மயக்க மருந்து இல்லாது மனவசியம் செய்து, அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? எட்வின் பிரபாகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியம் போலி அறிவியல் வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு (4)
‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.
புதிர் 6: ராபர்ட் எம். மில்லெர் என்ற விஞ்ஞானி தன்னுடைய தோட்டத்தில் புற்களை வளர்த்தார். பிரார்த்தனை களுக்கு சக்தி உண்டா? என்பதை அறிய ஒரு சோதனையை நடத்தினார். பிரார்த்தனைக்கு பேர் போன ஒல்க வோரல் & அம்புரோசு தம்பதியினரை தன் வீட்டில் பிரார்த்தனை செய்ய அழைத்தார். அவர்கள் பிரார்த்தனை செய்யாத நேரத்தில் 0.00625 அங்குலம் வளர்ந்த புற்கள், பிரார்த்தனை செய்யும் போது, 0.0525 அங்குலம் வளர்ந்ததைக் கண்டார். பிரர்த்தனைக்கு சக்தியுண்டு என்பதை உணர்ந்து கொண்டார்.
விடை: முதலில் இது நடந்த சம்பவமா? கற்பனையா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எப்படி யிருப்பினும், தாவரங்களின் வளர்ச்சி எவற்றை சார்ந்து உள்ளது என்பதை இங்கு காண்போம். பொதுவாக, ஒரு தாவரத்தின் வளர்ச்சி, ஒளி, நீர், தட்ப வெப்பநிலை, சத்துப் பொருள்கள் போன்றவற்றை சார்ந்து தான் இருக்கிறது. பிரார்த்தனையினால் தாவரம் வளர்ந்ததாக எந்த ஒரு ஆய்வு அறிக்கையும் இல்லை. ஒருவேளை மேற்கூறிய சம்பவம் உண்மையாக நடந்திருந்தால், அதற்கு வேறு சில அறிவியல் காரணங்கள் இருக்கலாம். தாவரங்கள், பொதுவாக மாலை & இரவு நேரங்களில் அதிகமாக வளர்கின்றன. அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்தால், தாவர வளர்ச்சிக்கு பிரார்த்தனை தான் காரணம் என்று தவறாக முடிவெடுக்க வேண்டி யிருக்கும். அதேபோல், சில தாவரங்கள் ஒலியைச் சார்ந்து வளர் கின்றன. “Research in Plant Diseases” (தாவர நோய்களில் ஆராய்ச்சி) என்ற ஆய்விதழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “Update on the effects of sound wave on plants” என்ற ஆய்வறிக்கையில், குறிப்பிட்ட மாதிரி யான ஒலியை எழுப்புவது, சில தாவரங் களின் வளர்ச்சிக்கு பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பிரார்த் தனையின் போது, குறிப்பிட்ட ஒலியால் வளரக் கூடிய தாவரமாக அந்த புற்கள் இருந்திருந்தால், ஒலியினால் வளர்ந் திருக்குமேயன்றி பிரார்த்தனையால் வளர்ந்திருக்க முடியாது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
புதிர் 7: ஜேம்ஸ் எஸ்டெய்ல் (1808 – 1859) என்ற அறுவை சிகிச்சை நிபுணர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது, மயக்க மருந்து இல்லாமல், hypnotism (அறிதுயில் நிலை – மன வசியம்) மூலம் நோயாளி களை அரை மயக்க நிலையடையச் செய்து அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தவர். மனவசியத்துக்கு இன்று வரை எந்த அறிவியல் விளக்க மும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத் தானே மன வசியம் செய்துகொண்டவர்.
விடை: ஜேம்ஸ் எஸ்டெய்ல் செய்த மன வசியத்தின் பலன் எதுவும் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப் படவில்லை. எனவே, அது மிகவும் பலனளிக்க வல்லது என்று கூற முடியாது. இன்று வரை, hypnotism (அறிதுயில் நிலை) என்பதை ஒரு பெரும்பயனுள்ள முறை என்று நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லை. எனவே, மன வசியம், மாற்று மருத்துவத்தின் பகுதி யாகத் தான் பார்க்கப்படுகிறது. எனவே, மனவசியத்தை பற்றிய மிகைக்கூற்றை ஏற்க முடியாது. அதுவும், ரமண மகரிஷி இதை செய்தார் என்று நம்புவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. தனது சொத்துக்களையெல்லாம் குடும்பத்தினருக்கு எழுதி வைத்துவிட்டு புற்று நோயால் மரணமடைந்தவர் ரமணரிஷி.
(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)
(தொடரும்)
பெரியார் முழக்கம் 21042022 இதழ்