29. சென்னையே! கொச்சியைப் பார்
கோவை நகர திலகம், தமிழ் நாட்டுச் செல்வம் சர்.ஷண்முகம் அவர்கள், கொச்சி திவானாகச் சென்ற போது கடுகடுத்துப்பேசி, கொச்சி உத்யோகம் கொச்சிவாசிகளுக்கே என்று கூந்தலை அவிழ்த்துவிட்டு அழுத தேசீய அம்மாமிகள் இன்று மூக்கின் மீது விரலை வைக்கும்படியான கீர்த்தியை அவர் பெற்றுவிட்டார்.
சமஸ்தானங்களிலே பொறுப்பாட்சிக் கிளர்ச்சிப் புயல் கிளம்புவதற்கு முன்னாலேயே, குறிப்பறிந்து நடக்கும் ராஜ தந்திரியாகிய சர்.சண்முகம், கொச்சி மன்னருக்கு யோசனை கூறி, மக்களுக்கு அரசியல் சுதந்திரமும், ஆட்சியில் பங்கும் மக்களின் பிரதிநிதியாக ஒரு மந்திரியும் ஏற்படுத்தினார்.
இந்தியாவிலேயே பொறுப்பாட்சியின் வித்தான இரட்டையாட்சி எனும் அரசியல் சீர்திருத்தத்தை பெற்ற முதல் சமஸ்தானம் கொச்சிதான். அந்தப் பெருமை சர்.சண்முகத்துக்கே உரியது. ஆனால் அதிலே தமிழர் யாவருக்கும் பங்கு உண்டு. சர்.சண்முகம் ஒரு தமிழர்!
இன்று பல்வேறு சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி நடப்பதும், ஆங்காங்கு இந்திய டயர்கள் தோன்றுவதும், பல்வேறு இடங்களில் துப்பாக்கி வேட்டுகள் கிளம்புவதும், காணும் நாம் கொச்சியிலே அமைதி ஆனந்தத்தைக் காண்கிறோம். திவானின் திறன் அதிலே தெள்ளென விளங்குகிறது. கொந்தளிக்கும் கடலிலே கப்பலை ஓட்டிப் பழகிய மாலுமிக்கு, கொந்தளிப்பு இல்லாத இடத்தில் கப்பலை முன்னிலும் அதிக திறமாகச் செலுத்த முடியுமன்றோ. அதைப் போன்றே கொந்தளிக்கும் இந்திய அரசியலிலே கொள்கை என்ற கப்பலை செலுத்திச் சென்ற சர்.சண்முகம், கொச்சியிலே அதனை நடைமுறையில் செய்து காட்டியுள்ளார். அதுதான் வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவம்.
அரசியல் வாதிகளிலே பலர், பதவிக்குச் சென்றால் அந்த நாள் கொள்கைகளை அறவே மறந்து விடுவதுண்டு. நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் நெடுநாட்களுக்கு முன்னர் தம் நினைவி லிருத்திய கொள்கைகளை விட்டு விடுவதுண்டு.
அம்மட்டோ! அக்கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக நடப்பவருமுண்டு. புத்தரோ, ஜீனரோ எனப் புவியோர் மெச்சுமளவு பொறுமை, அடக்கம், புனிதத் தன்மை ஆகியவைகளைக் கொண்டவ ரெனப்பலரும் கொண்டாடும்படி நடந்த எத்தனையோ பேர் இன்று ஹிட்லரோ, முசோலினியோ என்று மக்கள் ஏக்கத்துடன் கூறும் விதத்திலே அட்டகாச ஆட்சி புரியவும் தொடங்குகிறார்கள்.
கொச்சிக்கு அடுத்துள்ள திருவிதாங்கூரிலே திவானாக உள்ள சர்.சி.பி.ராமசாமி ஐயரின் தேசீயம் எவ்வளவு மின்னிற்று. அது எப்போதேனும் மங்கினால் அதை எவ்வளவு துடைத்துத் துடைத்துக் காட்டி துதி பாடி நின்றது தேசீயக்கூட்டம். இன்று எவ்வண்ணம் இருக்கிறார் சர்.சி.பி? பொது மக்களின் கிளர்ச்சி எவ்வளவு துணிவாக அங்கு பொசுக்கப்படுகிறது என்பதை யாவருமறிவர்.
அங்கு நோக்குக! இங்கும் பார்க்க!! என்று கொச்சி கூவி அழைக்கிறது.
பலருக்குப் பதவி கிடைத்ததும் பசுக்குணம் மாறி புலிக்குணம் தோன்றலாயிற்று. கொள்கைகள் காற்றில் பறந்தன. கோட்பாடுகள் புதைக்கப்பட்டன. அன்பு நெறி மறந்தனர். அடக்கு முறை வீசலாயினர். ஆம்! பதவி ஒரு போதை! அதிலே மயங்காதார் வெகுச்சிலரே. மயங்கி ஆட்டம் ஆடிக்கீழே விழுவோர் அநேகர். சர்.சண்முகம் பதவிகள் பல பெற்றவர். எனினும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பொறுப்பு என உணர்ந்து கொள்கையை நழுவ விடாது, தமது திறனைத் தொட்ட இடமெல்லாம் தோற்றுவித்துக் காட்டியுள்ளார்.
அவர் கொச்சிக்குத் தந்த நன்மைகள், அரசியல் அமைதி, சமூக ஒற்றுமை, செல்வ அபி விருத்தி.
பொறுப்பாட்சிக்கு அடிகோலும் சீர்திருத்தம் நல்கி அரசியல் அமைதியை அங்கு ஏற்படுத்தினார். அதுவாவது நடப்பதாவது என்று தோழர் சத்திய மூர்த்தி ஐயர் வழக்கப்படி கூறினார். சர்.சண்முகம், அவருக்குப் பதில் கூறவில்லை! கொச்சியின் இன்றைய நிலையும், சர்.சி.பி.யின் கவலையும், தோழர் சத்தியமூர்த்திக்குப் பதில் கூறுகின்றனவன்றோ!
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவம் பெற்ற மந்திரி; அவரிடத்திலே ஆண்டுதோறும் கிராம நிர்வாகத்துக்கெனப் பெருந்தொகை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக அரசியலிலே மக்களுக்கு உரிமையும், பழக்கமும், தொடர்பும் ஏற்படுகிறது.
அரசியல் சீர் திருத்தங்கள் என்ன திறம்பட இருப்பினும் எத்துணை தீவிரத்தைக் கொண்ட தாயிருப்பினும், சமுதாய அமைப்பு அதற்கேற்றபடி சக்தி பெற்று இருந்தாலன்றி, அரசியல் சீர்திருத்தத்தின் முழுப்பலனையும் மக்கள் அடைய முடியாது.
இக்கருத்தை உள்ளடக்கியே அந்த நாளிலே நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது என்று கூறியுள்ளனர்.
சமுதாய அமைப்பிலே, ஜாதி பேதங்களும், மேல் கீழ்படிகளும் இருப்பதோடு நம்நாட்டிலே எங்கும் இல்லாத கொடுமை, ஒரு ஜாதிக்கு மற்றயோர் குற்றேவல் புரிந்து வாழ்வதுதான் முறை, தருமம் என்று மதச்சட்டம் வகுக்கப் பட்டு, அதன்படி சமுதாயமுறை உயர்ஜாதிக் காரரால் அமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே எவ்வளவு நல்ல சீர்திருத்தம் அரசியலில் செய்யப்பட்டாலும், பலன் ஒரு வகுப்புக்கே சென்று, மற்றைய துறைகளிலே ஒரு வகுப்பு உயர்ந்து வாழ்வதைப் போன்றே அரசியலிலும் அவர்களுக்கே உயர்வும், செல்வாக்கும் ஏற்பட ஏதுவாகிறது. ஆபத்து அத்துடன் நிற்பதில்லை. எங்ஙனம் அந்தநாளில் வகுக்கப் கட்டு, பல நூற்றாண்டுகளாக காப்பாற்றப்பட்டு வரும் சமுதாயப் பாகுபாடு ஒரு வகுப்பார், மற்றைய வகுப்பார்களை அடிமை கொண்டு அடக்கி ஆளமார்க்கமாக இருக்கிறதோ, அதைப் போலவே அரசியல் சீர்திருத்தத்தால் கிடைக்கும் புதிய சலுகையும் சக்தியும், உயர் ஜாதிக்காரர் மற்றையோரை அரசியல் துறையிலும் அடிமை கொண்டு வாழவே உதவுகிறது.
எனவேதான் நீதிக்கட்சியார், வகுப்புகளுக்குள் சந்தேகமும் கிலேசமும் அதன் பலனாக சஞ்சலமும் ஏற்படாதிருக்கும் நிலை ஏற்பட்டால்தான் அரசியலிலே நாம் பூரண சுதந்திரம் பெற முடியும், பெற்று அதன் நன்மைகளை அடைய முடியும் என்று கூறி வந்தனர். அதற்காகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சிறந்த நீதியை இம்மாகணத்தில் வழங்கினார்கள். அதனை வாழ்த்தி வரவேற்று வளர்த்து, அதைப்பற்றி வம்புந்துமாகப் பேசிய தேசீயவாதிகளுக்கு ஆணித்தரமான பதிலளித்த அரசியல் சண்முகம், திவான் சண்முகம் ஆனவுடன், அதே நீதியை கொச்சிக்குந் தந்ததார். குரோதக்கும்பல் குளறிக் கொட்டின. சர்.சண்முகம் சீறினாரில்லை. சிரித்தார் அவர்களின் எரிச்சலைக் கண்டு.
இவ்வாண்டு கொச்சி சட்ட சபையைத் திறந்து வைத்தபோது பேசுகையில் அவர் உத்தி யோகங்கள் வழங்குவதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதில் என்னைப் பொறுத்த மட்டில் எவ்வளவு நம்பிக்கையுடையவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
உத்தியோகங்களிலும் சட்ட சபையிலும் ஒவ்வொரு வகுப்பாருக்கும் சரியான பிரதிதித்துவம் வழங்கவேண்டும் என்பதே எனது அரசியல் சித்தாந்தம்.
எனது 15 வருட அரசியல் வாழ்க்கையனுபவத்திலிருந்தும் எனது எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டே வருகிறது.
இந்தியாவிலே தேசீயம் வேரூன்ற வேண்டுமானால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வகுப் பாருக்கும் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற கொள்கை முதலாவது ஒப்புக்கொள்ளப்படல் வேண்டும்.
இதை ஒப்புக் கொள்ள மறுப்பதினால் தான் இன்றைய அரசியலிலே பேதா பேதங்களும் பிளவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழங்குவது ஒப்புக்கொள்வது ஒருநாளும் தேசீயத்துக்கு முரணாகாது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
அந்த தத்துவம் தேவையானதுதான். அதை யாரும் மறுக்க வில்லை. நடைமுறையிலே (ஜஸ்டிஸ் கட்சியினர்) அதைச் செய்து காட்டிய விதந்தான் பிடிக்கவில்லை என்று இந்து பத்திரிகை ஜுலை 18-ல் தலையங்கத்தில் எழுதி இருக்கிறது.
இந்துவின் போக்கு ஏன் இப்படி இருக்கிறதென்பது நமக்குத் தெரியும். சுபாவம் மாறுவது சுலபமல்ல. சர்.சண்முகம் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தின் அவசியத்தை விளக்க எடுத்துக்காட்டிய காரணங்களை மறுக்க முடியாது திண்டாடும். இந்து அதனால் பார்ப்பனரின் ஏகபோக மிராசு ஒழிந்து விடுகிறதே என்ற கவலையால் கஷ்டப்பட்டு ஏதோ குளறுகிறதேயொழிய வேறென்ன?
மனத்தாங்கல் கொண்டுள்ள இந்துவும் இன்று வகுப்புவாரிப் பிரநிதித்துவத்தின் அவசியத்தை ஒப்புக்கொண்டது காண நாம் மகிழ்கிறோம். ஏன்? எதிரிகளும் நமது கொள்கையின் உண்மையை மறுக்க முடியாத அளவு வெளிச்சம் இன்று நாட்டிலே ஏற்பட்டிருப்பதைக் கண்டுதான்.
இந்து கூறியபடியே நமது மாகாண முதலமைச்சரும் வகுப்புவாரி பிரதிநிதித்தவத்தை ஒப்புக்கொண்டே ஒரு அறிக்கையை ஜுலை 18ல் வெளியிட்டுள்ளார். அதிலே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஜஸ்டிஸ் கட்சியினர் எப்படி நடத்தி வந்தார்களோ அதைப் பின்பற்றியே தனது சர்க்காரும் நடந்துவருவதாகக் கூறியுள்ளார்.
அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை கனம் ஆச்சாரியார் மறுக்க வில்லை. அதை மாற்றவோ அழிக்கவோ முற்படவுமில்லை எனக்கூறியுள்ளார்.
நடைமுறை விஷயங்கள் சந்தேகத்தைக் கிளப்பக்கூடியதாக இருக்கிறதென்பதை யாரும்மறுக்க முடியாது ஒரே வகுப்பாருக்கு உத்தியோகம் கிடைத்தபடி இருக்கிற தென்பதையும் மறுக்க யாரும் முன்வரத்துணியார். வகுப்பு நீதி சரி வர வழக்கப்படுவதில்லை என்ற எண்ணம் தமிழ் நாட்டிலே இல்லாத இடமே இல்லை. காங்கிரஸ் தலைவர்களில் பலருடைய உள்ளத்திலே அது இருக்கிறது ஆச்சாரியாரின் அத்யந்த நண்பர்கள் எனப்படுவோரும் அந்த எண்ணத்தைக் கொண்டேயுள்ளனர். வெளியே வராததற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியின் அடக்குமுறையாகிய ஒழுங்கு நடவடிக்கைதான்.
எனவே, கனம் ஆச்சாரியார் எல்லாம் சரியாக நடப்பதாக வெளியிட்டுள்ள அறிக்கை நமக்குத் திருப்தியோ, யாருக்கேனும் தெளிவையோ தரவில்லை என்றாலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை ஆச்சாரியாரின் சாகசத்தினால் ஒரு சமயம் சாகடிக்கப்படலாமேயொழிய அவருடைய சக்தியாலோ அவருடைய கட்சியினுடையபலத்தாலோ அது வீழ்த்தப்படமாட்டாது என்ற உண்மை வெளிவருவது கண்டு நாம் மிக மகிழ்கிறோம்.
காலத்திற்கு ஏற்றதும் சமுதாய அமைப்புக்கு ஒத்ததும், யாராலும் தவறு எனக் கூற முடியாததுமான அந்த திட்டம் கொச்சியில் சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை. ஜஸ்டிஸ் கட்சியின் அந்தத் திட்டம் இன்று எங்கும் யாராலும் ஒப்புக்கொள்ளப்படுவதோடு அதுதான் சமுதாயக் கோளாறை ஒழிக்கும் மருந்தாகவும் இருக்கிறது. இதனை கொச்சி வாசிகள் பெற்று வாழ்வதற்குக் காரணம் சர்.சண்முகமேயாகும்.
இவ்விரண்டு நன்மைகளுடன் நாட்டு செல்வப்பெருக்கிற்கு அவர் செய்துள்ள சேவை எதிரிகளின் கண்களையும் திறந்துவிட்டது.
இந்து கூறுவதைக் கேளுங்கள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தார்ப்போல கொச்சியுல் பட்ஜட்டில் மிச்சம் இருந்து வருகிறது. இது மிக ஆனந்தம் தரும் நிலையாகும். இத ஏற்பட்டதற்குக் காரணம், செட்டாக பணவிஷயத்திலே நிர்வாகம் செலுத்தியதுதான். மிச்சம் பிடிக்கப்பட்டதே தவிர, நாட்டு நன்மைக்கான காரியங்களுக்குப் பணம் சுருக்கமாகச் செலவிடப்படவில்லை மாறாக, முன்னாண்டு செலவானதைவிட அதிகமான தொகை இவ்வாண்டு ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கிராம அபிவிருத்திக்கென இவ்வாண்டு ஒரு லட்ச ரூபாய் தனியாக, மந்திரியிடம் தரப்படுகிறது. இது மிகக் குறைவான தொகை என்று கருதப்படும். ஆனால் கொச்சி, அதிக வருமானம் வர ஏது வில்லாத சிறிய சமஸ்தானம் என்பதைக் கவனிக்க வேண்டும். சர்க்காரின் வருமானத்தைப் பெருக்க (வரிகளேயின்றி) வழிகள் கண்டுபிடிக்கும், அறிவுள்ள திட்டதைக் கொச்சி கையாளுகிறது.
இதைவிடச் சிறந்த வெற்றி சர்.சண்முகத்துக்கு ஏது எனக் கேட்கிறோம். ஏன் அப்படிக் கூறுகிறோமென்றால், கொச்சி திவானாக சர்.சண்முகம் நியமிக்கப் பட்டதும், அழுத அம்மாமிகளிலே, இந்துவின் குரல்தான் உரத்துக் கேட்கப்பட்டது. அதே இந்து வாழ்த்தும் நிலைக்கு, தமது நிர்வாகத் திறனை, சர்.சண்முகம் காட்டியுள்ளார்.
கொச்சியிலே சர்க்கார் பெறும் வருமானம் 95 இலட்சம். இதிலே மக்களிடமிருந்து வரியாக வசூலாவது 38 இலட்சமே. மிகுதித்தொகையை, சர்க்கார் தனது சொந்த முயற்சியால், வருமானம் வரக்கூடிய துறைகளை வகுத்து விருத்தி செய்ததால் பெறுகிறது. எனவே, கொச்சி மக்களுக்கு வரிச்சுமை ஏறுவதில்லை. அங்கு புது வரிகள் இல்லை! கடன் தொல்லை இல்லை.
கொச்சி வியாபாரம் செழிக்கிறது. சர்.சண்முகம் அதற்காக கொச்சி துறைமுகத்தை சீர்படச் சமைத்துள்ளார்.
எனவே கொச்சியில், மக்களுக்கு உரிமை வழங்கப்பட்டதால் அரசியல் அமைதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அமுலில் இருப்பதால் சமுதாய அமைப்பிலே தொல்லை இல்லாமலும், பொக்கிஷ நிர்வாகம் திறன்பட நடப்பதால், மக்களுக்கு வரிப்பளுவோ, சர்க்காருக்குக் கடன் தொல்லையோ, வியாபார மந்தமோ இல்லாமலும், மிச்சம் பிடிக்கும் விதத்தில் பணநிலை இருக்கிறது.
பார்! சென்னையே! கொச்சியைப் பார்!!
குடிஅரசு, தலையங்கம்- 23.07.1939