ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு – ‘சொர்க்கம்’ போவதற்கு அல்ல; தீண்டாமை ஒழிப்புக்கே மதம் மாறச் சொன்னார் பெரியார்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை.

  • இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இங்கே வந்திருந்தால் கேள்விகளைக் கேளுங்கள்; நாங்கள் பதிலளிக்கத் தயார்.
  • எங்களைப் போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்றும் தீண்டாமை ஒழிவதற்கு மட்டும் இஸ்லாமில் சேரலாம் என்பதே நான் கூறும் கருத்து என்றும் கூறினார் பெரியார்.
  • பொது மேடைகளில் பேசும் இஸ்லாமியர்கள்கூட மத மறுப்பாளர்களான எங்களுக்கும்இறைவனின் ஆசி கிடைக்கும் என்று பேசும்போதுகூட நாங்கள் அனுமதித்தே வந்திருக்கிறோம்.

தோழர் ஃபாரூக், கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாட்டாளர். அவர் கொடூரமாக மத அடிப்படைவாதிகளால் மார்ச் 16, 2017இல் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பிப்.19 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் 5ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் நடைபெற்றது. ஃபாரூக் கடவுள், மத, இறை மறுப்பாளர்; இஸ்லாத்தின் இறையியல் கொள்கையை உறுதியாக மறுத்தவர். ‘வாட்ஸ் அப் குழு’ ஒன்றை உருவாக்கி அதன் வழியாக மதப் பிடியிலிருந்து இஸ்லாமியர்கள் வெளி வர வேண்டும் என்ற அறிவியலைப் பரப்பியவர். அதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்டார். இஸ்லாத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை ஃபாரூக் கொலை வழியாக அடிப்படைவாதிகள் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுப்பதற்கே ஃபாரூக்கை பலியாக்கினார்கள். தமிழ்நாட்டில் இப்படி எச்சரிக்கை செய்வதற்காக நடந்த முதல் கொலை இது தான். பார்ப்பனிய சனாதன சக்திகள் இஸ்லாமிய சமூகத்தை எதிரிகளாகக் கட்டமைத்து சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் சூழலில் நாம் அதை முறியடித்து அவர்களோடு கைகோர்த்து நிற்கிறோம். அதே நேரத்தில் அடிப்படை வாதம் ஃபாரூக் உயிரைப் பறித்ததையும் அழுத்தமாக கண்டிக்கிறோம். இந்த இரண்டு செய்திகளையும் உணர்த்துவதற்காகவே கடந்த 5 ஆண்டுகளாக ஃபாரூக் நினைவு நாளை மதங்களின் பிற்போக்குத்தனத்தை, சமூக வளர்ச்சிக்கு தடைச் சுவராக நிற்பதை விளக்கும் கருததரங்குகளை நடத்தி வருகிறோம்.

இஸ்லாமிய அமைப்புகளோடு நாம் வைத்துள்ள உறவு என்பது இப்போது அல்ல பெரியார் காலத்திலிருந்தே எப்படி இருந்தது என்று நமக்குத் தெரியும், 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டிலேயே நபிகளின் பிறந்தநாள் விழாவிற்கு சத்தியமங்கலத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு பெரியாரை அழைத்து இஸ்லாமியர்கள் பேச வைக்கிறார்கள். அப்போது பெரியார் பேசுகையில் கூறுகிறார் மிகவும் சிறப்பாக முற்போக்காக நடந்தது இந்த நிகழ்ச்சி, அப்படிப்பட்ட ஒரு மார்க்கம் இது. ஆனால் உங்களிடம் எனக்கு ஒரே ஒரு குறை உள்ளது. நீங்கள் “மனிதனை விட மதமே பெரிது என்று கூறுகிறீர்கள்” அந்த ஒரு குறை தான் உங்களிடம் எனக்கு தெரிகிறது வேறொன்றுமில்லை. பெரியார் அப்போது சொன்ன இந்த குறை இன்றளவும் நடைமுறையில் மாறவில்லை என்பதை நாம் இப்போதும் பார்க்கிறோம். மனிதனை விட மதம் பெரிது என்று நினைத்தவர்கள் தான் இந்தக் கொடூரத்தை செய்தார்கள் என நாம் அறிவோம். ஆனால் இப்போது புதிய புரட்சிக்காரர்கள் உருவாகி இருக்கிறார்கள். புரட்சிகர இயக்கத்தில் இருந்து வந்த ஒருவர் சொல்லுகிறார் அவர் குடிபோதையில் தகராறு செய்து கொலை செய்துவிட்டார் என்றும், இன்னொருவர் சொல்கிறார் ஏதோ தொழில் மோசடியில் கொலை செய்துவிட்டார் என்றும் பேசுகிறார்கள்.

அப்போதும் இப்போதும் இந்த ஒரே கேள்வியை எழுப்புகிறேன்.  சாதாரணமாக ஒரு இஸ்லாமியர் மரணத்திற்கு எவ்வளவு இஸ்லாமியர்கள் வந்திருக்க வேண்டும் அதுவும் கோவை மாவட்டத்தில். ஆனால் இவர் கொலை செய்யப்பட்டு உடல் அந்த மருத்துவமனையில் வைத்திருந்தபோது அங்கு கூடியிருந்த 400 பேரில் 10 விழுக்காடு கூட இஸ்லா மியர்கள் இல்லையே அது ஏன் என்று கேட்டோம் ? சாதாரணமாக ஒரு அடி தடியில் அல்லது தகராறில் ஈடுபட்டு கொலை செய்யப்பட்டு விட்டான் அல்லது எப்படியோ இறந்து விட்டான் என்றா லும்கூட மிகக் குறைந்த அளவில் வந்தார்கள். பெரும் திரளாக திரண்டு வரும் இஸ்லாமியர்கள், ஒரு வேளை அந்த இறப்பிற்கு சென்றாலே நாமும் ஃபாரூக்கின் கொள்கையை ஏற்றுக் கொண்ட இஸ்லா மியர்களாக தெரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தான் அவர்கள் வரவில்லை இதனால்தான் அவர்கள் வராமல் தடுக்கப் பட்டனர். அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது இது மதத்தின் காரணமாக அவர் நாத்திகம் பேசியதற்காக செய்யப்பட்ட கொலை தான் என்று இஸ்லாமியர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போது இஸ்லாமியர்களுக்கு துணை போகிற புரட்சிக்காரர்கள் தான் இதை பேசிக் கொண் டிருக்கிறார்கள். நமக்கு அது வருத்தமான செய்திதான். இன்னொன்று அரசியல் வெளியில் பல நிகழ்ச்சிகளில் நாம் இஸ்லாமிய அமைப்புகளோடு சேர்ந்து கலந்து கொண்டு இருக்கிறோம். இந்திய துணைக் கண்டத்தின் பெரும் கேடாக இருக்கிற இந்துத்துவத்தை எதிர்த்து நிற்பதற்காக, சமூக அமைதிக்கு சிறுபான்மையினர் இருப்புக்கே சவாலாக இருக்கின்ற அவர்களுக்கு எதிரான போராட்டங்கள், கூட்டங்கள் அல்லது எதுவாக இருந்தாலும் அதில் நாம் நிலைத்து இருக்கின்ற போது பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் பக்கம் நாம் நிற்கிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் முழு மனதோடு தான் இருக்கிறோம். பெரியாரிய தோழர்கள் நாத்திகர்கள் தான். இறை நம்பிக்கை அற்றவர்கள் ஆனால் இஸ்லாமியர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள் தான். ஆனால் பொது மேடைகளில் கலந்து பொதுவான நிகழ்ச்சிகளில்கூட தங்களது இறைநம்பிக்கை சிந்தனையை அப்படியே வைத்துக் கொண்டு அந்தப் பொது மேடையிலேயே நமக்கெல்லாம் சேர்த்து கூட அவர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். கருணை மிக்க கடவுளின் அருள் நம் மீதும் பொழியட்டும் என்று சொல்வார்கள். அதையெல்லாம் நாம் அனுமதித்துக் கொண்டும், அதே நேரத்தில் நாத்திக சிந்தனையை நாம் கைவிடாமல் வைத்துக் கொண்டு இருந்தாலும் அந்த பொதுவான மேடையில் எப்போதும் நாம் அந்த கருத்தை மறுத்துப் பேசாமல் இருந்தோம். நாமும் மறுத்துப் பேசியிருக்கலாம் இல்லாத கடவுளைப் பற்றி அவர் பேசினார் ஆனால் இருக்கின்ற மனிதர்கள் ஆசியில் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று நாமும் பேசி இருக்கலாம். ஆனால் அப்படி ஒருபோதும் பேசியது இல்லை. நாம் எப்போதும் இயல்பாக தோழர்களே நண்பர்களே என்று கூறிக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி தான் உறவுகளைப் பேணி வைத்திருக் கிறோம்.

பெரியாரிய இயக்கங்கள் தன் கருத்து எதுவாக இருந்தாலும் பொதுவான மேடைகளில் பிறரைக் காயப்படுத்தாமல் சின்ன சின்ன முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் வெளிப்படையாக எதையும் பேசாமல் தான் நிறைய உறவுகளை பேணி வைத்திருக்கிறோம்.

காணொளி குலுக்கையில் பார்க்க

(தொடரும்)

பெரியார் முழக்கம் 24032022 இதழ்

You may also like...