ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88% தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

“தமிழர்களின் நிலையை எடுத்துக்கூற ஒரு பத்திரிக்கை கூட இல்லையே” என்று பெரியார் 1925இல் குடிஅரசு இதழைத் தொடங்கினார். தொடர்ந்து ரிவோல்ட், பகுத்தறிவு, புரட்சி, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களையும் பெரியார் தொடங்கி சமூக இழிவுகளை எளிய மக்களிடம் கடத்தினார்.

இந்திய ஒன்றியத்தில், அச்சு, தொலைக் காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் (ஆங்கிலம், இந்தி) 88% உயர் பதவிகளில், உயர் ஜாதியினர் மட்டுமே பதவியில் உள்ளனர்.  புள்ளி விவரங்களுடன் கட்டுரை அதை விளக்குகிறது

கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் (அதாவது அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்களின்) தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில்தான் இருக்கின்றன. 2021-2022ஆம் ஆண்டின் நிலை இது. 2018-2019ஆம் ஆண்டின் நிலையிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்பாம் இந்தியா (Oxfam India) – நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) இணைந்து “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Media” என்ற தலைப்பில் ஏப்ரல் 2021 – மார்ச் 2022 காலகட்டத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் நமக்கு இதைத் தெரிவிக்கிறது.

முக்கியமான அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் 218 தலைமைப் பதவிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 191 (88%) தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கரங்களில் இருக்கின்றன. தலித் மற்றும் பழங்குடி யினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.

2018-2019ஆம் ஆண்டின் போது 121 தலைமைப் பதவிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 106 (88%) தலைமைப் பதவிகளில் உயர் சாதியினரிடம் தான் இருந்தன. இந்த ஆய்வானது அக்டோபர் 2018 – மார்ச் 2019 காலகட்டத்தில் நடத்தப்பட்டது.

நெறியாளர்கள், கட்டுரையாளர்கள் என அனைத்து நிலைகளிலும் உயர்சாதியினரின் ஆதிக்கமே நீடிக்கிறது.

அச்சு ஊடகங்கள் : அச்சு ஊடகங்களில் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செய்தித் தாள்களில்) எழுதப்படும் கட்டுரைகளில் 60% கட்டுரைகள் (அதாவது ஐந்தில் மூன்று) உயர்சாதியினரால் எழுதப்படு கிறது. வெறும் 10% கட்டுரைகள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் (Other Backward Classes) எழுதப்படுகிறது. தலித் மற்றும் பழங்குடியினரால் 5 சதவீதத்திற்கும் குறைவான கட்டுரைகளே எழுதப்படுகின்றன.

சஞ்சிகைகளை எடுத்துக் கொண்டால் பாதிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உயர் சாதியினராலேயே எழுதப்படுகின்றன. சஞ்சிகைகளில் பணியாற்று பவர்களை எடுத்துக் கொண்டால் 10 சதவீதத்திற்கும் குறை வானவர்களே தலித்துகளாக உள்ளனர். பழங்குடியினரின் பிரதிநிதித் துவம் சஞ்சிகைகளில் குறிப்பிடும்படியாக இல்லை அல்லது முற்றிலு மாகவே இல்லவே இல்லை (0%) என்ற அவல நிலைதான் நீடிக்கிறது.

தொலைக்காட்சி : ஆங்கில செய்தி சேனல் களைப் பொறுத்தவரை 55.6% தொகுப்பாளர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். 11.1% தொகுப்பாளர்கள் மட்டுமே OBC பிரிவைச் சார்ந்தவர்கள். SC மற்றும் ST வகுப்பை சார்ந்தவர்கள் ஒருவர் கூட தொகுப்பாளராக இல்லை.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செய்தி நிறுவனங்களின் பிரைம் டைம் விவாத நிகழ்ச்சிகளில்கூட 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்சாதியினர் தான் பங்கெடுக்கின்றனர். SC மற்றும் ST வகுப்பினரைப் பொறுத்தவரை வெறும் 5 சதவீதத்துக்கு குறைவானவர்களே விவாதங்களில் பங்கேற்கத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

டிஜிட்டல் ஊடகங்கள் : டிஜிட்டல் ஊடகங் களைப் பொறுத்தவரை EastMojo, Firstpost, Newslaundry, Scroll, The Wire, the News Minute, Swarajya, the Mooknayak மற்றும் the Quint ஆகிய 9 ஊடகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில், Newslaundry English -ன் 68.5% கட்டுரைகளும், Firstpost -ன் 61% கட்டுரைகளும், Scroll -ன் 54% கட்டுரை களும், The Wire -ன் 50% கட்டுரைகளும் உயர்சாதியினரால் எழுதப்படுபவை. Mooknayak இல் மட்டும்தான் பெரும் பான்மையான கட்டுரைகள் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களால் எழுதப்படுகின்றன.

இந்த ஆய்வு குறித்துப் பேசிய ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் பெஹர் (Amitabh Behar) கூறியதாவது: “கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான எங்களது இரண்டாவது அறிக்கை இது.

இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் நாட்டில் உள்ள பெரும்பான்மையான விளிம்புநிலை மக்களை உள்ளடக்கிய இடம் அல்ல என்பதை இது காட்டுகிறது. தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் ஊடகங்கள் தோல்வியடைந் துள்ளன. நாட்டில் உள்ள ஊடகங்கள் சமத்துவம் என்ற அரசியலமைப்புக் கோட்பாட்டை அதன் செய்திகளில் மட்டுமல்ல, அதன் பணியமர்த்தல் நடைமுறைகளிலும் நிலைநிறுத்த வேண்டும்”.

செய்தி விவாதங்களில் அடித்தட்டு உழைக்கும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏன் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இந்திய ஊடகங்கள் யாருடைய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கும் இந்த ஆய்வு ஒரு துலக்கமான சான்றாகும். அவை சங்பரிவாரங்களின் ஊதுகுழலாகச் செயல்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை!                                          – வினவு

 

பெரியார் முழக்கம் 10112022 இதழ்

You may also like...