16. காந்தியார் புதுக்கோலம்
காந்தியார் ஒரு நாலணா காங்கிரஸ் மெம்பர் கூட அல்லாமலிருந்தாலும் கிரியாம்சையில் காங்கிரஸ் சர்வாதிகாரியாக இருந்துவந்ததை உலகம் அறியும். மாகாண சுய ஆட்சித் திட்டத்தை ஒழிக்கவேண்டும். அதைக் கண்ணெடுத்தும் பார்க்க கூடாது. சட்ட சபைகளை பகிஷ்கரிக்கவேண்டும். பதவி ஏற்கக்கூடாது என்றெல்லாம் மாயக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் புகுவதற்கும் எட்டு மாகாணங்களில் மந்திரி சபைகள் அமைப்பதற்கும் காரணஸ்த வராயிருந்தவர் காந்தியார் என்பதையும் உலகம் அறியும். பதவியேற்பதும் மாகாண சுயாட்சித் திட்டத்தை ஏற்று நடத்துவதும் காங்கிரஸ் தீர்மாணங்களுக்கு முரணாக இருந்தாலும் உலகப் பெரியாரான காந்தியார் யோசனைப்படியே பதவியேற்றிருப்பதினால் அவ்வாறு செய்தது காங்கிரஸ் கொள்கைக்கு முரணாயிருப்பதை காந்தியார் பேரிலுள்ள மாய பக்தியினால் கிறுக்கினால் படிப்பாளிகளும் கூட மறந்துவிட்டார்கள் என்ற உண்மையை மறைக்கவே முடியாது. இவ்வண்ணம் காந்தியாரை உலக மக்களை ஏய்க்கும் ஒரு கருவியாக வைத்துக் கொள்ளும் பொருட்டே காந்தியார் திட்டங்களிலும் கூட மறந்துவிட்டார்கள் என்ற உண்மையை மறைக்கவே முடியாது. இவ்வண்ணம் காந்தியாரை உலக மக்களை ஏய்க்கும் ஒரு கருவியாக வைத்துக்கொள்ளும் பொருட்டே காந்தியார் திட்டங்களிலும், காந்தியத்திலும் இந்தியாவுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் காந்தியாரே இந்தியாவின் தனித் தலைவர் என்றும் திரிபுரா காங்கரசிலே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காந்தியார் விருப்பத்துக்கு மாறாக சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியாருக்கு அடிவற்றில் இடி விழுந்தது போல் இருந்தது. காந்தியார் காங்கிரஸ் சர்வாதிகாரியாக இருக்கும் வரை இந்தியர் லக்ஷ்யம் கைக்கூடாதென்றும் ஜனநாயக ஸ்தாபனமான காங்கிரஸை காந்தியாரும் அவரது கோஷ்டியாரும் பாசிஸ்டு ஸ்தாபனமாக்கி வருகின்றார்கள் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஜனநாயக ஸ்தாபனமாகி சுத்தப்படவேண்டுமானால் காங்கிரசில் காந்தியார் ஆதிக்கம் ஒழிய வேண்டுமென்றும் பலர் பகிரங்கமாகப் பேசியும் எழுதியும் வந்ததினாலும் அவரது விருப்பத்துக்கு மாறாக சுபாஷ் சந்திர போஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதினாலும் பிரிட்டிஷ் இந்தியாவிலே தமது மதிப்புக் குறைந்து வருவதை உணர்ந்த தந்திரசாலியான காநதியார் திரிபுர காங்கிரஸ் மாநாடு கூடும் சமயத்தில் திடீரென சமஸ்தான விஷயங்களில் தலையிட்டதும் பட்டினிக் கிடந்ததும் வெற்றியேற்பட்டு விட்டதாக ஜாலம் செய்ததும் நம்மவர்கள் அறிவார்கள்.
வெற்றி யாருக்கு?
வாஸ்தவத்தில் ராஜ்கோட் உண்ணாவிரதத்தினால் காந்தியாருக்கோ காங்கிரசுக் கோ வெற்றியேற்படவே இல்லை. உண்மையில் பிரிட்டிஷ் ராஜதந்திரத்துக்கும் வைஸ்ராய் பிரபுவுக்குமே வெற்றியேற்பட்டது. ராஜ்கோட் மன்னருக்கு அனுப்பிய கோரிக்கைகள் ஒப்புக்கொள்ளப்படும் வரை உண்ணாவிரதமிருக்கப் போவதாக காந்தியார் விளம்பரம் செய்தார் எனினும் வைஸ்ராய் தலையீட்டினால் காந்தியார் கோரிக்கைகளை ராஜ்கோட் மன்னர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக தகராறு விஷயங்கள் எல்லாம் பீடால் கோர்ட்டு பிரதம நீதிபதி முடிவுக்கே விடப்பட்டிருக்கின்றன. அவரது முடிவு காந்தியார் கோரிக்கைகளுக்கு சாதகமாகவும் இருக்கலாம். பாதகமாகவுமிருக்கலாம். சமஷ்டிக்கோர்ட்டு பிரதம நீதிபதி முடிவை ஏற்றுக்கொள்வதாய் காந்தியார் ஒப்புக்கொண்டிருப்பதினால் அம்முடிவு சாதகமாகவோ, பாதகமாகவோ இருந்தாலும் காந்தியாரைக் கட்டுப்படுத்தத்தான் செய்யும். ஆகவே காந்தியார் வெற்றி பெற்று விட்டதாகக் கூறுவது பகட்டுப் பேச்சுதானே, சென்ற ராஜ்கோட் தகராறு விஷயமாக பீடால் கோர்ட் பிரதம நீதிபதி முடிவு செய்து விட்டார் என்றும் இரண்டு நாட்களில் அது வெளிவருமென்றும் கூறப்பட்டது. எனினும் இதுவரை முடிவு வெளிவரவில்லை. தகராறு சம்பந்தமான தஸ்தாவேஜிகளை ராஜ்கோட் மன்னர் பீடா கோர்ட்டுப் பிரதம நீதிபதி எதுவும் இதுவரை செய்யவில்லையென இப்பொழுது ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. முடிவு வெளிவரும் வரை டில்லியை விட்டுக் கிளம்புவதில்லையென காந்தியாரும் அவரது பிரதம தளகர்த்தரான படேலும் டில்லியில் பாளையமடித்திருக்கிறார்களாம். ராஜ்கோட் தகராறு முடிவு பெறும் முன்னம் திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ்காரர் இம்மாதம் 25-ந் தேதி சட்டமறுப்புத் தொடங்கப்போவதாய் பிரகடனம் செய்துவிட்டனர். ஆனால் ஓடுகிற நாய்க்கு ஒரு மும் கூட்டி எறி என்ற முதுமொழிப்படி தந்திரசாலியான திருவிதாங்கூர் திவான் சசிவோத்தம் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர் சட்டமறுப்புத் தொடங்கு முன்னமேயே சமஸ்தான காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்யத் தொடங்கிவிட்டார். 25-ந் தேதிக்குள் அநேகமாக பாராட்டத்தக்க சமஸ்தான காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விடுவார்களெனத் தோன்றுகிறது.
காந்தியார் செய்திருக்க வேண்டியதென்ன?
மற்ற சமஸ்தானங்கள் என்ன செய்தாலும் சரி, சமஸ்தான விஷயங்களில் காங்கிரஸ்காரர் தலையிடுவதை திருவிதாங்கூர் சமஸ்தானம் சம்மதிக்கப் போவதில்லை என ஸர்.பி.ராமசாமி அய்யர் கண்டிப்பாய்க் கூறியிருப்பதையும் காந்தீயார் பட்டினி விரதத்தைத் தாக்கி யெழுதியிருப்பதையும் கவனித்தால் ஒரு கை பார்த்துவிடுவதென்று ஸர்.ஸி.பி முடிவு செய்திருப்பதாகவே நினைக்க வேண்டியதாக இருக்கிறது. ஸர்.ஸி.பியின் கண்டிப்பான ? துணிச்சலான ? இறுமாப்பான பேச்சுகளையும் நிலையையும் உணர்ந்திருக்கும் காந்தியார் இப்பொழுது செய்திருக்க வேண்டிய தென்ன? சத்திய சோதனை செய்யப்போவதாக பாவனை செய்துகொண்டு ராஜ் கோட்டுக்குச் சென்று பட்டினி கிடந்திருக்கவேண்டும். திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் மீத காந்தியாருக்கு எள்ளத்தனையாவது அனுதாபமிருந்தால் அவ்வாறு செய்வதைவிட காந்தியாருக்கு வேறு வழியில்லை.. ஆனால் காந்தியார் செய்திருப்பதென்ன? தாம் உத்திரவளிக்கும் வரை சட்டமறுப்புப் போரை நிறுத்தி வைக்கும்படி காந்தியார் கட்டளையிட்டிருக்கிறார். அக் கட்டளைக்கு இணங்கி திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் தலைவரும் 25-ந் தேதி சட்டமறுப்புத் தொடங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுவிட்டார். ஆனால் சட்டமறுப்பை நிறுத்தி வைப்பதற்கு காந்தியார் கூறும் காரணங்களோ வெகு வெகு விநோதமாக இருக்கின்றன. திரு.வி.தாங்கூர் தர்பார் பயிற்சி பெறாதவர்களையும் போலீசில் சேர்த்து சத்தியாக்கிரகிகளை பயமுறுத்த உத்தேசித்திருப்பது உண்மையானால் சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்த இடமிருக்கும் போது சத்தியாக்கிரகிகள் அவர்கள் அவ்விதம் செய்வதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும், பற்பல சமஸ்தானங்களில் கொடுமைகள் நடப்பதால் அவரே சட்டமறுப்பு இயக்கத்தைப் புதிய முறையில் நடத்த உத்தேசித்திருப்பதாகவும் ஒருகால் அவரது முயற்சி பலிக்காது போனாலும் போகலாமென்றும் சட்டமறுப்பு எங்கும் நடக்காமல் நின்று ஒரு அமைதி ஏற்பட்டால் திருவிதாங்கூர் சுதந்தர இயக்கத்துக்குப் பொதுஜன ஆதரவு தேட இதனால் சௌகரிய மேற்படுவதுடன் சத்தியாக்கிரகிகள் கோரிக்கைகளைப் பற்றி தர்பார் புனராலோசனை செய்ய தர்பாருக்கு இடமேற்படக்கூடுமென்றும் காந்தியார் கூறுகிறார்.
ஸர்.ஸி.பி. வெற்றி!
காந்தியார் அறிக்கையின் போக்கை உற்று நோக்குகையில் ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே தோற்றுகிறது. சமஸ்தான காங்கிரஸை நசுக்க ஸர்.ஸி.பி.செய்திருக்கும் ஏற்பாடுகள் காந்தியாரை அச்சுறுத்திவிட்டதென்றே ஊகிக்கவேண்டியதாக இருக்கிறது புதிய அடக்கு முறைகளை ஸர்.ஸி.பி.கையாளத் தொடங்கியிருப்பதினால் புதிய சட்டமறுப்பு முறைகளையும் காந்தியார் கண்டு பிடிக்கப் போகிறாராம். ஆனால் அம்முயற்சியில் நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று காந்தியார் நம்பவில்லை. புது முறைகள் கண்டுபிடிக்கப்படா விட்டாலும் சட்டமறுப்பை நிறுத்துவதினால் இரண்டு அனுகூலங்கள் உண்டாகுமென்றும் காந்தியார் செப்புகிறார். ஒன்று சமஸ்தான காங்கரசுக்குப் பொதுஜன ஆதரவு அதிகமாக கிடைக்க இடமுண்டாகுமாம். மற்றொன்று சத்தியாக்கிரகிகள் கோரிக்கைகளைப் பற்றி தர்பார் புனராலோசனை செய்யவும் இடமேற்படுமாம். இது இரண்டும் சாத்தியமல்லவென்றே நாம் நினைக்கிறோம். ஏனெனில் சமஸ்தான மக்கள் குறைகளை மகாராஜா அவர்களுக்குத் தெரிவித்து மகாராஜா மூலம் பரிகாரம் தேடுவதே முறையென்றும் வெளியார் தலையீட்டை ஆதரிக்கவே முடியாதென்றும் ஸர்.ஸி.பி. பல சந்தர்ப்பங்களில் கண்டிப்பாகக் சொல்லியிருக்கிறார். காந்தியார் கட்டளைப்படி சட்டமறுப்பு நிறுத்தப்பட்டுவிட்டதினால் ஸர்.ஸி.பி. கை வலுக்கப் போவது நிச்சயம். சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு நான் சும்மா இருப்பேன் என்று ஒருவரும் நினைக்க வேண்டாம் என காந்தியார் கூறுவதினால் காந்தியார் ஒரு முடிவுக்கு வருமுன் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர் சமஸ்தான காங்கிரசை ஆழக்குழி தோண்டி புதைத்துவிடுவார் என்பது நிச்சயம்.
குடிஅரசு, தலையங்கம்- 26.3.1939