13. காங்கிரஸ் வீணர் கர்மபலன்
காங்கிரஸ்காரர் வீரத்தனத்தின் பயனாகவோ பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளின் பெருந்தன்மையின் பயனாகவோ அல்லது பிரிட்டிஷ் ஆட்சியின் இயற்கைப் பயனாகவோ மாகாணங்களுக்கு சுயஆட்சி அளிக்கப்பட்டது. எல்லா மாகாணங்களையும் ஒன்றுபடுத்தி இந்தியாவை ஒரு நேஷனாக்க சமஷ்டி அரசுத் திட்டமும் வகுக்கப்பட்டது. மாகாண சுய ஆட்சித் திட்டத்தில் பல குற்றம் குறைகள் இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு அமல் நடத்தி சாத்தியமான நன்மைகளை நாட்டுக்கும் மக்களுக்கும் செய்து மேற்கொண்டு அதிகப்படியான நன்மைகளைப் பெறலாமென நம்பி காங்கிரஸ்காரர் நீங்கலாக உள்ள இந்திய அரசியல் வாதிகள் எல்லாம் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை வரவேற்றனர். ஆனால் ஏனைய அரசியல் வாதிகளைப் போல குறைகூறிக்கொண்டே தாமும் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை வரவேற்றால் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தமக்கும் வித்தியாச மில்லாது போகுமே என எண்ணி காங்கிரஸ்காரர் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை நிராகரிக்கவேண்டுமென்றும் அதில் ஏராளமான பாதுகாப்புகளும் விசேஷாதிகாரங்களும்அடங்கியிருப்பதினால்நாட்டுக்குநன்மையே விளையா தென்றும் ஏகாதியத்தியத்தை வலியுறுத்துவதற்கே அது பயன் பெறுமென்றும் அந்நியரால் வகுக்கப்பட்ட அத்திட்டத்தை இந்தியர்கள் தீண்டவே கூடாதென்றும் பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியல் திட்டத்தை வகுக்க வேண்டுமென்றும் எல்லோருக்கும் போலவே இந்தியர்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டென்றும் காங்கிரஸ்காரர் வான்முகடு தட்டும் வரை கூச்சல் போட்டார்கள். புதுச் சீரிதிருத்தப்படி பொதுத்தேர்தல் நடந்த போது சீர்திருத்தத்தை நிராகரிக்கப் போவதாகச் சொல்லி வோட்டு வேட்டையம் ஆடினார்கள். அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்ட வசமாகவோ காங்கிரஸ்காரருக்கு 7-மாகாணங்களில் மெஜாரட்டி கிடைத்தது.
காங்கரஸ் சண்டித்தனம்
சட்டசபையில் மெஜாரட்டியுடைய கட்சிக்கே மந்திரிசபை அமைக்க உரிமையுண்டென்ற ஜனநாயக சம்பிரதாயப்படி காங்கிரஸ் மெஜாரட்டி பெற்ற ஏழு மாகாண கவர்னர்களும் அந்தந்த மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவர்களை மந்திரிசபை அமைக்குமாறு அழைத்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கவர்னர்களின் அழைப்புக்கணிங்கிச் சென்றனராயினும், காரியக்கமிட்டியில் அவர்கள் தீர்மாமனித்தபடி காங்கிரஸ் மந்திரிகளின் அன்றாட வேலைகளில் கவர்னர் தலையிடுவதில்லையென வாக்குறுதியளியாமல் பதவியேற்க முடியாதென்று கூறினர். மாகாண கவர்னர் அவ்வேண்டுகோளுக்கினங்காது போகவே பதவியேற்க முடியா தென்று 7- மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் கூறி விட்டனர் கடைசியில் மாகாண சுயஆட்சி அமலில் வரும் ஏப்ரல் மாதமும் வந்தது. காங்கிரஸ் மெஜாரட்டி பெற்ற மாகாணங்களில் காங்கரஸ்காரர் மாகாண சுய ஆட்சியைக் கண்டித்து கறுப்புக்கொடி ஊர்வலங்களும் ஹர்த்தாலும் நடத்தி துக்கம் கொண்டாடினர். மாகாண கவர்னர்கள் இடைக்கால மந்திரிகளை நியமனம் செய்து மாகாண சுயஆட்சி அங்குராப்பணத்திருநாளை நடத்தி வைத்தனர். காங்கிரஸ்காரர் ஏமாந்தனர். தாம் மந்திரிசபையமைக்காவிட்டால் 7 மாகாணங்களிலும் முட்டுக்கட்டை விழுந்து விடும் என எண்ணி காங்கிரஸ்காரர் தாம் நினைத்தது போல் நடக்காது போகவே இடைக்கால மநதிரிகளைத் திட்டும் திருத்தொண்டை அவர்களாகவே மேற்போட்டுக்கொண்டு இடைக்கால மநதிரிகள் மீது வசைபுராணம் படிக்கலானார்கள்.
காங்கிரஸ் – சர்க்கார் பேரம்
அப்பால் மந்திரி பதவி ஒப்புக்கொள்ளாத காரணங்களை விளக்கிப்பத்திரிகைகளில் காங்கிரஸ் காரர் அறிக்கை மேல் அறிக்கைகள் வெளியிட்டார்கள். காங்கிரஸ் சர்வாதிகாரியான காந்தியாரும் அறிக்கைகள் வெளியிட்டார். கடைசியில் காங்கிரஸ்காரருக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் வைஸ் ராய்க்கும் பத்திரிகைகள் மூலம் பேரம் நடந்தது. அந்தப்போதத்தின் பயனாக காங்கரஸ்காரர் கோரிக்கையை வைஸ்ராயும் இந்தியா மந்திரியும் ஒப்புக்கொண்டு விட்டதாக காங்கிரஸ்காரர் மனப்பால் குடித்துக்கொண்டு பதவியேற்க முன்வந்தனர். இடைக்கால மந்திரிகளும் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்து அவர்களுக்கு இடவசதியளித்தார்கள். ஏழு மாகாணங்களிலும் காங்கரஸ் மந்திரி சபைகளும் ஸ்தாபிதமாயின. அப்பால் காங்கரஸ் தலைவர் ராஷ்டிரபதி, பண்டித ஜவஹர்லால் டில்லிமா நகரத்திலேகாங்கரஸ் மாகாண சட்டசபை காங்கிரஸ் கட்சி மெம்பர்களின் தர்பார் நடத்தினார். பிரதி நிதித்துவ சபை கூட்டி இந்தியாவின் அரசியல் திட்டத்தை வகுக்கவேண்டும் என்றும் அதற்கு காங்கிரஸ் மந்திரிகள் ஆயத்தம் செய்ய வேண்டும் என்றும் இந்தியாவின் லக்ஷ்யம் பூரண சுயேச்சையே என்றும் ராஷ்டிரபதி முன்னிலையிலே காங்கிரஸ் சட்டசபை மெம்பர்கள் சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டார்களாம். பிறகு ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிகள் ஆட்சி ஆரம்பமாயிற்று. காங்கிரஸ்காரர் பதவியேற்று இன்று சுமார் 598 நாட்களும் ஆகின்றன.
பதவி ஏற்றபின்
சீர்திருத்த நிராகரிப்புப் பேச்சு மங்கியே போய்விட்டது. பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியல் வகுக்கும் முயற்சியும் காணப்படவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைப்படி அடக்குமுறைச் சட்டங்கள் ஒழிக்கப்படவில்லை.வரிகள் குறைக்கப்படவில்லை பழைய மந்திரிகளைக் காட்டிலும் மோசமாக காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகம் நடத்தி வருகிறார்கள். சில மாகாணங்களில் மது விலக்கின் பேரால் பல தினுசு புதுவரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எல்லா காங்கிரஸ் மாகாணங்களிலும் அடக்கு முறைச்சட்டங்கள் தீவிரமாகத் தாண்டவமாடுகின்றன. ராஜத்துரோகமே காங்கிரஸ்காரர் மதம், ராஜத்துரோகி எனக் கூறிக்கொள்ள காங்கிரஸ் காரர் அஞ்சவோ தயங்கவோ கூடாது என மாஜி ராஷ்டிரபதி ஜவஹர்லால் பகிரங்கமாகக் கூறியிருந்தாலும் காங்கிரஸ் மாகாணங்களிலே ராஜதுரோக வழக்குகளும் தாராளமாகத் தொடரப்படுகின்றன. தொழிலாரனை வரையும் கிசான்களையும் நசுக்கவும் தீவிரமான முயற்சிகள் செய்யப்படுகின்றன.
காந்தியார் மழுப்பல்
இவைகளுக்கெல்லாம் சர்வாதிகாரியான காந்தியாரும் அவரது சகாக்களான காங்கரஸ்காரிய கமிட்டி மெம்பர்களும் உடந்தையாகவே இருந்து வருகிறார்கள். காங்கரஸ் தீர்மானப்படி அடக்குமுறைச் சட்டங்களை ஏன் ஒழிக்கவில்லையென்று கேட்டால் காங்கரஸ் தீர்மானங்களை அவ்வளவாகப் பிரமாதப்படுத்தத் தேவையில்லையென்றும் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி தான் நடக்கவேண்டு மென்றும் காங்கரசுக்கு வழிகாட்டியாயிருக்கும் காந்தியார் கூறுகிறார். காரியக் கமிட்டி மெம்பர்களும் காந்தியார் பேரால் பாசிஸ்டு நாடகம் ஆடி வருகிறார்கள். சமஷ்டியை இந்தியர்கள் தலையில் சுமத்த பிரிட்டிஷ் சர்க்கார் பூர்வாங்க வேலைகள் செய்து வந்தாலும் அதை எதிர்க்க, காங்கரஸ்காரர் காங்கரஸ் தீர்மானப்படி உருவான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. அடுத்த சுதந்தரப் போருக்கு நாட்டை ஆயத்தப்படுத்தவே பதவியேற்றதாகவும் ராஜிநாமாக் கடிதத்தை ஜேபியில் போட்டுக்கொண்டே காரியங்கள் நடத்துவதாகவும் சதா புலம்பிக்கொண்டிருக்கும் காங்கரஸ் மந்திரிமார் வரப்போகும் சுயேச்சைப் போருக்கு ஆயத்தம் செய்யாமல் மாகாண கவர்னர்களும் வைஸ்ராயும் இந்தியா மந்திரியும் பாராட்டும்படி சீர்திருத்த சட்டத்தை அமல் நடத்தி சீர்திருத்தச் சட்டப்படியுள்ள காலம் முழுதும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவே முயன்று வருகிறார்கள்.
சுபாஷ் எதிர்ப்பு
அத்துடன் சமஷ்டியை ஒப்புக்கொள்ள பிரிட்டிஷாருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் மறைமுகப் பேச்சுகள் நடந்து வருவதாயும் சமஷ்டி மந்திரிகள் ஜாபிதாக்கூட தயார் செய்யப்பட்டு விட்டதென்றும் கூறப்படுகிறது. இவ்விஷயங்களை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் மந்திரிகள் தீவிரமாக வேலை செய்யாததைக்கண்டித்து பல சந்தர்ப்பங்களில் சாடையாகப் பேசினார். சமஷ்டியை எக்காரணம்பற்றியாவது காங்கிரஸ்காரர் ஒப்புக்கொண்டால் தாம் காங்கிரசை விட்டுப் பிரிந்து சமஷ்டியை எதிர்த்து தீவிரமாகப் போராடப்போவதாயும் சொன்னார். மற்றும் அடுத்த போருக்கு எல்லாரும் ஆயத்தமாக இருக்கவேண்டுமென்றும் அப்போர் அதிதீவிர கடைசிப் போராயிருக்குமென்றும் அவர் கூறினார். இவையாவும் காந்தி கோஷ்டியாருக்குப் பிடிக்கவில்லை. சட்டமறுப்புப் போரில் நன்கு அனுபவப்பட்ட காந்தியாருக்கு இனிச் சட்ட மறுப்புத் தொடங்கினால் பலிக்காதென்றும் கிடைத்த சீர்திருத்தத்தைப் பெற்றுமேற்கொண்டு அதிக அதிகாரம் பெற பிரிட்டி ஷாருடன் இணங்கி உழைப்பதே மேல் என்றும் உணர்ந்து சமஷ்டியை ஒப்புக்கொள்ள அவர் அந்தரங்கமாக முடிவு செய்திருக்கவேண்டும். எனினும் அதை வெளிப்படையயாகக் கூறாமல் காங்கிரசிலே ஊழல்கள் மிகுந்துவிட்டன வென்றும் இந்நிலையில் சத்தியாக்கிரகப் போருக்குத் தலைமை வகித்து நடத்த தம்மால் முடியாதென்றும், மழுப்பிக்கொண்டு வந்தார். அடுத்த வருஷமும் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக வந்தால் தமது அந்தரங்க எண்ணம் நிறைவேறாதென்றெண்ணி அவர் போட்டி போடக்கூடாதென்றும் அந்தரங்கமாக கேட்டுக்கொண்டாராம். அதை லக்ஷ்யம் செய்யாமல் சுபாஷ்போஸ் தேர்தலில் போட்டி போட முன் வரவே சுபாஷ்போஸால் நியமனம் செய்யப்பட்ட காரியக் கமிட்டி மெம்பர்கள் சிலர் படேல் தலைமையில் சுபாஷை ஆதரிக்கக் கூடாதென்றும் பட்டாபியை ஆதரிக்கவேண்டுமென்றும்அறிக்கை வெளியிட்டனர். கடைசியில் சுபாஷ்போஸ் பெரும்பான்மை வோட்டுகளால் காங்கரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே.
காந்தியார் சதி
தேர்தலில் வெற்றிபெற்ற போஸை ஆதரிக்க வேண்டியதே ஜனநாயகமுறைப்படி காங்கிரஸ் காரர் கடமை. ஆனால் காந்தியாரும் அவரைச் சேர்ந்தவர்களும் சுபாஷ் போஸைக் கவிழ்க்க சதி செய்து வருவதாய்த் தெரிகிறது. காந்தி மீதும் காந்தி கோஷ்டியார் மீதும் நம்பிக்கையிருப்பதாய் இப்பொழுது அறிக்கைமேல் அறிக்கைகள் வெளிவருகின்றன. சுபாஷ் சந்திரபோஸ் மீது நம்பிக்ககையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சுபாஷ் சந்திர போஸ் நோயுற்றிருந்தாலும் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் செல்ல உறுதி செய்துவிட்டதாய்த் தெரிகிறது. எனினும் அவரது உடல்நிலை மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க உதவி புரியக்கூடியதாயில்லை. காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்ததெடுக்கப்பட்டவர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க சத்தியற்ற வரானால் ஒரு ஆக்டிங் தலைவரை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகார மிருக்கிறதாம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் காந்தி கோஷ்டியாருக்கு மெஜாரிட்டி பலமிருப்ப தினால் ஒரு ஆக்டிங் தலைவரை நியமித்து தம்மிஷ்டப்படி காரியங்கள் நடத்தக் கூடும் என்று தோற்றுகின்றது. சுபாஷ் போசுக்காக வக்காலத்துப் பேசுவது நமது கருத்தல்ல.
சுபாஷ் எப்படி தீவிர வாதியாவார்?
ஆனால் சுபாஷ் போஸ் செய்த பாவம் என்ன? என்பது தான் கேள்வி. காங்கிரஸ்காரர் ஏகோபித்து நிறைவேற்றிய தீர்மானத்தைத் தானே அவர் வறுபுறுத்துகிறார். மாகாண சுய ஆட்சியையும் சமஷ்டியையும் நிராகரித்து பிரதிநிதித்துவ சபைகூட்டி எதிர்கால அரசியலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று காங்கரஸ் தீர்மானம் செய்யவில்லையா? அநத்த் தீர்மானப்படி நடக்க வேண்டு மென்று தானே சுபாஷ் போஸ் சொல்லுகிறார். அதனால் அவர் எவ்வாறு தீவிரவாதியாவார்? இதனால் காந்தீயத்திலும் அஹிம்சையிலும் அவருக்கு நம்பிக்கையில்லையென எவ்வாறு ஏற்படும்? அவரது வேலைத்திட்டத்தை வெளியிட அவர்களுக்கு சந்தர்ப்பமளியாமலேயே அவர்மீது குற்றம் காட்டுவது நீதியாகுமா? நேர்மையாகுமா? மாகாண சுய ஆட்சியையும் சமஷ்டியையும் நிராகரிக்கப் போவதாய்க் கூறியது வெறும் பூச்சாண்டிதானா? காந்தி கோஷ்டியார் போக்கைப் பார்த்தால் அவர்கள் சொன்னதெல்லாம் வீண்மிரட்டல் என்றே தோற்றுகிறது. அவர்கள் சொன்னது சரியோ தப்போ, அவர்களது வாய்க்கொழுப்பே அவர்களது உடையிலும் உடலிளும் இப்பொழுது வடிந்து நாற்றமெடுக்கிறது. அதற்கு சுபாஷ் போஸ் மீது வீண்பழி போடுவானேன்? நாங்கள் சொன்னதெல்லாம் தப்பு, மாகாண சுய ஆட்சியை வீழ்த்தவோ சமஷ்டியை தவிடுபொடியாக்கவோ எங்களால் முடியாது. சட்டமறுப்புப் பூச்சாண்டி காட்டவும் இனி முடியாது. ஆகவே கிடைத்த சீர்திருத்தத்தை மரியாதைக்கு ஒப்புக்கொண்டு பிரிட்டிஷாருடன் இணக்கிப் போனால் தான் காங்கிரஸ் மானத்தைக் காப்பாற்ற முடியயும். இன்றேல் காங்கிரஸ் மானம் கெட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறி தேச மக்களிடம் மன்னிப்புக் கேளாமல் வீணே போஸ் மீது பழிபோட்டு நாட்டைக் குட்டிச்சுவராக்குவது மன்னிக்க முடியாத அக்கிரமமாகும். 10-ந் தேதி கூடப்போகும திரிபுரா காங்கிரசில் என்ன நடக்கப்போகிறதென்று பார்ப்போம்.!
குடிஅரசு, தலையங்கம்- 5.3.1939