்பத்திலும் ஜாதிக்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டிய கட்டாயமிருந்தது. அப்போதெல்லாம் எனக்கு ஜாதி மதம் கிடையாது என்று நானே சுயமாக அறிவிக்கும் உறுதிப் படிவத்தை இணைத்து வந்தேன். எனக்கான அடையாளம் ‘ஜாதி – மதமற்றவர்’ தான் என்ற உறுதியான முடிவுக்கு வந்த பிறகு, 2010ஆம் ஆண்டி லிருந்து இதற்கான போராட்டங்களைத் தொடங்கினேன். ‘ஜாதி மதமற்றவர்’ என்ற சான்றிதழ் எனக்கு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்த போதெல்லாம், அதிகாரிகள் அதை நிராகரித்து வந்தார்கள். இதற்கு முன் உதாரணம் இல்லை என்றார்கள். எனக்கு அரசின் சலுகைகளோ, இடஒதுக்கீட்டின் கீழ் பெறப்படும் உரிமைகளோ வேண்டாம்; நான் அதை மறுக்கத் தயாராகி விட்டேன் என்று அதிகாரிகளிடம் கூறினேன்.
திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் பி. பிரியங்கா முதன்முதலாக பச்சைக் கொடி காட்டினார். எந்த ஒரு விண்ணப்பத்திலும் ஜாதி – மத அடையாளத்தைக் குறிப்பிடாத ஒருவருக்கு ஏன் ஜாதி மதமற்றவர் என்ற சான்றளிக்கக் கூடாது? இதனால் வேறு ஒருவருக்கு எந்த இடையுறும் நிகழப் போவதில்லையே என்ற முடிவுக்கு வந்து ‘ஜாதி மத மற்றவர்’ என்ற சான்றிதழை வழங்கலாம் என்ற துணிவான ஒரு முடிவை எடுத்தார்” என்கிறார் சினேகா. பாராட்ட வேண்டும்.
தமிழ்நாட்டைச் சார்ந்த சினேகா என்ற பெண், ‘ஜாதி மதமற்றவர்’ என்ற அடையாளத்துக்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
ஜாதிய சமூகத்திலிருந்து ஒரு தனி மனிதர் தன்னை விடுவித்துக் கொள்வது என்பது சமூக மாற்றத்துக்கான போராட்டத்துக்கு ஒரு முன்னெடுப்பு; ஜாதி மத எதிர்ப்புக்கான குறியீடு; அதே நேரத்தில் சமூகமே ஜாதி-மத அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் சமூக மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அனைவருமே சான்றிதழ்களைப் பெற்றுவிடுவதால் மட்டுமே அது சாத்திய மாகிவிடாது. சான்றிதழ்கள் ஒடுக்கு முறைகளை ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விடாது.
ஒட்டு மொத்த சமூகம், மதம், ஜாதி அமைப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு இந்த நிறுவனங்களில் நடத்தப்படும் ஒடுக்குமுறைகள் சுரண்டல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்த நிறுவனங்கள் ஒடுக்கப் பட்ட உழைக்கும் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களிட மிருந்து பறித்து வைத்திருக்கும் கல்வி உரிமை, வேலை உரிமை, அரசு அதிகார உரிமை, பொருளாதார உரிமைகளை மீட்டு அவர்களை அதிகாரப்படுத்தும் நிலையை உரு வாக்க வேண்டும். அந்த திசையை நோக்கி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 21022019 இதழ்