முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’
500 ஆண்டுகளுக்கும் மேலான முகலாயர் ஆட்சியில் இந்துக்களை அழித்தொழிப்பு செய்தார்கள் அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார்கள் என்பதுதான் இந்துத்துவ ஆராய்ச்சி யாளர்களின் முதன்மை குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் இந்துக்களே பெரும் பான்மையாக இருந்தார்கள் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதிப் படுத்துகிறது.
இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியைத் திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாகவும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள். இரண்டிலும் உள்ள உண்மை என்பது குறித்து “ஃபிரன்ட்லைன்” இதழில் சாம்சுல் இஸ்லாம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்க முதல்பகுதி கடந்த வார இதழில் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாவது மற்றும் நிறைவுப்பகுதி இதோ…
பவுத்தர்களைக் கொன்று, பவுத்த மற்றும் ஜைன வழிபாட்டு தலங்களை அழித்தொழிக்கும் பணிகளில் புஷ்யமித்ர சுங்கன் ஈடுபட்டார். திவ்யவதனா என்ற பவுத்த சமஸ்கிருத ஆவணத்தில் இதற்கு சான்றுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா குறிப்பிடுகிறார். இதுதொடர்பாக 2018ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பில், “புஷ்யமித்ர சுங்கன் பெரும் படையைத் திரட்டிச்சென்று பவுத்த தூபிகளை அழித்தார். மடங்களை எரித்தார். சகலா வரை சென்று (தற்போதைய சியால்கோட்) துறவிகளை கொன்றார். வேதங்களை எதிர்ப்போரின் தலையை வெட்டி வரச்சொல்லி 100 தினார்களை பரிசாக அறிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பனர்களும் வேதத்தை எதிர்த்தவர் களும் தீவிர எதிராளிகளாக இருந்தனர் என மகாபாஷ்யத்தில் பதஞ்சலி கூறியிருப்பதையும் டி.என்.ஜா சுட்டிக்காட்டுகிறார். இந்த கட்டுரைத் தொகுப்பு 2018ஆம் ஆண்டு கேரவன் இதழில் “பண்டைய புத்த தளங்களின் அழிவு” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்துத்துவ பரப்புரைகள் அனைத்தும் சீக்கிய குருக்கள் மற்றும் அவர்களை பின்பற்றியவர்கள் முகலாய ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டதாக, இன்றைய முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்ப பயன்படுத்தப்படுகிறது.
1704-இல் நடைபெற்ற ஆனந்த்பூர் சாஹிப் பின் கடைசி முற்றுகை குறித்து றறற.ளiமானாயசஅய. டிசப/4-ளடிளே-டிக-பரசர-படிbiனே-ளiபோ/ என்ற வலைப் பக்கத்தில் முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இறுதிகட்ட மோதலின்போது முஸ்லிம் மற்றும் இந்து மலை மன்னர்கள் நகரத்தை முழுவதுமாக சுற்றிவளைத்து துண்டித் தனர். சீக்கியர்கள் முகலாய படையெடுப்பாளர் களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்களான பாபா ஜோராவர் சிங் (9), மற்றும் பாபா ஃபதே சிங் (7) ஆகியோர் குழப்பத்தால் குழுவிலிருந்து பிரிக்கப் பட்டனர்.
கோவிந்த் சிங்கின் தாயாரான குஜ்ரியுடன் அவர்கள் கரடு முரடான காட்டில் நடந்துச் சென்று ஒரு சிறு கிராமத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கோவிந்த் சிங்கின் வீட்டில் சமையல் பணிகளை கவனித்து வந்த கங்கு அங்கு செல்கிறார். அங்கிருந்து கிளம்பி தனது கிராமத்திற்கு செல்லுமாறு அவர்களை வற்புறுத்திய கங்கு, அக்கறையோடு கூறுவதாக காட்டிக் கொண்டார். ஆனால் அவரின் இதயம் துரோகத்தால் இருண்டு கிடந்தது. வாட்டி வதைத்த குளிர், ஈரப்பதம், தனிமையில் இருந்து தப்பிக்க பேரன்களை அழைத்துக்கொண்டு செல்வதாக குஜ்ரியும் ஒப்புக் கொண்டு கிளம்பினார். சில தங்க நாண யங்களுக்காக அவர்கள் இருக்கும் இடத்தை முகாலயர்கள் படைகளுக்கு காட்டிக் கொடுத்தார் கங்கு. குஜ்ரியும், 2 பேரன்களும் தங்கியிருந்த வீட்டின் கதவுகள் விடியற்காலை யில் தட்டப்பட்டன. முகலாய ஆட்சியாளர் வசீர் கானின் படையினர் மூவரையும் சர்ஹித்திற்கு அழைத்துச்சென்றனர். இத்தகைய துரோகத்தை செய்த சமையல் பணியாளர் கங்கு ஒரு காஷ்மீர் பண்டிட். மூவரையும் அழைத்துச் செல்லும்போது மக்கள் வெகுவாக திரண் டிருந்தனர். பார்ப்பனர் கங்குவின் துரோகத்துக்கு எதிராகவும், முகலாய ஆட்சியாளர் வசீர் கானுக்கு எதிராகவும் முழங்கினர்.
வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்கார், வங்காள – முஸ்லிம்கள் கால வரலாற்றை எழுதியுள்ளார். மராத்திய ஆட்சியாளர்களால் வங்காள இந்துக்கள் அனுபவித்த துன்பங்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத் துயரங்களை நேரில் கண்ட கங்காராம் என்பவரின் பதிவும் இடம்பெற்றுள்ளது. மராத்தியர்கள் தங்கம், வெள்ளியை பறித்துக் கொண்டனர். சிலரது கைகளை வெட்டி னார்கள். காது மற்றும் மூக்கை அறுத்தனர். சிலர் கொல்லப்பட்டனர். பெண்களை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினர்” என்றார்.
வரலாற்று தரவுகளின்படி அவுரங்கசீப் ஆட்சிக் காலமானது, ராஜபுத்திரர்கள், சத்ரியர்கள் உள்ளிட்ட உயர்ஜாதி இந்துக்களின் பிற உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்த ஆட்சியாகவே இருந்தது என்பதை அறிய முடிகிறது. போர்க்களத்தில் சிவாஜியை அவுரங்கசீப் நேரடியாக எதிர் கொண்டதில்லை. ராஜபுத்திர ஆட்சியாளரான அமேர் தனது தளபதி இரண்டாம் ஜெய் சிங்கை (1688-1743) சிவாஜியை வீழ்த்த அனுப்பிவைத்தார். அவருக்கு அவுரங்கசீப் 1699-இல் சவாய் என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். இதனால் அவர் மகாராஜா சவாய் ஜெய் சிங் என அறியப்பட்டார். இளவரசருக்கான பாரசீக பட்டமான மிர்சா ராஜா பட்டத்தையும் அவுரங்கசீப் அவருக்கு வழங்கினார். இவை மட்டுமல்ல சர்மத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் (இந்தியாவின் சிறந்த ஆட்சியாளர்), ராஜ் ராஜேஸ்வர் (அரசர்களின் அதிபதி), ஸ்ரீ சாந்தனு ஜி (முழுமையான மன்னர்) உள்ளிட்ட பட்டங்கள் பிற முகலாய ஆட்சியாளர்களாலும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டங்கள் இன்றும் அவரது சந்ததி யினரால் காட்டப்படுகிறது.
ஷாஜகான் மற்றும் அவுரங்கசீப் அரசில் முதன்மை அமைச்சராக இருந்தவர் ராஜா ருக்நாத் பகதூர். இவர் காயஸ்தர் என்ற சமூகத்தை சேர்ந்தவர். அவரது வழித் தோன்றல்களில் ஒருவர் ராஜா ருக்நாத் பகதூரின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியுள்ளார்.
“ராஜா ருக்நாத் பகதூர் உயர் பதவியை அடைந்துவிட்டார் என்பதால், தனது ஜாதியின் நலன்களைப் பற்றி அவர் கவலைப்படாமல் இல்லை. ராஜா ஒவ்வொருவரையும் அவரவர் தகுதிக்கேற்ப கௌரவப் பதவிகளுக்கும், ஊதியங்களுக்கும் நியமித்தார்; பலருக்கு அவர்களின் சேவைகளுக்காக கௌரவப் பட்டங்களும் மதிப்புகளும் வழங்கப்பட்டன. ஒரு காயஸ்தரும் வேலையில்லாமல் அல்லது தேவைப்படும் சூழ்நிலையில் இருக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் கவுரவ மாஜிஸ்திரேட்டாக இருந்த ராய் ஜீவன் லால் பகதூரின் வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த குறிப்பில் இருந்து இத் தகவல்கள் கிடைத்துள்ளன. 1857 காலகட்டத் தில் நடந்த கலகங்கள் குறித்து இவரது குறிப்புகள் விவரிக்கின்றன. சொந்த ஜாதி யினருக்கு ஆதரவாக இருந்த ஒரு அமைச்சரை முகலாய மன்னர் ஆதரித்திருப்பதைத்தான் இவைக் காட்டுகின்றன.
500 ஆண்டுகளுக்கும் மேலான முகலாயர் ஆட்சியில் இந்துக்களை அழித்தொழிப்பு செய்தார்கள் அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார்கள் என்பதுதான் இந்துத்துவ ஆராய்ச்சியாளர்களின் முதன்மை குற்றச் சாட்டாக உள்ளது. ஆனால் இந்துக்களே பெரும்பான்மையாக இருந்தார்கள் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதிப்படுத்து கிறது. ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் 1871-72-இல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முகலாயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்ட காலம் அது.
அப்போது இந்தியாவின் மக்கள் தொகை 40.5 கோடி. அதில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் 73.5 விழுக்காடு. முகமதியர்கள் 21.5 விழுக்காடு. பவுத்தர்கள், ஜெயினர்கள், கிறித்தவர்கள், பார்சீகள் உள்ளிட்ட எஞ்சியவர்கள் 5 விழுக்காடு. கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தும் மதமாற்றம் நடைபெறவில்லை. இந்துக்களை அழிப்பதோ, மதமாற்றம் செய்வதோ முகலாயர்களின் நோக்கமாக இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி இந்துக்கள் 79.80 விழுக்காடாகவும், இஸ்லாமியர்கள் 14.23 விழுக்காடாகவும் உள்ளனர்.
அவுரங்கசீப் அல்லது பிற முஸ்லிம் ஆட்சி யாளர்களின் குற்றங்களை அவர்களின் மதத்தோடு இணைப்பது ஆர்.எஸ்.எஸ்.ஸால் விவரிக்கப்படும் இந்து வரலாற்றின் பதிப்புக்கும் சேர்த்தே கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில், கௌரவர்கள், புஷ்யமித்ர சுங்கன், இரண்டாம் ஜெய் சிங், மராட்டிய மன்னர்கள், கங்கு பார்ப்பனர்கள் போன்றோரின் குற்றங்களை, அவுரங்கசீப் மற்றும் பிற இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு சொல்வது போல அவரவர் மதத்துடன் இணைத்து பேசினால் நிலைமை மோசமாக மாறும். கடந்த கால தவறுகளுக்காக தற்போதைய சந்ததி யினரைப் பழிவாங்க வேண்டுமென்றால் இந்திய நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே மீண்டும் தொடங்க வேண்டும். அதில், இந்திய முஸ்லிம் களின் முறை பின்னர் வரும்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவினர் ஒரு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளும் சூழலையே இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன. அவர்களுடன் சேர்ந்து, இந்தியர்களில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்துவதால், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்த நாட்டை ஒழிக்க எந்த வெளிநாட்டு எதிரியும் தேவைப்பட மாட்டார்கள்.
(கட்டுரையாளர் சாம்சுல் இஸ்லாம் மத தேசியவாதம் குறித்த ஆராய்ச்சியாளர்,
டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பயிற்றுநர்)
தமிழில்: ர. பிரகாஷ்
பெரியார் முழக்கம் 11082022 இதழ்