30. மீனாட்சி அம்மையும் மஞ்சப்பெட்டி ஐயனும்!
நேக்கு நன்னா தெரியண்டி கமலம்! இந்தப்பாழும் பிராமணன் இப்படித்தான் ஆச்சாரங்கெட்டு அலையப்போறான் என்று என மதுரை அம்மாமிமார் பேசியிருப்பர்.
கலிகாலமேன்னோ! எல்லாம் தலைகீழா மாறிவிட்டது. பஞ்சமாளை அம்மன் சன்னதியிலே வுட்டூட்டாளாம். அபச்சாரம்! அபச்சாரம்! ரௌரவாதி நகரமன்னா சித்திக்கும் அவாளுக்கு என்று சனாதன சாஸ்திரிகள் கூறியிருப்பர்.
நானும் பார்த்துண்டே வர்ரேன். அந்த ராமசாமி நாய்க்கன் என்னென்ன சொன்னானோ அவ்வளவும் நடந்துண்டே வர்ரது. ஈஸ்வரனுக்குக் கண்ணில்லே என்று வைதீகர்கள் குளத்தங் கரையில் பேசியிருப்பர்.
இது ஒரு சரியான சான்சுதான் வரப்போற ஜில்லா போர்டு தேர்தலிலே ஒரு கை பார்க்கலாம். இந்த சு.ம.க்களுக்கெல்லாம் இனி வேலை ஏது என்று தேசீய சர்மாக்கள் பேசியிருப்பர்.
தினமணியோ வழக்கப்படி ராஜாஜி வாழ்க என்ற பல்லவியைப் பாடிவிட்டது.
ஆனந்த விகடனுக்கு அத்தோடு திருப்தியில்லை. வாழ்த்துவதற்கு ஆளா இல்லை. ராஜாஜியில் ஆரம்பித்து காந்தியார் வரையில் சென்று, ஒரு மூச்சு வாழ்த்து வாழ்த்தென வாழ்த்தித் தீர்த்துவிட்டது. அதன் ஆசை அவ்வளவோடு தீர்ந்து போகவில்லை.
தம்மவரை வாழ்த்தும் நேரத்தில் பிறரை இடித்து, கோமாளி நடையழகைக் காட்டியே தீர வேண்டுமல்லவா? ஆகவே விகடனுக்கு, அவன் மனக் கண்கள் முன்பு ஒரு அற்புதக் காட்சி நிகழ்ந்ததாம். இமயமலை கிளம்பிந்நாம் கங்கையில் குளித்ததாம் இந்தி ஒளிக! தமிழ் அளிக என்று கூச்சலிட்டதாம்.
மதுரையில் நடந்த கோயில் திறப்பு அற்புதம், காணுவதற்கு முன்னம், மலை அரசன் பேசிய அற்புதங் கண்டதற்குக் காரணம், மனப் பிராந்தி தவிர வேறென்ன? இந்தி எதிர்ப்புக்காரரைப் பற்றி ஏதாவது இரண்டொரு ஏளன வார்த்தை கூறிவிடுவது, ஆனந்த விகடனுக்கு ஆசையாக இருந்தால், அவன் ஆசையுந் தீர்ந்து போகட்டுமே, என்று விட்டு விடுவோம்.
ஆனால், மதுரைக் கோயில் பிரவேசத்தைப்பற்றி எழுதும் போது இந்தி எதிர்ப்பைப் பற்றிப் பேசுவது எவ்வளவு அநாவசியமான, ஆபாசமோ, அவ்வளவு ஆபாசம், மதுரைக் கோயில் பிரவேசத்துக்காக, கனம் ஆச்சாரியாரையோ, காந்தியாரையோ, அவருடைய ஆத்மீக சக்தியையோ போற்றுவது. ஆனால் நாம் மேலே எடுத்துக் காட்டியபடி, மதுரை சம்பவத்தைக் கேட்டவுடனே அவரவர் மனதில் பட்டதைக் கூறுவதைப் போலவே, விகடனும், தன் தலைவர்களுக்கு மதுரைச் சேதியையே மலராகக் கொண்டு அர்ச்சிக்கிறான். பாபம்! அவன் செய்யும் பூஜைக்கு ஏற்ற பலன் அவன் பெறுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், மதுரைக் கோயில் திறந்ததற்குக் காரணம், ஆச்சாரியார் என்று கூறும் போதுதான், அவன் விகடத்துக்கு குறிப்பிட்டமலை எழுந்து வந்து குளித்துக் குளறுவதுகூட உண்மையாகக் கருதப்படக்கூடும், ஆனால் ஆச்சாரியார் கருணை கோயிற் கதவைத் திறந்தது எனக் கூறுதல் முற்றிலும் அபத்தம் என்று கூறவேண்டி இருக்கிறது.
நாட்டிலே இன்று நேற்றல்ல 15-ஆண்டுகளாகப் பரவி வரும் தீவிர உணர்ச்சி எனும் சுழல், வைதீகக் கோட்டைகளைத் தகர்க்கின்றன. அம்முறையிலேயே, மதுரைக் கோயிலும் திறந்தது.
ஆதிதிராவிடரெனும் இந்நாட்டு பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பாதகம் நாட்டைக் கெடுத்து, நாகரிக உலகால் தூற்றப்பட்டு, கண்டிக்கப்பட்டு வருவது, நாட்டிலே உள்ளோரின் கண்களை திறந்து விட்டது.
ஜாதி சமய வேற்றுமைகளால் விளையுங் கொடுமைகள் ஒழிந்தாக வேண்டும் இல்லையேல் சமூகம் அழியும் என சுயமரியாதை இயக்கம் சொல்லி வந்த எச்சரிக்கையின் உண்மையை மக்கள் உணர்ந்துவிடடனர்.
சமுதாயத்துறையிலே சுயமரியாதை இயக்கம் ஆதிதிராவிடருக்கு சம உரிமை வழங்கிய தோடன்றி, பிறரும் வழங்கவே வேண்டும் என நாடு முழுதும் இடைவிடாது செய்துவந்த பிரசங்கத்தின் பலன் உருவாகி வெளிவரலாயிற்று.
அரசியல் துறையிலே ஜஸ்டிஸ் கட்சியினர், ஆதிதிராவிட மக்களுக்கு மதிப்பும் உயர்வும் வரும்படி செய்ததுடன் அச் சமூகத்தின் அரசியல் மதிப்பை அதிகப்படுத்தினர்.
இஸ்லாமிய மதக் கோட்பாடுகளாகிய சம உரிமை, சுதந்திரம் சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவைகளைக்கண்டு, இந்து மதத்தில் இணைக்கப்பட்டிருந்தும் ஜாதி இந்துக்களால் கேவலமாக நடத்தப்படும் கொடுமையை நீக்கிக்கொள்ள துருக்கிகுல்லாய் அணிந்துவிட பல்லாயிரக்கணக்கான ஆதிதிராவிடர் துணிந்து விட்டதைக் கண்ட இந்துமத சமூக பாதுகாப்பாளர்களும், இந்து அரசியல் தலைவர்களும், பதைபதைத்து தமது நிலை இனி மோசமாகப் போய்விடும் என்பதை உணர்ந்து இனியும் இந்நிலை இருத்தல் ஆகாது என எண்ணலாயினர்.
ஆதி திராவிட வகுப்பிலேயே, ஒரு புத்துணர்ச்சியும், புதிய எழுச்சியும், கல்வியும் பெருகி ஜஸ்டிஸ் கட்சியினர் அருளிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் உதவியால், பெரிய உத்தியோகங்களை வகிக்க ஆரம்பித்து அதன் பயனாகவே தமது சமூகத்துக்கு உயர்வும், மதிப்பும் வரும்படி செய்தனர்.
இவ்வளவுக்கும் பிறகு காந்தியார் வட்டமேஜை சென்றபோது அவரை ஆதிதிராவிடர் பிரச்சினை வாட்டி விட்டது.
தனித்தொகுதி ஆதிதிராவிடருக்கு வழங்கப்படவே அது தமது கட்சிக்குப் பேராபத்தாக முடியுமெனத் தெரிந்த காந்தியார் எப்படியாவது ஆதிதிராவிடரின் அரசியல் உரிமைகளைத் தன் கட்சிக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்து கூட்டுத் தொகுதியே வேண்டுமென கூப்பாடு போட்டு, உண்ணாவிரதம் துவக்கி உயிர் போகிறதே உயிர் போகிறதே என்ற கூக்குரலைக் கிளப்பி, ஆதிதிராவிடத் தலைவர்களிடம் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார். அந்தச் சமயத்தில் தான் முதன் முதலாக வாயளவுக்கேனும் தீண்டாதாருக்கு ஆலயப் பிரவேசம் தேவை என்று மெல்ல மெல்லக்கூறினார்.
இதற்கு இடையே நாட்டிலே புரட்சிகரமான மனப்பான்மையைக் கிளப்பி, புது உலகக் கருத்துகளைப் பரப்பி வைத்தனர் சுயமரியாதைக்காரர்கள். நாஸ்திகர்கள், அழிவுவேலைக்காரர்கள், சாதிமதத்தைக் கெடுப்பவர்கள் என்று அவர்கள் தூற்றப்பட்டு வந்த காலத்திலெல்லாம், சுயமரியாதைக் காரர்கள் பழமையை ஒழித்து புதுமைக்கு வித்து போட்டபடி இருந்தனர்.
அதன் பலனாக நாட்டிலே தோன்றிய பல்வேறு சமுதாய சீர்திருத்தங்கள், சமுதாய அமைப்பையே திருத்தி அமைப்பது ஆகியவைகளில் ஒன்றுதான் இந்த தீண்டாதார் ஆலயப்பிரவேசம். இது சரியா, தவறா என்பதை ஆராய விரும்போர் சுயமரியாதை இயக்கத்தின் 15 ஆண்டு சரிதத்தைப் புரட்டிப் பாருங்கள்.
மதுரையில் நடந்த ஆலயப் பிரவேசத்திற்கும் காங்கிரஸ் மந்திரி மார்களுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்று எண்ணிப்பார்க்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும். திடீரென ஒருதினம் மதுரை மீனாட்சியம்மை கோவில் கதவுகள் திறக்கப்பட்டன. தீண்டாதவர்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டனர். திருக்குளத்தில் மூழ்கி திருநீறு அணிந்து திருத்தாண்டகம் பாடி திவ்ய தரிசனம் கண்டனர். பட்டர்கள், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினர். ஆனால் மறுதினம் மீனாட்சியம்மை சிறைப்படுத்தப் பட்டார். கதவுகள் பூட்டியபடி இருந்தன. பட்டர்கள் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டிருந்தனர். சாவிகள் காணப்படவில்லை. ஆலயப்பிரவேசத்தில் அக்கரை கொண்டு வேலை செய்த நிர்வாக அதிகாரி தோழர் ஆர்.எஸ்.நாயுடு அவர்கள் பூட்டுகளை உடைக்கச் செய்தார். புதிய பட்டர்களைத் தருவித்து பூஜைகளை நடத்துவித்தார். இதற்கிடையே தான், களியாட்டமும், கொண்டாட்டமும், முதலமைசர் சொற்பொழிவும், மற்றையோர் கனிவும், அறிக்கைகளும் காந்தியாரின் வாழ்த்தும் வெளிவந்தன.
சநாதனிகள் குய்யோ முறையோ எனக் கூவினர். கோவில் கெட்டுவிட்டது சாமி தீட்டுப்பட்டு விட்டது என முகத்தில் அறைந்துகொண்டழுதனர். அத்துடன் நின்றுவிடவில்லை; உள்ளே சென்ற தீண்டாதவர் அவர்களை உடன் அழைத்துச் சென்றவர்கள், நிர்வாக அதிகாரி தோழர் ஆர்.எஸ்.நாயுடு ஆகியோர் மீது இ.பி.கோ. 295, 297, 143, 109 செக்ஷன்கள் படிக்கு வழக்கும் தொடுத்து விட்டனர்.
வைதீகத்தின் போக்கு எங்ஙனம் உளது என்பதை இச்சம்பவம் தெள்ளெனக் காட்டுகிறதன்றோ? இந்த வைதீகத்தைத்தான் கடந்த 15 வருடமாக சுயமரியாதை இயக்கம் எதிர்த்துப் போராடி வருகிறது.
இனி, கோவில் கதவகள் திறந்த மாயத்தைச் சிறிது ஆராய்வோம். யார் திறந்து விட்டனர், கோயில் கதவுகளை? திறந்தது காங்கரஸ் மந்திரிகளா? இல்லை! கோயில் கதவுகள் திறக்கப்பட்ட சேதி கேட்டு அவர்களே ஆச்சரியப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோவில் கதவுகள் திறக்கும் படியாக ஏதாவது சட்டம் நாம் அடிக்கடி எடுத்துக்காட்டியபடி நிறைவேற்றப்பட்டதா காங்கரஸ் மந்திரி சபையால்? அதுவுமில்லை. சட்டப்படி ஒன்றும் நடக்கவில்லை. சமயத்திற்கேற்ற சம்பவம் நடந்ததேயன்றி சட்டத்தின்படி யாதொன்றும் நிகழவில்லை.
இன்று மதுரையில் நடந்தது என்றும் நீடித்திருக்குமா? அன்றி முளைத்த மாஞ்செடியை காட்டி காசு வாங்கிக்கொண்ட பிறகு ஜாலவித்தைக்காரன் தனது கடையைக் கட்டிக்கொண்டு போய்விடு வதைப் போல, இந்த மதுரை மாயமும் மறைந்து விடுமா? என்று கேட்கிறோம்.
மதுரை, இராமநாதபுரம் ஜில்லாக்களிலே வர இருக்கும் ஜில்லா போர்டு தேர்தலுக்கு இந்த மதுரைக் கோயில் பிரவேசத்தைப் பற்றிச் சரமாரியாகப் பேசி, இந்தச் சிறு காரியமும் இவர்களால் நடக்கவில்லை என்ற போதிலும் தம்மாலேயே நடந்ததாகக் கூறிக்கொண்டு மக்களை மயக்கி ஓட்டு வாங்கிக்கொண்டு பிறகு சநாதனிகள் எதிர்ப்பு பலமாகிவிட்டது, கோயிலுக்கு பக்தர்கள் வருவதே குறைந்துவிட்டது, ஆசாரம் பாழாயிற்று, கோயில் அதிகாரிகள் மனதை மாற்றிக்கொண்டார்கள், இதை நீடித்து நடத்தினால், கலகமும, சமாதான பங்கம் ஏற்படுமெனக் கருதுகிறோம் என ஏதாவது சாக்குகளைக் கூறி, திறந்த கதவை மூடிவிடுவார்களா? என்று கேட்கிறோம்.
இந்த சந்தேகம் தோழர் எம்.சி.ராஜா அவர்களுக்கும் இருக்கிறது. இந்த அற்புதம் இன்றோடு நிற்குமா என்றும் உண்டா? இப்படித்தான் பூனா ஒப்பந்தத்தின் போது பலகோயில்கள் திறந்து விடப்பட்டன. நான் சில கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஆனால் பிறகு திறந்த கோயில்கள் திரும்பவும் மூடப்பட்டன. அவ்விதமின்றி மதுரைச் சம்பவம் நீடித்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கிறார். இதைத்தான் நாமும் விரும்புகிறோம்.
கடைசியாக மதுரை முதலிய இடங்களிலே நடந்த கோவில் பிரவேசம் காங்கரஸ் மந்திரிகளின் சட்டத்தினாலோ கருணையாலோ ஏற்படவில்லை என்பதும் மாறாக, இன்னமும் மற்றையக் கோவில்கள் திறக்கப்பட ஒட்டாது தடையாக இருப்பது காங்கரஸ் சர்க்கார் தான் என்பதும் மீனாட்சியம்மை கோபித்துக்கொள்ளவில்லை என்பதும் காங்கரஸ் சநாதன அய்யர்கள் தான் கோபித்துக்கொள்கிறார்கள் என்பதும் இந்த சநாதனீயத்தைத் தான் கடந்த 15 வருடமாக நாம் எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பதும் வாசகர்களுக்கு விளங்கும் என நம்புகிறோம்.
குடிஅரசு, தலையங்கம் – 16.07.1939