20. காங்கரஸ்காரரின் பகிஷ்காரப் புரளி

பாபு சுபாஷ் சந்திரபோஸை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க காந்தி கோஷ்டியார் விரும்பாததின் காரணம் அறிய பலர் ஆசைப்படக்கூடும். ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் சமஷ்டி எதிர்ப்பிலும் மிக்க அக்கரை காட்டிவரும் சுபாஷ், காந்தி கோஷ்டியாருக்குப் புளிப்பாய் விட்டது பலருக்கு வியப்பாகவுமிருக்கலாம். ஆனால் காந்தியாருடையவும் அவரது வாலர்களுடையவும் தற்கால நிலையாகச் சரியாக உணர்ந்தவர்களுக்கு சுபாஷ் போஸை காந்தி கோஷடியார் வெறுப்பது ஆச்சரியமாகத் தோன்றாது. காங்கிரஸ் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஒரு காலத்திலே காங்கிரஸ்காரர் எதிர்த்த மாகாண சுயஆட்சித் திட்டத்தை சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு அமல்நடத்தி வருவதாய் காங்கிரஸ் சர்வாதிகாரியான காந்தியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மந்திரிகளும் மாகாண கவர்னர்களுடனும் சிவிலியன்களுடனும் வெகு அந்நியோந்நியமாக நடந்த தகராறுக்கு இடம் கொடுக்காமல் நிருவாகம் நடத்தி வருகிறார்கள்.

சுகாதார மந்திரி பல்லாண்டு

மாகாண கவர்னர் எங்கள் நண்பன், வழிகாட்டி, ஞானாசிரியர் என சென்னை மாகாண சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜனும் பல்லாண்டு பாடியுள்ளார். பிரிட்டிஷார் பொறுப்புணர்ச்சியுடையவர்கள். இந்தியாவை ஆள உரிமையுடையவர்கள் என தொழில் மந்திரி கனம் கிரியும் ஒரு சந்தர்ப்பத்திலே புகழ்மாலை பாடியுள்ளார். ஐரோப்பிய சிவிலியன்கள் குரோட்டன் செடிகளுக்கு ஒப்பானவர்கள், அவர்களுக்கு அதிகப்படியான சம்பளங்களும் கிம்பளங்களும் விசேஷ சலுகைகளும் அவசியந்தான் என கனம் ஆச்சாரியார் கூறியிருப்பதையும் உலகம் அறியும். மற்றும் சென்னை செயிண்டு ஆண்ட்ரூஸ் மது விருந்தில் கலந்துகொண்ட சென்னை பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் உத்தியோக முறையில் நடக்கும் விருந்துகளில் காங்கிரஸ்காரர் கலந்துகொள்ளக்கூடாது என்ற தடை ஒரு குருட்டு நம்பிக்கை எனக் கூறி ஐரோப்பியர்களின் பாராட்டைப் பெற்றிருப்பதையும் அனைவரும் அறிவர். புது வருஷ பிராக்ளமேஷன் கொண்டாட்டத்தில் கனம்களான விளம்பர மந்திரி ராமநாதனும் விவசாய மந்திரி முனிசாமிப்பிள்ளையும் ஸ்தலஸ்தாபன மந்திரி கோபால் ரெட்டியாரும் கலந்துகொண்டதும் யாவரும் அறிந்ததே.

சுபாஷ் நிலை

இவ்வண்ணம் காங்கிரஸ் மந்திரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் ஏகாதிபத்திய தூதர்களுடன் உறவு கொண்டாடி வருகையில் சுபாஷ் போஸ் நிலை எப்படியிருக்கிறது? ஐரோப்பாவிலே வெகு சீக்கிரம் ஒரு பயங்கரப்போர் உண்டாகப் போகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிக்க இதுதான் நல்ல தருணம். இந்த சந்தர்பத்தை நாம் கை நழுவ விடக்கூடாது. சமஷ்டியையும் நாம் எக்காரணம் கொண்டும் ஒப்புக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் சுபாஷ் போஸ் ஓயாமல் அவசுரம் பாடிக்கொண்டு இருக்கிறார். ஏகாதிபத்திய தூதர்கள் கருணா கடாட்சத்தினால் உத்தியோகம் நடத்தி வரும் காங்கிரஸ் மந்திரிகளுக்கும் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் சுபாஷ்போஸ் இவ்வாறெல்லாம் புலம்பிக்கொண்டிருப்பது பிடிக்குமா? ஒருநாளும் பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே காந்தி கோஷ்டியாரெல்லாம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுபாஷை எதிர்த்தார்கள்; அவர் காங்கிரஸ் தலைவர் ஆன பிறகும் அவரைக் கவிழ்க்க காந்தி கோஷ்டியார் சூழ்ச்சிகள் செய்து வருவதின் மர்மமும் இதுவே.

புத்தி வரல்லையா?

காந்தி கோஷ்டியார் கோபத்துக்கு ஆளாகி தமது பதவியை இழக்கும் நிலைமையை அடைந்த பிறகும் கூட சுபாஷ் போசுக்கு நற்புத்தி உதயமாகவில்லை. உத்தியோக முறையில் நடக்கும் விருந்துகளுக்கு காங்கிரஸ்காரர் செல்லக்கூடாதென்ற காங்கரஸ் தடை உத்தரவை மீண்டும் வற்புறுத்தி சுபாஷ் போஸ் இப்பொழுதும் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். உத்தியோக முறையில் நடைபெறும் விருந்துகளில் காங்கிரஸ்காரர் கலந்து கொள்வது சம்பந்தமான தடை இன்றும் அமலில்தான் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த விதியை மாற்றவோ தளர்த்தவோ, அல்லது வாபீஸ் பெறவோ இடமில்லை என்பதே எனது அபிப்பிராயம் என அந்த அறிக்கையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். 1937 பிப்ரவரி 27-ந் தேதியிலும் 1937 ஆகஸ்டு 14-ந் தேதியிலும் காரியக்கமிட்டி இது விஷயமாக நிறைவேற்றிய தீர்மானங்களையும் சுபாஷ் போஸ் காங்கிரஸ்காரர் பார்வைக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்.

காரியக்கமிட்டி தீர்மானங்கள்

1937 பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வார்தாவில் கூடிய காரியக்கமிட்டி இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தையோ அல்லது மதிப்பையோ உயர்த்தக்கூடிய எத்தகைய காரியத்துக்கும் உதவி செய்யவோ அல்லது அவ்விஷயத்தில் ஒத்துழைக்கவோ கூடாதென்னும் காங்கரஸ் கொள்கையை சட்ட சபை காங்கிரஸ் மெம்பர்கள் நினைவில் இருத்தவேண்டும். ஆகவே அது சம்பந்தமான உத்தியோக முறையான விருந்து வைபவங்களில் தனிப்பட்ட மெம்பர்கள் தாமாகவே எத்தகைய முடிவுக்கும் வரக்கூடாது. அவர்கள் விஷயத்தை அசம்பிளி காங்கிரஸ் கட்சித் தலைவருக்குத் தெரிவித்து அவர் முடிவுப் பிரகாரமே நடக்கவேண்டும் எனத் தீர்மானம் செய்திருக்கிறது. 1937- ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி மறுபடியும் வார்த்தாவில் கூடியபோது சட்ட சபைகளில் உள்ள காங்கிரஸ்கட்சிகளைச் சேர்ந்த எல்லா மெம்பர்களும் இதுவரையில் நடந்து வந்ததுபோலவே இனியும் கவர்னர்கள் வருதல், போதல், இவை சம்பந்தமான உபச்சாரங்கள் விஷயத்தில் நடக்கும் வைபவங்கள் முதலியவற்றில் கலந்து கொள்ளக்கூடாது. இவ்விஷயத்தில் அவமரியாதையோ அல்லது அவமதிப்போ கிடையாதென்றும் ஆகவே தங்களை அழைக்க வேண்டியதில்லை யென்றும் பிரதம மந்திரிகள் தெளிவுபடுத்திவிட வேண்டும்; உத்தியோகஸ்தர் களுடன் பூரணமாக ஒத்துழைத்து வேலை செய்வதே மந்திரிகளின் நோக்கமாயினும் விருந்துகள், தேக்கச் சேரிகள் முதலியற்றில் தாங்கள் கலந்துகொள்ள முடியாதென்பதையும் அவர்கள் தெளிவு படுத்திவிட வேண்டும். இந்நாட்டில் தாண்டவமாடி வரும் தரித்திரத்தை உத்தேசிக்கையில் அவர்கள் மேற்படி வைபவங்களில் பங்கெடுத்துக் கொள்வதற்கில்லை. எனவே அவர்கள் கண்டிப்பாக உத்தியோக சம்பந்தத்துடனேயே வேலை செய்யவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது.

மந்திரிகளுக்கும் உண்டு

மற்றும் இத்தீர்மானங்கள் காங்கிரஸ் மந்திரிகளையும் கட்டுப்படுத்தும் என சுபாஷ்போஸ் கூறுகிறார். ஆனால் நமது பிரதம மந்திரியார் செயிண்டு ஆண்ட்ரூஸ் விருந்தில் பங்கு கொண்டதையும் ஏகாதி பத்தியப் புகழ்பாடும் விருந்துகளில் காங்கிரஸ்காரர் கலந்துகொள்ளக்கூடாதென்று காங்கிரஸ் தீர்மானம் செய்திருப்பது ஒரு குருட்டு நம்பிக்கை எனக்கேலி செய்ததையும் யாரும் இதுவரைக் கண்டிக்கவும் இல்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுமில்லை. மற்றும் பிராக்ளமேஷன் பாரேடில் பங்குகொண்ட மூன்று மந்திரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தும் அதையும் எவரும் லக்ஷ்யம் செய்ததாய் தெரியவில்லை. மற்றும் சுபாஷ் போஸ் அறிக்கையில் காரியக் கமிட்டியின் வேண்டுகோளுக்கிணங்கி சிறிது காலத்துக்கு முன்பு ஒவ்வொரு வருஷமும் வருஷ ஆரம்பத்தில் நடக்கும் இராணுவ அணி வகுப்பில் கலந்துகொள்ளக்கூடாதென்று நான் குறிப்பிட்ட ஒரு மாகாணத்தின் காங்கிரஸ் மந்திரிகளுக்கு ஞாபகப்படுத்த நேரிட்டது எனக்குறிப்பிட்டிருக்கிறது. இது பிராக்ளமேஷன் பாரேடில் பங்கு கொண்ட சென்னை காங்கிரஸ் மந்திரிகளைப் பற்றியதாக இருக்குமோ? அப்படியானால் காங்கிரஸ் விதியை அவர்களுக்கு ஞாபகப்படுத்தியதுதான் தண்டனையா?

கேலிக்கூத்து

வீரப் பிரதாபங்களையெல்லாம் மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு காங்கிரஸ்காரர் பதவியேற்று ஏகாதிபத்தியத்துக்கு உதவி புரிந்து வருகையில் சுபாஷ் போஸ் பழைய பகிஷகாரப் பல்லவி பாடுவது கேலிக்கூத்தாகவே இருக்கிறது. மேலும் இந்நாட்டில் தாண்டமாடும் தரித்திரத்தை உத்தேசிக்கையில் காங்கிரஸ்காரர் மேற்படி வைபவங்களில் பங்கெடுத்துக்கொள்வதற்கில்லை என காங்கிரஸ் காரியக்கமிட்டி முடிவு செய்திருக்கையில் லக்ஷக்கணக்கில் செலவு செய்து காங்கிரஸ் மாநாடுகள் நடத்தலாமா? 51 யானைகள் பூட்டிய ரத ஊர்வலங்கள் நடத்தலாமா? காங்கிரஸ் தலைவர்கள உண்பது, உடுப்பது, உலாத்துவது, பேசுவது, ரயிலில் ஏறுவது இறங்குவது முதலிய திருக்கூத்துக்களைப் படம் பிடித்து பிரசுரம் செய்யலாமா? இவைகள் எல்லாம் வீண் ஆடம்பரங்கள் தானே! தரித்திர நாராயணனின் பேரைச்சொல்லிக்கொண்டு காங்கிரஸ் சர்வாதிகாரி யான காந்தியார் ராஜ வாழ்வு வாழ்ந்து வரலாமா? வாஸ்தவத்தில் காங்கரஸ்காரர் மெச்சும் செயலும் பாஸ்பர முரணான தாகவே இருக்கிறது.

குடிஅரசு, தலையங்கம் -9.4.1939

You may also like...