‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு
“பாவம்! பாவம்! அனாச்சாரம் பகவான் பிரசாதத்துலேயே மாமிசம் கலந்துடுச்சு! இது அடுக்குமா? எதுல கலப்படம்னு ஒரு விவஸ்தை வேண்டாமோ? இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் செய்யுறது? நேக்கு எதுவுமே பிடிக்கல” என்று பதறுகின்றன வைஷ்ணவ ஆன்மீக வட்டாரங்கள்.
“ஆபத்து வந்துடுச்சு, நாட்டுக்கே ஆபத்து, சங்கராச்சாரிகளே, வேதப் பண்டிதர்களே, முன்னாள், இன்னாள் ஏழுமலையான் அர்ச்சகர்களே! இதற்கு ஒரு பரிகாரம் காணுங்கள், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது தான் இந்த பாவம் நடந்திருக்கு. அவரை சிறையில் தள்ள ஆகமத்தில் ஏதேனும் விதி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்க” என்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு.
“ஆமாம்! அவா ஆட்சிக்காலத்திலே தான் இந்த அநியாயம் நடந்துடுச்சு, அப்பவே சொன்னேன்” என்கிறார் ரிட்டையர்டு தலைமை அர்ச்சகர்.
“ஓய் ஒன்றும் குடி முழுகிப் போயிடல நம்ம வைஷ்ணவ ஆகம ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் இதற்கு தீர்வு கண்டுட்டுடோம். அண்மையில் தான் சாமிக்கு மலையில் ‘பவித்ரோட்சவம்’ செய்து முடுச்சுருக்கோம். இது ஒன்றே போதும். ஏற்கனவே செய்த பாவம், இனி செய்ய போகும் பாவம் எல்லாவற்றிற்கும் இதில் பரிகாரம் அடங்கி இருக்கு. எல்லா தீட்டுகளையும் ஒரே அடியில் அடிச்சு நொறுக்கிடும். இதுதான் வேத மந்திர சக்தி. பயப்படாதேள் என்கிறார்கள் ஆகம சயிண்டிஸ்டுகள்.
கெட்டுப் போன உணவை விற்கும் ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து விடுகிறார்கள். கெட்டுப்போன பிரசாதத்தை வழங்கிய ஏழுமலையான் கோயிலை இழுத்து மூடவா முடியும். அதற்கு பரிகாரம் தானே செய்ய வேண்டும்?
சரி இருக்கட்டும்; சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையில் கீழ்கண்டவற்றையும் பரிசீலிப்பது நல்லது.
சப்ளை செய்யும் நெய் பரிசுத்தமானது என்பதை கோயில் நிர்வாகம் ஏன் கண்காணிக்கவில்லை. அதை பரிசோதிக்க ஏன் ஒரு சோதனைக் கூடத்தை ஏற்படுத்தவில்லை. சோதனைக்கு குஜராத்துக்குத் தான் ஓட வேண்டுமா? பகவான் காலுக்கு தங்கச் செருப்புப் போடும் கோயில் நிர்வாகம். பக்தர்களுக்கு பிரசாதத்தை சுத்தமாக வழங்க ஒரு சோதனைக் கூடத்தை அமைச்சா என்ன? வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ நெய் 700 ரூபாய். ஆனால் 300 ரூபாய்க்கு டெண்டர் போடுகிற கம்பெனிக்கு ஆர்டர் போகுது? அப்பவே இது கலப்பட நெய் என்பது இவர்களுக்கு தெரியாதா? நம்பி வரும் ஏழுமலையான் பக்தர்களை இப்படி புண்படுத்துவது நியாயம் தானா என்று புலம்புகிறார் ஒரு அப்பாவி பக்தர்.
நல்ல வேளை! மோசடி மகா விஷ்ணு சிறைக்குள் சிக்கிக் கொண்டார். வெளியே இருந்திருந்தால் போன ஜென்மத்தில் பக்தர்கள் செய்த பாவத்திற்குத்தான் இந்த ஜென்மத்தில் மாட்டுக் கொழுப்பு சாப்பிடுகிறார்கள் என்று ‘ஆன்மீகம்’ பேசியிருப்பார்.
தமிழ்நாட்டின் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பொங்குகிறார். “வாங்க! ஆஞ்சநேயனிடம் போய் முறையிடுவோம். வரும் 28ஆம் தேதி அங்கே தேங்காய் உடைத்து குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற பிரார்த்திப்போம் என்று அவசர அழைப்பு விடுகிறார். அதையாவது நல்ல தேங்காயாக பார்த்து வாங்க சொல்லுங்க சார். அதுவும் அழுகிய தேங்காயாக இருக்கப் போகுது.
“சைவர்கள் (அதாவது சைவ சித்தாந்தம் அல்ல; சைவ சாப்பாடு) சாப்பிடும் எல்லா இனிப்புகளிலுமே விலங்குக் கொழுப்புகள் தான் சேர்க்கப்படுகின்றன. எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் அவைதான் விற்கப்படுகின்றன. சைவ ஸ்வீட் கடைகள் என்று தனியாக ஒருசில கடைகள் இப்போது தான் வரத் தொடங்கியிருக்கின்றன. லட்டு ஒரு இனிப்பு தானே அதை சாப்பிடுவது மட்டும் என்ன பாவம் என்று கேட்கிறார் ஒரு பகுத்தறிவாளர். கேள்வி நியாயம் தான்.
”சார்! இது சாதாரன லட்டு இல்ல, ஆகம லட்டு! அதுவும் அய்யங்கார் கைகளால் மட்டுமே பிடிக்கப்படும் லட்டு. ஸ்மார்த்த பிராமணர்கள் கைப்பட்டாலே தீட்டாகிடும்” என்கிறார்கள் வைஷ்ணவ பக்தர்கள். கை சுத்தக்காரர்கள்!
கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் கூறும் சுத்தமான நெய் பசு மாடு என்னும் விலங்கிடம் கறக்கும் பாலில் இருந்துதானே எடுக்கப்படுகிறது. விலங்கு கொழுப்பை எதிர்க்கிறீர்கள். விலங்குவின் பால், நெய், கோமியம் மட்டும் உங்களுக்கு புனிதமா? பதறாதீர்கள்! பதில் சொல்லுங்கள்!
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்