இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

கறுப்பினப் போராளி, இன விடுதலை இயக்கங்களின் நாயகர், சிறைப் பறவை மண்டேலா, அம்பேத்கர் முடிவெய்திய அதே டிசம்பர் 6 ஆம் நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

“வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான வழியில்தான் எங்கள் போராட்டங்களை தொடங்கினோம். ஆனால், அரசு வன்முறையை ஏவியது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதால் நாங்களும் எங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டோம். நாங்கள் தேர்ந் தெடுத்தது வன்முறையைத் தானே தவிர, பயங்கரவாதத்தை யல்ல” என்று கூறிய மண்டேலா, பிறகு அந்த வன்முறைப் போராட்டத்தையும் கைவிட் டார். வரலாறாகிப் போன அந்த விடுதலை வீரர் பற்றிய சுருக்கமான வரலாறு இதுதான்: (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்)

18 ஜூலை 1918 அன்று தென்னாப்பிரிக்காவின் வெஸோ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ரோலிலாலா மண்டேலா. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் காட்லா. பள்ளி ஆசிரியருக்கு ரோலிலாலா வாயில் நுழையவில்லை போல. “இனி உன் பெயர் நெல்சன்” என்று சொல்லி விட்டார்.

கருப்பின மக்களை விடுவிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிர° மீது மண்டேலாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததுமே கட்சியில் சேர்ந்து விட்டார். கொள்கைக்கு கட்சி. சரி, பிழைப்புக்கு? முதலில் கிடைத்தது காவலாளி வேலை. பின்னர் உதவியாளர் உத்தியோகம். வக்கீல் குமா°தா என்று பல பணிகள். கூடவே, கட்சிப் பணி. என்றாலும், படிப்பை விட்டுவிடவில்லை. ஊழியத்தில் கிடைத்த ஊதியத்தைச் சட்டம் படிக்கப் பயன்படுத்தினார்.

கட்சியில் மண்டேலா வேகவேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர்தான் வேகமாக வளர்ந்தாரே தவிர, கட்சி மந்தகதியில்தான் இருந்தது. கருப்பர் களுக்கு எதிராக கடுமையான சட்டங்களையும் அடக்குமுறைகளையும் அரசாங்கம் ஏவியபோது மாய்ந்து மாய்ந்து மனு எழுதியது கட்சித் தலைமை.

வெறுப்பாக இருந்தது மண்டேலாவுக்கு. ‘உரிமை என்பது வெள்ளையரிடம் கூனிக்குறுகிக் கெஞ்சிப் பெறுவதல்ல. போராட்டத்தின் வழியாக நாமே எடுத்துக் கொள்வது’ என்றார். ஒத்த கருத்துடைய இளைஞர்கள் மண்டேலாவுக்குத் தோள் கொடுத்தனர். ‘தாய்க் கட்சி ஒரு பக்கம் இயங்கட்டும். நாமே தனியே இளைஞரணியைத் தொடங்கலாம்’ என்றார் மண்டேலா. கடிதம் போதும், களத்தில் இறங்கலாம் என்று முடிவு செய்தனர் இளைஞர்கள். சின்னதும் பெரியதுமாகப் போராட்டங்கள் நடந்தன. இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் தென்பட்டது. அது மண்டேலாவுக்குள் உத்வேகத்தைக் கிளப்பியது. ‘அமைதிக்கு விடைகொடுப்போம், ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைப்போம்’ என்றார். இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். அந்தச் சத்தம் அரசின் கவனத்தைக் கலைத்தது.

4 டிசம்பர் 1956 அன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார் மண்டேலா. வன்முறை வழியாக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தார், தேசத் துரோக காரியங்களில் ஈடுபட்டார், கம்யூனிசத்தைப் பரப்ப முயன்றார் என்று மண்டேலாவின் மீது பல குற்றச் சாட்டுகள். வழக்கு ஒரு பக்கம் நடக்க, பிணையில் வெளிவந்து பணிகளைச் செய்து கொண்டிருந்தார் மண்டேலா. அந்தச் சமயத்தில்தான் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு ஒரு மிகப் பெரிய படுகொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது. அதற்கு வரலாறு வழங்கிய பெயர், ‘ஷார்ப்வில் படுகொலை’. அப் போது கருப்பின மக்கள் எப்போதும் அடையாள அட்டையுடன்தான் இயங்க வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. சமூக ஒதுக்கலின் சத்திய சாட்சியமாக இருந்த அடையாள அட்டைச் சட்டத்துக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

21 மார்ச் 1960 அன்ற அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய கருப்பின மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அரசு. அந்தத் தாக்குதலில் அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலை நாடு தழுவிய அளவில் பலத்த அதிர் வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எல்லாவற்றுக்கும் காரணம் ஆப்பிரிக்க தேசிய காங்கிர° என்று முடிவு செய்த அரசு, அந்தக் கட்சியையே தடை செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று மண்டேலா முழங்கினார் அல்லவா, உண்மையில் அவர் அந்த முடிவை உடனடியாகச் செயல்படுத்தவில்லை. ஆனால் ‘ஷார்ப்வில் படுகொலை’ ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது. 12 டிசம்பர் 1961 அன்று ‘ஆப்பிரிக்காவின் ஈட்டி’ என்ற பொருள் வரும் வகையில் எம்.கே. என்கிற ஆயுத இயக்கத்தை ஆரம்பித்தார் மண்டேலா. அகிம்சைப் பயணம் ஆயுதப் போராட்டமாக மாறியது அந்தப் புள்ளியில் இருந்துதான். அரசுக்கு எதிராக கொரில்லா யுத்தத்தைத் தொடங்கினார். ஆங்காங்கே தாக்குதல் நடந்தன. அரசு மிரண்டது. போதாக்குறைக்கு நாடு தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செய்து, இளைஞர்களைத் திரட்டினார். தனியார் இராணுவத்தைக் கட்டமைத்தார். ஆயுதப் பயிற்சிக்காக இளைஞர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பினார். அல்ஜீரியா சென்ற மண்டேலா அங்கே ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இயந்திரத் துப்பாக்கியை இயக்கினார். வெடிகுண்டு தயாரித்தார்.

ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டு தென் னாப்பிரிக்கா திரும்பியபோது, மண்டேலாவைக் குறிவைத்து கைது செய்தது அரசு. வழக்கின் முடிவில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அத்துடன் மண்டேலாவை மன்னித்துவிட அரசாங்கம் விரும்பவில்லை. ஏற்கெனவே நிலுவை யில் இருந்த வழக்கின் மீது வெளிச்சம் பாய்ச்சப் பட்டது. அந்த வழக்கில் அரசாங்கம் முன்வைத்த அத்தனையும் அதிபயங்கர குற்றச்சாட்டுகள். ‘அரசைக் கவிழ்க்க சதி செய்தார், அரசுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபட்டார், மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டினார், ஆயுதக் குழுவை உருவாக்கினார், அரசுக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார்’ என்று இருநூறுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள். அந்தப் பட்டியலைப் பார்த்தபோது மரண தண்டனையைத் தவிர மாற்று இல்லை என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள்.

20 ஏப்ரல் 1964 அன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் மண்டேலா. மரணத்தின் நெருக்கத்தி லும் மண்டேலா உதிர்த்த வாசகங்கள்தான் கட்டுரையில் தொடக்கத்தில் இருப்பவை. வழக்கின் முடிவில் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ‘பிசாசுகளின் தீவு’ என்று வர்ணிக்கப்பட்ட ரோபன் தீவு சிறைச்சாலையில் கைதி எண்.466/64 என்ற அடையாளத்துடன் அடைக் கப்பட்டார் மண்டேலா. உலகின் கொடூரமான சித்திரவதைகள் எங்கு நடக்கும் என்று கேட்டால் அந்தக் காலத்தில் ரோபன் தீவைத்தான் கை காட்டு வார்கள். ஆறு சதுர அடிகள் கொண்ட அறையில் அடைத்து வைத்தார்கள். சுண்ணாம்புச் சுரங்கத்தில் வேலை செய்யச் சொன்னார்கள். இருபத்தியேழு ஆண்டுகால சிறைவாசத்தின் பெரும் பகுதியை அந்தச் சிறையில்தான் கழித்தார் மண்டேலா.

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், உலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக 11 பிப்ரவரி 1990 அன்று விடுதலையானார் மண்டேலா. அதன் பிறகு அதிபரானது, அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா, அரசியலில் இருந்து ஓய்வு எல்லாம் வரலாற்றின் வெள்ளைப் பக்கங்கள். ஆனால் சிறைக்குள் அவர் அனுபவித்த கொடுமைகள் அத்தனையும் கருப்புப் பக்கங்கள். கருப்பின மக்களின் விடுதலைக்காக அவா கொடுத்த விலை அது!

பெரியார் முழக்கம் இதழ் 12122013

You may also like...