32. காந்தீயத்தின் கிழப்பருவம்

காந்தீயம் ஒன்றுதான் நாட்டு விடுதலைக்கு ஏற்ற மார்க்கமென்றும், சுயராஜ்யம் பெற, காந்தியார் ஒருவரே வழிகாட்டியாக இருக்க முடியுமென்றும், அவர் அரசியலில் மட்டும் நிபுணரல்ல. மதத்திற்கும் குருவென்றும், அவர் இதற்குமுன் தோன்றிய எத்தனையோ காங்கிரஸ் தலைவர்களைப் போன்றவரல்ல, எல்லாரினும் இவரே உயர்ந்தவர் என்றும் சுருக்கமாக கூற வேண்டுமானால் அவர் வெறும் ஆத்மா அல்ல, மாகத்மா என்றும், பலத்த பத்திரிகைப் பிரச்சாரத்தால், நாடு முழுதும் பரப்பப்பட்டு, பாமர மக்கள் அவ்வளவு பேரும் அவரை அவதார புருஷர் என்ற அளவுக்குக் கொண்டாடூம் நிலை வந்து, அறிவாளிகளும் அவருடைய அந்தராத்மா, என்ற பேச்சிலே லயித்து, அவரைத் தம் ஞானாசிரியராக இருக்கச் செய்து, வந்த நிலை இன்று மாறி, காந்தீயம் என்றால் இன்னது அதைப்பற்றி சிலர் இன்னவிதமான தப்பர்த்தம் செய்து கொள்கின்றனர்; அதற்கு இது சமாதனம் என்று பலர் வியாக்யானம் செய்யவேண்டிய நிலை இன்று வந்துவிட்டது. ஒரே அடியாக காந்தீயத்தில் அமிழ்ந்து போயிருந்த மக்களுக்குள் இன்று ஒருவித விழிப்பு ஏற்பட்டு காந்தீயக்கொள்கையில், தத்துவத்தில், வேலைத் திட்டத்தில், சந்தேகமும், பயமும், சஞ்சலமும், சோகமும் ஏற்பட்டு விட்டது. இந்நிலை காங்கிரசுக்கு வெளியேயுள்ள பன்னெடு நாட்களாகவே காந்தீயத்தைக் கண்டித்து வந்தவர்களுக்கல்ல, காந்தீயமே கதி என நம்பி நாட்களை கடத்திக் கொண்டிருந்தவர்கெல்லாம், இந்த மனமாற்றம் இன்று ஏற்பட்டுவிட்டது.

இதற்குக்காரணம், காந்தீயத்தின் மீது பூசப்பட்டிருந்த முலாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து வர ஆரம்பித்ததேயாகும். காந்தீயம் எதை எதை சாதிக்க முடியுமெனப் பறைசாற்றப்பட்டதோ அவைகளில் ஒன்றாவது வெற்றி அடையாததோடு நாட்டிலே முன்பிருந்ததை விட, அதிகப்படியான சிக்கல்களும், கலவரங்களும், தொல்லைகளும், ஆதிக்கங்களுந்தான்வளர்ந்து விட்டன வெள்ளையன் ஓடவில்லை! ஏகாதிபத்தியம் அசையவில்லை! வறுமை நீங்கவில்லை! வாழ்விலே யாதொரு புதிய இன்பமும் காணப்படவில்லை. வேலையில்லாது திண்டாடுவோரின் வேதனை அப்படியேதான் இருக்கிறது. அதனை கைராட்டையின் கீதம், மாற்றவில்லை. கூலி உயராததால் கொடுமைப்படு வோரின் துயரம் துடைக்கப்படவில்லை. முதலாளிமாரின் முடுக்கோ, ஜெமீன்களின்ஆதிக்கம் மன்னர் மன்ன்களின் தர்பாரோ ஒரு சிறிதும் குறையவில்லை. பத்தொன்பதாண்டுகளாகப் பாடுபட்டும், மாறி மாறிப் பலப்பல திட்டங்களைப் போட்டும், அதோ இதோ என ஆசை காட்டியும் ஆயிரக்கணக்கானவரை சிறைகக்குள் தள்ளியும், கோடிக்கணக்கில் பணம் திரட்டியும், நாட்டுத் தொல்லையில் ஒரு சிறிதும் நீக்க இயலாது இருக்கும் ஒருவர், எங்கனம் மகாத்மா ஆவார் என்ற சந்தேகம் பலமாகக் கிளம்பியதுடன் அவருடைய முறைகளே தவறு ஆகவே தான் எவ்வளவோ பாடுபட்டும் பலன் கிடைக்காமல் போய்விட்டது என்பதையும் மக்கள் கண்டு கொண்டனர்.

அறிவாளிகள் வெளிப்படையாகவே காந்தீயமென்பது, வர்ணாஸ்ரம மென்றும், எதிரியிடம் பேரம் பேசும் இயக்க மென்றும், வெள்ளையருக்கு உடந்தையாக, மன்னருக்குத் தோழராக, பணக்காரக்கூட்டத்துக்குப் பாதுகாவலாக இருந்து கொண்டு பாமர மக்களை மயக்கி மத, சமுதாய, கல்வி, அரசியல் துறைகளிலே அவர்களை அடிமைகளாக்கும் சூழ்ச்சித்திட்டமென்றும் எடுத்துக் கூறலாயினர்.

சுயமரியாதை, பார்ப்பனரல்லாதார் உரிமைப் போர் சமதர்மம், அபேதவாதம், பொது உடமை, தீவிரவாதம், உழவர் தொழிலாளர் இயக்கம், ஆதி திராவிடர் விழிப்பு, முஸ்லிம்கள் எதிர்ப்பு என பல புயல்கள் நாட்டிலே கிளம்பின. காந்தீயம், அடியோடு அற்றுவிழும் அளவுக்கு அந்தப் புயல் இருந்தது. அது கண்ட காந்தீயார் வெள்ளையருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். வெள்ளையனை எதிர்ப்பதில்லை என்ற உறுதிகூறி, அதன் மூலமாக வேனும் காந்தீயத்தை நிலைக்க வைப்போமா என்று எண்ணலாயினார்.

ஆனால், அதிலும் அவருக்கு மனநிம்மதி ஏற்படவில்லை. எதிர்ப்பு, காங்கிரசுக்குள்ளிருந்தே கிளம்பி, காந்தீயத்தைக் கருவறுக்கும் போல அவருக்குத் தோன்றியது. அவரது முறைகள் கண்டிக்கப் பட்டதோடு, அவரது அந்தரங்க சீடர் குழாமும் நாட்டு மக்ளிடம் சாபம் கேட்கவேண்டியதாயிற்று. அவ்வப்போது கிளம்பிய, நரிமன் புரட்சி கரே புரட்சி ஆகியவைகளை அவசர அவசரமாக அணைத்தனர். ஆனால் மாறி மாறி புரட்சி ஓங்கலாயிற்று. அண்மையில் தோன்றிய போஸ் புரட்சி, காந்தியாருக்கு கடுமையான கோபத்தையும், மிகுதியான மனச்சோர்வையும், துயரையும் தந்தது. ஆகவே தான் அவர், போசின்வெற்றி என் தோல்வி எனப்பிரலாபித்தார்.

போஸ் தமது படைகளைத் திரட்டினார். படேல் கும்பலோடு காந்தியாரும் எதிரில் நின்றார். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் உதவாதவர் என்று கூறலாயினர். காங்கிரசை உன்னிடமிருந்து பிடுங்கி என் வழி திருப்புவேன் என்றார் போஸ் அது நேரிட வொட்டாதபடி, பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, பலத்த மதிற்சுவரைப் போட்டு விட்டது. தீவிரவாதிகள் என்ன முயற்சித்தாலும் எப்படி திட்டம் போட்டாலும் காங்கரசில் அவர்கள் கரம் செல்லாதவாறு தடுக்க முன்னேற்பாடான முறைகளைப் போட்டு விட்டனர் காந்தீயர்கள். அவைகளாவன:?

பலத்த எதிரியாகிய பிரிட்டிஷாரோடு நேசமாகிவிட்டனர். சுதேச மன்னர்களை எதிர்த்து சத்தியாக்கிரகக் கிளர்ச்சி செய்யலாகாதெனவும், அவர்கள் மனமுவந்து அளிக்கும் அதிகாரத்தை, மண்டியிட்டுப் பெற்று திருப்தி அடையவேண்டுமெனவும் சரணாகதித் திட்டம் போட்டுக்கொடுத்து மன்னரிடம் சமரசம் செய்து கொண்டாகி விட்டது.

ஜெமீன்தாரர்களால் உழவர்களுக்கு தொல்லை வருவதாகக் கூறுவது தவறு. ஜெமீன்தாரரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது குற்றம். ஜெமீன்தாரர் தொலைந்தாலும் உங்கள் தொல்லை போகாது; ஆகவே ஜெமீன்தாரரின் நல்லபிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள் என உழவர் களுக்கு உபதேசம் செய்துவிட்டு, உழவர் சத்தியாக்கிரகம் நடத்துவோரை அடக்கு முறைகொண்டு அடக்கி ஜெமீன்தாரரைத் தம்பக்கம் சேர்த்துக்கொண்டனர்.

வேலை நிறுத்தம் செய்வது பலாத்காரத்தில் போய் முடிகிறது; அது பொதுவுடமை மனோ பாவத்தை வளர்க்கிறது. ஆகவே அத்தகைய வேலை நிறுத்தங்கள் கூடாது என தொழிலாளருக்கு உபதேசம் செய்து, பம்பாய் மாகாணத்தில் நிறைவேற்றியதைப்போல தொழிற் சச்சரவு சட்ட மூலமாக, முதலாளி மாருக்கு பெரும் பாதுகாப்பைத் தேடிக் கொடுத்து பணக்கார ஆலை முதலாளிகளைத் தம்பக்கம் இழுத்து வைத்துக்கொண்டனர்.

சமஷ்டி ஒழிப்பு என்பது காரியத்தில் நடத்த வேண்டியதல்ல என்ற கருத்து தெளிவாக பிரிட்டிஷாருக்குப் படும்படியாகக் கூறியும், வைசிராயுடன் காந்தியார் பேட்டி கண்டு பேசி உணர்த்தியும் ஆகிவிட்டபடியால், சமஷ்டியைத் திணிக்க விரும்பும் பிரிட்டிஷாரின் உதவியையும் பெற்றாகிவிட்டது.

வர்ணாஸ்ரமத்தை வளர்த்து வைதீகத்தைப் பெருக்கி, காட்டுமிராண்டி வாழ்க்கையைப் போற்றி வாழ்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் காரணத்தால், காந்தீயத்திற்கு, மதபக்தர்கள், பித்தர்கள், தரகர்கள், வைதீகர்கள், சநாதனிகள் ஆதரவும் கிடைக்கிறது.

இவ்வளவு பாதுகாப்புகள் இருக்கும்படி செய்து கொண்ட காந்தீயம், இவ்வளவையும் தாண்டி, எரித்து, யார் வந்து நம்மை வீழ்த்தப் போகிறார்கள் என்று எண்ணி இறுமாந்தும் உள்ளது. தீவிரவாதிகளை காங்கிரசில் தீண்டாதராக்கிவிட்டது, அவர்கள் அரசியல் அனாதைகளாம்.

பம்பாயில் நிறைவேற்றப்பட்ட கீழ்காணும் தீர்மானங்கள் யாவும், காந்தீயத்தைப் பலப்படுத்தவே போடப்பட்டன.

காங்கிரஸ் கமிட்டித் தேர்தல்களில் கலந்துகொள்ளும் உரிமை, காங்கிரஸ் மெம்பராகி ஓராண்டு கழிந்த பிறகே மெம்பருக்கு அளிக்கப்படும் என்ற தீர்மானத்தை பண்டிட் பாலகிருஷ்ண சர்மா கொண்டு வந்தார். தோழர் சத்திய மூர்த்தி இதை ஆமோதித்தார்.

காங்கிரஸ் பிரதிநிதியாகவோ அன்றி மாகாணஜில்லா நிருவாகக் கமிட்டி அங்கத்தினராகவோ தேர்தல் பெற விரும்பும் ஒருவர் தொடர்ந்தாற்போல் மூன்று வருஷம் காங்கிரஸ் அங்கத்தினராக இருக்கவேண்டும்.

மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் முன் அனுமதியின்றி எந்தக் காங்கிரஸ்காரனும் சத்தியாக் கிரகத்தை ஆரம்பிக்கவோ அல்லது தானே சத்தியாக்கிரகத்தைக் கைக்கொள்ளவோ கூடாது என சர்தார் வல்லபாய் படேல் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

நிர்வாக விஷயங்களிற் மாகாண காங்கிரஸ் கமிட்டிகள், மந்திரி சபையின் யுத்தத்தில் தலையிடக்கூடாது.

மேற்கண்ட நான்கு தீர்மானங்களும், காந்தீயத்திற்கு நான்கு தூண்கள் போல்வனவாகும்.

இனி காங்கிரசில் சேர்ந்து அதைத் தம் வழிகொண்டு வருவோம். ஜன நாயகத்தை வளர்ப்போம், புரட்சி இயக்கமாக்குவோம், தீவிரக் கொள்கைகளைப் புகுத்துவோம் என்ற எண்ணத்திற்கே இடங்கிடையாது. போனால் பூஜித்து வாழவேண்டும். இல்லையேல் பொசுக்கி விடுவர். அவ்வளவு பாதுகாவலுடன் காந்தீயம் இருக்கிறது.

காந்தீயர்கள் வேண்டுமானால் இன்று தீவிரவாதிகளை விரட்டி விட்டோம், உட்புரட்சியை ஒடுக்கிவிட்டோம் நமக்கோ படை பலம் அதிகம் என எண்ணி பூரிக்கலாம்.

ஆனால் அறிவியல்வாதிகள் அத்தனை பேரும் ஒருகாலத்தில் ஒரு நாட்டு மக்களின் மனதைக் கவர்ந்து மக்களை மயக்கி வந்த காந்தீயத்திற்கு இவ்வளவு பாதுகாவலும், கவசமும், கேடயமும் தேவையாக இருக்கிறதே என்பதை எண்ணும்போது காந்தீயம் கிழப்பருவத்தை அடைந்துவிட்டது; ஆகவே தான் குறுந்தடிகொண்டு தள்ளாடித் தள்ளாடி நடக்கிறது என்பதை அறிவர்.

இனி காந்தீயத்தால் நீண்ட நாளைக்கு நாட்டுத் தலைமையைப் பெற்று வாழ முடியாது. எவ்வளவு காயகற்பம் சாப்பிட்டாலும், நரைமயிர் கருக்குந்தைலம் பூசிக்கொண்டாலும், கிழப்பருவம் மாறாது. ஆனாலும் மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்ற பழமொழிக்கேற்ப, காந்தீயம் கரைந்து சிதைந்து வருகிறதென்றாலும், அதன் ஆசை மட்டும் குறைவதாகக் காணோம். ஆகவேதான் பம்பாயில் கூடிப் பலமான பந்தோபஸ்து போட்டுக்கொண்டது. அது சிலகாலம் காந்தீயத்தைக் காப்பாற்றலாம், ஆனால் காந்தீயம் வெகு விரைவில் சாய்ந்து விடுமென்பதை நாம் முன் கூட்டியே கூறுகிறோம்.

குடிஅரசு, தலையங்கம் -02.07.1939

You may also like...