கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

ஜாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி, இயக்குனர் வீரமுருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 22.08.22 திங்கள் காலை சென்னை காவல் ஆணையர்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

கிடுகு (சங்கிகளின்கூட்டம்) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் வீரமுருகன் என்பவர் இயக்கத்தில்  இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதில் சில காட்சிகளில் தமிழ்நாட்டு அரசின் திராவிட மாடல் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்திக் காட்டும்படியான காட்சிகளும் குறிப்பிட்ட மதங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ‘ராமசாமி நாயக்கருக்கு’ எதுக்கு சிலை என்று வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று ஒருவர் ஆவேசமாகப் பேசி, தமிழ் மண்ணை காவி மயமாக்காமல் விட மாட்டேன் என்று வன்முறையை தூண்டுகிறார். காவல்துறை அதிகாரி ஒருவரே ‘திராவிடன்’ என்ற சொல்லை ஏளனம் செய்கிறார். பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும், தாலியை பெண்கள் அகற்றுவதை கொச்சைப்படுத்தும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

சட்டம் ஒழுங்கிற்கு பிரச்சனை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை கெடுத்து, பொதுஅமைதியை சீர்குலைக்கும் நோக்கோடு வெளியிடப்பட உள்ள “கிடுகு” எனும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மத மற்றும் ஜாதி மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் அதன் தயாரிப்பாளர் ராமலட்சுமி மீதும், இப்படத்தை இயக்கும் வீர முருகன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள் கிறோம் என விண்ணப்பத்தில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இந்திகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, சுகுமார், வேழவேந்தன் ராஜேஷ்  ஆகியோர் பங்கேற்றனர். உமாபதி செய்தியாளர்களிடம் படத்தின் உள்ளடக்கத்தை விளக்கினார்.

பெரியார் முழக்கம் 25082022 இதழ்

You may also like...