‘சர்வம் நிரந்தரம்!’
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்காக ‘பாரத தேசத்து’ குடிமக்களான வாக்காளர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் – அடுத்த பிரதமர் மோடி தானாம்; பா.ஜ.க. கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தானாம்; அமீத்ஷா ‘ஜீ’ அறிவித்து விட்டார். “தேர்தல் ஆணையமே; மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடு; வாக்கு எந்திரங்களை உடைத்து அதானி துறைமுகத்துக்கு பார்சலில் அனுப்பு” என்று அமீத்ஷா, விரைவில் அறிவிப்பார்.
எதற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பாழடித்து, ஒரு ‘தேர்தல்’ திருவிழாவை நடத்த வேண்டும்?அந்தப் பணத்தை இராமன் கோயிலில் போட்டாலாவது மக்கள் ‘சுபிட்சம்’ பெறுவார்களே என்கிறார்கள் சங்கிகள்.
அப்படியானால், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்றெல்லாம் விவாதங்களை தேர்தல் ஆணையம் ஏன் நடத்துகிறது என்று கேள்வி கேட்கக் கூடாது. தேர்தல் ஆணையம்
என்று ஒன்று ‘பரத கண்டத்தில்’ இராமன் காட்டிய வழியில் தேர்தலை எல்லாம்
நடத்திக் கொண்டிருக்கிறது, என்று உலக நாடுகளுக்கு படம் காட்ட வேண்டுமல்லவா? அதற்குத் தான்.
மோடி, நட்டா பதவிகள் உறுதியான நிலையில் தமிழ்நாட்டின் ஆளுநர் ‘ரவி’ பதவியும் உறுதியாகுமா? யாருக்குத் தெரியும்; ‘தினமலரைத்’ தவிர! அவர் தான் ஆளுநராகவும் நீடிப்பார் என்கிறது, அந்த ‘சங்கி’களின் ஏடு! பின்னர் எதற்கு டெல்லிக்கு ஓடியிருக்கிறார்? திடீரென்று, ‘தமிழகம்’ என்பதை கைவிட்டு, ‘தமிழ்நாடு ஆளுநர் பொங்கல் வாழ்த்து’ என்று, பல்டி அடித்திருக்கிறார்? “அதெல்லாம் ஆளுநர் பல்டி அடிக்கவில்லை; தமிழக அரசு தான் நடுங்கிப் போய் சமாதானக் கொடியைத் தூக்கி இருக்கிறது” என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறது, இந்த ‘பூணூல்’ ஏடு!
இப்போது ஆளுநரே தன்னிலை விளக்கம் தந்து விட்டார். ‘தமிழ்நாடு’ பெயரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசவில்லை என்று ஆளுநர் அறிவித்துள்ளார். அந்த விளக்கத்திலும் நேர்மை இல்லை. அரை உண்மை; அரை பொய் கலந்து நிற்கிறது. இந்த நிலையில் ‘தினமலரை’ எதைக் கொண்டு சாற்றுவது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
“அது சரி; அண்ணாமலை கதி என்ன? அவரும் நட்டாவைப்போல தமிழ்நாட்டின் பா.ஜ.க. நிரந்தரத் தலைவர் தானா என்று கேட்டால், நம்மிடம் பதில் இல்லை. ஒன்றை மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். நிரந்தரக் ‘காமெடி’யனாக அவரே நீடிப்பார். அந்த காமெடியன் பதவியை அவரிடமிருந்து பறிக்க எந்த சக்தியாலும் முடியாது. ஆதாரம் இல்லாமல் நாம் கூறவில்லை. சென்னையிலிருந்து திருச்சி சென்ற தனியார் விமானத்தில் பயணம் செய்யப் போன அவர், விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவுக்கான பட்டனை அழுத்தி விளையாடியிருக்கிறர்.
எந்த நேரத்தில் எதைச் செய்வார் எதைப் பேசுவார் என்று ஊகிக்கவே முடியாது. நாளைக்கு நெடுஞ்சாலையில் காரில் பயணம் போனால் காரை சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு சட்டையைக் கழற்றிக் கொண்டு குட்டிக்கரணம் போடலாம். தன்னை எதிர்த்த சொந்தக் கட்சிக்காரர்களிடம் ‘கமலாலயத்தில்’ ‘கட்டா குஸ்தி’ போடலாம். கட்சியையே கலைத்து விட்டு நான் தான், இனி நிரந்தரத் தலைவன் என்று கூட அறிவிக்கலாம்; யார் கண்டது?
நிரந்தர பிரதமர், நிரந்தர உள்துறை அமைச்சர்களை அறிவிக்கும் ஒரு கட்சியில் ஒரு நிரந்தர காமெடியன் மட்டும் மாநிலத் தலைவராக இருக்கக் கூடாதா என்ன?
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 19/01/2023 இதழ்