21. காந்தீயத்தொல்லை
காந்தியாருக்கு எப்படியோ மகாத்மாப் பட்டம் கிடைத்து விட்டது. அந்த மகாத்மாப் பட்டமளித்தவர் ஒரு வெள்ளைமாதரசியானாலும் பார்ப்பனர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தமது ஆதிக்கத்தை இந்தியாவிலே மீண்டும் நிலைநிறுத்த முயன்று வருகின்hறர்கள். பார்ப்பன ஸ்தாபனமான காங்கிரசிலே மதிப்பும் ஆதிக்கமும் பெற வேண்டுமானால் பார்ப்பனர்களின் ஆதரவில்லாமல் முடியாதென தந்திரசாலியான காந்தியாருக்கு நன்கு தெரியும். ஆகவே தேசீயத்தின் பெயரால் ? ராமராஜ்யத்தின் பெயரால் ? தர்ம ராஜ்யத்தின் பெயரால் ? பார்ப்பனியத்துக்குப் புத்துயிரளிக்க காந்தியாரும் தீராப்பொறியாக இணங்கி வேலை செய்து வருகிறார். அவரது முயற்சி பலிக்க வேண்டுமானால் அவரது கொள்கைகளை மக்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமானால் இதுவரை எவரும் சாதியாத ஒரு காரியத்தை அவர் சாதிக்கவேண்டும். அப்பொழுது தான் அவருக்குத் தனிப் பெரும் தலைமையும் சிறப்பும் கிடைக்கும். ஆகவே இந்தியா பூராவும் மதுவிலக்குச் செய்து அழியாப் புகழையடைய அவர் ஆசைப்படுகிறார். குருட்டாம்போக்கில் 6 மாகாணங்களில் சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரட்டி கிடைக்கவே அந்த மெஜாரட்டியை தமக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கருதி காங்கிரஸ் தீர்மானத்துக்கு நேர்மாறாக பதவியேற்கவும் சிபார்சு செய்தார். காந்தியார் சிபார்சுக்குத் தனி மதிப்புண்டல்லாவா? எனவே காங்கிரஸ்காரரும் பதவியேற்க முன் வந்து முதலில் 6 மாகாணங்களில் மந்திரி சபை ஸ்தாபித்து இப்பொழுது 8 மாகாணங்களில் காங்கிரஸ் ஆதிக்கத்தை ஸ்தாபித்து விட்டனர்.
காந்தியார் கட்டளை
பதவியேற்று நிர்வாகம் செய்யத்தொடங்கிய பிறகு புதுச்சீர்திருத்தம் அவர்கள் முன் பிரச்சாரம் செய்ததுபோல் உதவாக்கரை சீர்திருத்த மல்லவென்றும் அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் நிலைவரமான நன்மைகள் செய்ய முடியுமென்றும் உணர்ந்தனர். காந்தியாருக்கோ இந்த ரகசியம் முன்னாடியே தெரியும். எனினும் பாமரமக்களை ஏய்த்து அவர்கள் ஆதரவைப் பெறும் பொருட்டு காங்கிரஸ்காரர் பொய்ப் பிரச்சாரம் செய்வதை அவரும் ஆதரித்துக்கொண்டிருந்தார். இப்பொழுது தமது யோசனைப்படி எட்டு மாகாணங்களில் காங்கிரஸ்காரர் நிர்வாகம் செய்து வருவதினால் தமது கிறுக்குத் தனங்களை நிறைவேற்றிக்கொள்ள எண்ணி 3 வருஷகாலத்துக்குள் காங்கிரஸ் மாகாணங்களில் மதுவிலக்கச் செய்து தீரவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார். அவரது கட்டளையை அமலுக்குக் கொண்டுவர ஏனைய மாகாண காங்கிரஸ் மந்திரிகள் சிறிது தயங்கினும் அவரது சம்பந்தயான சென்னை மாகாண முதன் மந்திரியார் முதன் முதலில் சேலம் ஜில்லாவில் மது விலக்குச்செய்து ஏனைய மாகாணங்களுக்கும் வழிகாட்டலானார். இப்பொழுது மற்ற மாகாண காங்கிரஸ் மந்திரிகளும் மெல்ல மெல்ல மதுவிலக்குச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்; எனினும் முதன் முதல் மதுவிலக்குச் செய்த பெருமை சென்னை மாகாணத்துக்கே.
நாலரைக்கோடி கடன்
அதை எல்லோரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். மதுவிலக்குச் செய்ததினால் முதல் வருஷத்தில் சென்னை சர்க்காருக்கு சுமார் 4 லக்ஷ்ம் நஷ்டமேற்பட்டதானாலும் இதர ஜில்லாக்கலால் வருமானத்தில் 13-லக்ஷ்ம் வரை உயர்ந்ததினால் நஷ்டம் அவ்வளவாக சர்க்காரை பாதிக்கவில்லை. பிந்திய வருஷங்களில் மேலும் 5-ஜில்லாக்களில் மதுவிலக்குச் செய்யப்பட்டதினால் நஷ்டம் சர்க்காரைக் கடுமையாக பாதிக்கத் தொடங்கிற்று. எனவே சுமார் 4.5கோடி ரூபாய் வரை கடன் வாங்கி கனம் ஆச்சாரியார் சமாளித்துக்கொண்டார். அடுத்த வருஷத்துக்கு துறைமுக நிதியிலிருந்து சுமார் அரைகோடி ரூபாய் வரை சட்ட பூர்வீகமான திருட்டு நடத்தியும் வரவு செலவைச் சரிக்கட்ட முடியவில்லையாம். சுமார் 16-லக்ஷம் பள்ளம் விழப்போகிறதாம். அகவே விற்பனைவரி, புகையிலை வரி, மின்சார வரி போன்ற பல தினுசு வரிகள் வரப்போகின்றனவாம். அவற்றுள் விற்பனை வரிக்கு இப்பொழுதே இமாலய எதிர்ப்புத் தோன்றி இருக்கிறது. சில்லறை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் ஜாதிமத வித்தியாசமின்றி விற்பனை வரியை எதிர்த்து வருகிறார்கள். ஆகவே விற்பனை வரியை ஆதரிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ்காரருக்கு ஏற்பட்டுவிட்டது.
பகட்டுப் பேச்சு
விற்பனைச் சட்டம் அமலுக்கு வந்தால் வியாபாரிகள் சரியான கணக்குவைக்க குமாஸ்தாக்கள் நியமிக்கவேண்டிய அவசியமுண்டாகுமென்றும், அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியுமென்றும், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரிய தரிசி தோழர் ஸி.பி.சுப்பையா கூறுகிறார். ஆனால் இது வெறும் பகட்டுப் பேச்சாகும். விற்பனை வரியை நிர்ணயம் செய்ய வேண்டிய பொறுப்பு சர்க்கார் உத்தியோகஸ்தர்களான அசார்களுக்கு, ஆகையினால் கணக்கர்களுக்குத் தேவையே உண்டாகாது. ஆனால் அசார்கள் தொல்லை மூலம் வியாபாரிகளுக்கு பல இடைஞ்சல்களும் ஆபத்தும் உண்டாகப்போவது உறுதி. மற்றும் விற்பனை வரியை ஐரோப்பிய வர்த்தகர்கள் எதிர்க்கவில்லை யென்றும் இந்திய வர்த்தகர்கள் எதிர்த்து காங்கிரஸ் சர்க்காருக்கு இடையூறு செய்யலாமா என்றும் கனம் ஆச்சாரியார் சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சொன்னார். அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு தோழர்கள் சுப்பையாவும் பார்லிமெண்டரி காரிய தரிசி என்.எஸ். வரதாச்சாரியாரும் ஐரோப்பிய வர்த்தகர்களும் விற்பனை வரியை எதிர்க்கவில்லையே! பெரிய இந்திய வர்த்தகர்கள் தானே சுயநலம் காரணமாக எதிர்க்கிறார்கள் என்றெல்லாம் செல்லுமிடங்களில் எல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மை என்ன? ஐரோப்பிய வர்த்தகர்களும் ஏனைய இந்திய பெரிய சிறிய வர்த்தகர்களும் விற்பனை வரியை எதிர்த்து கனம் முதன் மந்திரியாரிடம் முறையிட்டுத்தான் இருக்கிறார்கள். அச்செய்தி பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது. எனினும் காங்கிரஸ் வாதிகள் என்றென்றும், காந்தி பக்தர்கள் என்றும் கூறிக்கொள்ளும் மேதாவிகள் வேண்டுமென்றே பொய்ப்பிரச்சாரம் செய்து வருவது எவ்வளவு யோக்கியப் பொறுப்பானது என்று வாசகர்தான் நிதானம் செய்துகொள்ளவேண்டும்.
தினமணி புளுகு
மற்றும் ஆச்சாரியார் பத்திரிகையான தினமணி விற்பனை வரியை ஆதரித்து எழுதிய போது சாமானிய ஜனங்களுக்கு விற்பனை வரியினால் நஷ்டமுண்டாகாதென்று காட்டும் பொருட்டு ஒரு உதாரணம் கூறிற்று. அதாவது பெட்ரோல் விலையில் காலன் ஒன்றுக்கு ஒன்றரை அணா கூட்டினால் அதை பெட்ரோல் விலையில் கூட்டமாட்டார்கள் என்றும் பெட்ரோல் விலையைக் கூட்டினால் பெட்ரோல் செலவு குறைந்துவிடுமென்று அவர்களுக்குத் தெரியுமென்றும் ஒருகால் ஒன்றோ அரையோ அணா கூடிவிட்டாலும் பஸ் சொந்தக்காரர் பஸ் கட்டணத்தை உயர்த்தமாட்டார்கள் என்றும் கட்டணத்தைக் கூட்டினால் பிரயாணிகள் வரமாட்டார்கள் என்றும் எல்லாம் தெரிந்த ஞானிபோல் தினமணி கூறுகிறது. தினமணி அவ்வாறு கூறியது இயற்கைக்கு முரணானதென்றும் பெட்ரோல் விலையில் ஒன்றரை அணாக் கூட்டினால் அது சாமானிய மக்கள் தலையிலே பொறுக்குமென்றும் விடுதலை அப்பொழுதே தினமணி கன்னத்திலடித்ததுபோல் விடையளித்தது. இப்போழுது விடுதலை கூறியதுதான் மெய்யாகியிருக்கிறது. கிண்டி தென் இந்திய டிரான்ஸ் போர்ட் கம்பெனி லிமிடெட் மானேஜிங் டைரக்டர் தோழர் எஸ்.வரதராஜுலு வெளியிட்டிருக்கும் ஒரு தூண்டுப் பிரசுரத்தில் மதராஸ் கவர்ன்மெண்டார் பெட்ரோல் பம்புகளிலிருந்து மொத்தமாக வாங்கப்படும் ஒவ்வொரு காலன் பெட்ரோலுக்கு விற்பனை சாஸ்திவரி ரூ.0-1-6 விதித்திருக்கிறபடியால் பெட்ரோல் விலை ரூ.1-2-0-ல் இருந்து ரூ.1-3-6-க்கு உயர்த்ப்பட்டிருக்கிறது. இந்த ரூ.0-1-6வை நாம் கொடுப்பதற்கு பஸ்ஸில் தற்காலம் இருக்கும் டிக்கட்டுகளின் ரேட்டை உயர்த்த வேண்டியது அவசியம். இல்லாது போனால் கட்டுபடியாகாது. ஆகவே முக்கியமாக நாங்கள் மதராஸ் பிராட்வேயிலிருந்து சைதாப்பேட்டைக்கும் அதுபோல சைதாப் பேட்டையிலிருந்து பிராட்வேக்கு டிக்கட்டின் ரேட்டை ரூ.0-1-6-ல் இருந்து ரூ.0-2-0க்கு ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து உயர்த்தப் போகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விடுதலை சொன்னதே சரி
இதனால் விடுதலை சொன்னது சரியென்றும் சென்னை அசம்பிளி மெம்பர் தோழர் டி.எஸ்.சொக்க லிங்கத்தை ஆசிரியராகக்கொண்ட தினமணி சொன்னது தப்பென்றும் விளங்குகிறதல்லவா? இது போலவே விடுதலையும், குடிஅரசும் சொல்வது தான் கடைசிவரைச் சரியாக இருக்கப் போகிறது. காங்கிரஸ் மந்திரிகளை ஆதரிக்கும் ஆத்திரத்தில் தினமணி சொல்வதெல்லாம் கடைசியில் பொய்யாகத்தான் ஆகப்போகிறது. வியாபாரிகள் எதிர்ப்பு வலுவடைவது கண்ட தினமணியும் காங்கிரஸ் வாதிகளும் இப்பொழுது பல்லவியை மாற்றிப் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது விற்பனை வரி வியாபாரிகளை பாதிக்காதாம். சாமானிய ஜனங்களைத்தான் பாதிக்குமாம். விற்பனை வரியை சரக்குகளின் விலையில் கூட்டி வியாபாரிகள் தாராளமாக விற்கலாம். இன்னவிலைக்குத் தான் வியாபாரிகள் விற்க வேண்டுமென்று எந்தச் சட்டமும் கட்டாயப்படுத்தவில்லையாம். ஆகவே வியாபாரிகளுக்கு இஷ்டமான விலைக்குத் தங்கள் சரக்குகளை விற்கலாம் என்று காங்கிரஸ்காரரும் தினமணியும் பிரச்சாரம் செய்து வருவது எவ்வளவு ஆபத்தானதென்று நாம் கூறத்தேவையில்லை.
விநோத காரணம்
வியாபாரிகள் தம்மிஷ்டப்படி சரக்குகளை விற்கும்போது வாங்கவோர் தானே நஷ்டமடைய வேண்டும். வாங்குவோர் இந்த நஷ்டத்தை பொறுத்துக்கொள்வதற்கு சென்னை புத்தக விளம்பரப் பத்திரிகை ஒன்று ஒரு விநோதமான காரணம் கூறுகிறது. விற்பனை வரி வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட வரியல்ல; வாங்குவோருக்கு விதிக்கப்பட்ட வரியேயாகும். மது விலக்குப் போன்ற திட்டங்களால் பொது ஜனங்களின் வாங்கும் சக்தி பெருக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெருக்கப்படு வதினாலே ஒவ்வொருவர் கையிலும் கொஞ்சம் பணம் மீதமாகிறது. அதில் ஒரு பகுதியை விற்பனை வரியின் பெயரால் ஒப்படைப்பது கஷ்டமா? என அந்தப் புத்தக விளம்பரத்திரிகை வாய்கூசாது கேட்கிறது. மதுவிலக்குத் திட்டத்தினால் மாஜி குடிகாரர்கள் கையில் ஒருகால் கொஞ்சப் பணம் மிதமாகலாம். அவர்கள் வாங்கும் சக்தி பெருக்கப்பட்டும் இருக்கலாம்.
அவை பணக்கார நாடுகள்
அந்த மீதத்தொகையில் ஒரு பகுதியை சர்க்காரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுனதும் நியாயமாக இருக்கலாம். மாஜிக்குடியர் அடைந்த இலாபத்துக்காக குடியாத ஏனையோரும் நஷ்டமடைய வேண்டும் எனக்கூறுவது என்ன நீதி? என்ன ஒழுங்கு? இந்த இரகசியத்தை அந்தக் புத்தக விளம்பரப் பத்திரிகை எந்த பொருளாதார நிபுணரிடமிருந்து கற்றுக்கொண்டது? மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற தேசங்கள் விற்பனைவரி வாங்குவதை அப்புத்தக விளம்பரப் பத்திரிகை திருஷ்டாந்தமாக எடுத்துக் காட்டுகிறது. அந்தத் தேசங்கள் வர்த்தகம் கைத்தொழில்களில் முன்னேற்ற மடைந்த பணக்கார தேசங்களாக இருப்பதினாலும் அந்நாடு மக்களின் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதினாலும் விற்பனை வரி கொடுக்க அவர்கள் சக்தியுடையவர்களாக இருக்கக்கூடும். இந்தியர்கள் சாராசரி வருமானமோ தினம் ஒன்றரை அணாதான். அதில் ஒரு பகுதியை விற்பனை வரி மூலம் எங்களுக்கு அழுதுவிடு என்று கேட்கும் காங்கிரஸ் சர்க்கார் கருணையுடைய சர்க்கார் ஆகுமா? நீதியுடைய சர்க்காராகுமா? ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா முதலிய தேசங்கள் விற்பனை வரி வசூல் செய்தாலும் விற்பனை வரி விதியாமலே தேச நிருவாகத்தைச் செம்மையாக நடத்திக்கொண்டு போகும் எத்தனையோ தேசங்கள் இருக்கின்றனவே. அத்தேசங்களை காங்கிரஸ் மந்திரிகள் ஏன் பின்பற்றக் கூடாது? ஆகவே விற்பனை வரி சாமானிய ஜனங்களை பாதிக்கப்போவது உறுதி வரிகளை குறைத்து ஏழை எளியோருக்கு உதவி செய்யப் போவதாக தேர்தலுக்கு முன் கூறிய காங்கிரஸ்வாதிகள் காந்தியாரின் கிறுக்குத் தனங்களுக் களுக்காக ஏழை எளியோர் தலையிலே கை வைக்கப் போகிறார்கள். மஞ்சள் பெட்டிக்கு வோட்டுப் போட்ட மகராசர்களே! மகராசிகளே! இப்பொழுதாவது உங்கள் மூடத்தனத்தை நீங்கள் உணருகிறீர்களா?
குடிஅரசு, தலையங்கம் – 2.4.1939